திங்கள், 14 ஜனவரி, 2019

கொடநாடு கொலைகள் .ட்ராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

கொடநாடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!minnamalam : கொடநாடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் ட்ராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
கொடநாடு கொள்ளை மற்றும் கொலையில் முதல்வரை சம்பந்தப்படுத்தி குற்றம் சாட்டியிருந்தார் தெகல்ஹா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல். இதுதொடர்பாக முதல்வருக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகள், இந்த விவகாரத்தை மாநில காவல் துறை விசாரிக்கக் கூடாது எனவும் சிபிஐதான் விசாரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளன. மேலும், சிபிஐ விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்று முதல்வர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேட்டியளித்த சயன், மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் சென்னையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் கொடநாடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி இன்று (ஜனவரி 14) பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், “முதல்வர் மீதே புகார் உள்ளதால் அதனை அவரின் கீழ் இயங்கும் தமிழக போலீசார் விசாரிப்பது முறையாக இருக்காது, விசாரணை நியாயமாகவும் நடைபெறாது. சிபிஐ விசாரித்தால்தான் இதற்கு பின்னால் இருக்கும் உண்மைகள் வெளிவரும். எனவே சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ட்ராபிக் ராமசாமி சார்பாக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்துள்ள இந்த பொதுநல மனுவை விசாரிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை தேதி ஏதும் குறிப்பிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக