திங்கள், 14 ஜனவரி, 2019

BBC :கொடநாடு கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைக்க ஆளுநரிடம் திமுக கோரிக்கை

ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் நடந்ததாகக்
கூறப்படும் கொலைகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் பதவி விலக வேண்டுமென்றும் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் தி.மு.க. புகார் மனு அளித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் அவரது ஓய்வில்லமாக இருந்த கொடநாடு மாளிகையில் கடந்த ஆண்டு திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றது. இதில் அந்த மாளிகையின் பாதுகாவலர் கொல்லப்பட்டார். இதற்குப் பிறகு அந்தத் திருட்டில் சம்பந்தப்பட்ட மேலும் சிலர் விபத்து உள்ளிட்ட சம்பவங்களில் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், தெஹல்கா இதழில் பணியாற்றிய மேத்யூ சாமூவேல் என்பவர் இது தொடர்பாக ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த திருட்டு வழக்கில் தொடர்புப்படுத்தப்பட்டிருந்த இருவர் தோன்றி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே கொடநாடு மாளிகையில் திருட்டை ஏற்பாடு செய்ததாகக் கூறியிருந்தனர்.

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இது குறித்து சுந்திரமான விசாரணைகளைக் கோரிய நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விவகாரத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை மறுத்தார்.<> மேலும், இந்த வீடியோவை வெளியிட்டவர்களின் பின்னணி விசாரிக்கப்படுமென்றும் அறிவித்தார். இதையடுத்து, அந்த வீடியோவில் பேட்டியளித்திருந்த சயன், மனோஜ் ஆகிய இருவரும் தில்லியில் தமிழக காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டனர்.

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் புகார் அளித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவிவிலக வேண்டுமெனக் கோரினார்.iv> "கொடநாடு பங்களா முதலமைச்சரின் முகாம் அலுவலகமாகவே இருந்திருக்கிறது. அரசுக் கோப்புகள்கூட அங்கு இருந்திருக்கின்றன. நடைபெற்ற கொலை, கொள்ளையில் முதலமைச்சரின் பெயரை குற்றவாளிகளே சொல்லியிருக்கிறார்கள்.

சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்தாமல், குற்றம் சொன்னவர்களைக் கைதுசெய்திருக்கிறார்கள். கனகராஜ் என்பவரின் மரணத்தில் மர்மமில்லையென அதனை விசாரித்துவரும் காவல்துறை அதிகாரியை வைத்தே சொல்லவைத்திருக்கிறார்கள். இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல்வர் பதவி விலகி, பாரபட்சமற்ற விசாரணை நடக்க ஒத்துழைப்புத் தர வேண்டுமென கேட்டிருக்கிறோம். ஆளுனர் தன்னால் முடிந்த நடவடிக்கையை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்" என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
தங்களுடைய மனுவின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்துகேள்வியெழுப்புவோம் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இது தொடர்பாக தி.மு.கவின் சார்பில் ஆளுனரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் "நேர்மையான ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழு (Special Investigation Team) அமைத்து முன்னாள் முதல்வர் இல்லத்தில் இந்நாள் முதல்வர் சொன்னதன் பேரில் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்படும் கொள்ளை குறித்து தீவிர விசாரணை நடத்தினால் மட்டுமே, கொடநாட்டில் நிகழ்ந்த கொடிய குற்றத்தின் உண்மை பின்னணி வெளியில் வரும்" என்று கூறப்பட்டுள்ளது. 


"முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது கூறப்பட்டுள்ள கொலைக் குற்றம் குறித்து குடியரசுத் தலைவருக்கு தெரிவித்து, அரசியல் சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாரபட்சமின்றியும், நேர்மையாகவும் விசாரணை நடைபெற எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு அறிவுறுத்த வேண்டும்.re>நேர்மையான ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி, நீலகிரி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு எண் "செசன்ஸ் 3/2018"ல் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் உள்ள புதிய ஆதாரங்களின் அடிப்படையில் மேல் விசாரணைநடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தில்லியில் கைதுசெய்யப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்ட சயன், மனோஜ் ஆகிய இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக