ஞாயிறு, 27 ஜனவரி, 2019

பிரதமரின் மதுரை வருகை: ஆதரவும் எதிர்ப்பும்!

பிரதமரின் மதுரை வருகை: ஆதரவும் எதிர்ப்பும்!
மின்னம்பலம் : எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவும், பாஜக மாநாட்டில் பங்கேற்கவும் பிரதமர் மோடி இன்று மதுரை வரவுள்ளார். பிரதமருக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமான ஹாஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.
மதுரை தோப்பூரில் ரூ.1,200 கோடி செலவில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மதுரை மண்டேலா நகரில் இன்று (ஜனவரி 27) நடைபெறவுள்ளது. விழாவில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார் . பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக் கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். எய்ம்ஸ் விழாவில் முதல்வர், துணை முதல்வர், மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். இதற்காக மதுரையில் அருகருகே இரண்டு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை விமான நிலையத்துக்குக் காலை 11.30 மணிக்கு வரும் பிரதமர் மோடி, பிற்பகல் 1.30 மணிக்கு நிகழ்ச்சிகளை நிறைவு செய்துகொண்டு கொச்சி புறப்படுகிறார். பிரதமரின் வருகையையொட்டி, மதுரை மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, நகரமே கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், பிரதமர் வரும் இரண்டு மணி நேரத்துக்கு அந்தப் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட வராதது, மேகதாட்டு விவகாரம், ஸ்டெர்லைட் உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று மதிமுக, திவிக, மே 17 உள்ளிட்ட இயக்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் பரபரப்பு நீடித்து வருகிறது.

முன்பு பிரதமர் சென்னை வந்திருந்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்ட #GoBackModi என்ற தலைப்பிலான ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆனது. தற்போது மீண்டும் வரவுள்ள நிலையில் முந்திக்கொண்ட பாஜகவினர், பிரதமரை வரவேற்கும் விதமாக #MaduraiThanksModi என்ற ஹாஷ்டேக்கைப் பயன்படுத்தி பதிவுகள் இட ஆரம்பித்தனர். இது ட்விட்டரில் டிரெண்டான நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக #GoBackModi ஹாஷ் டேக் மீண்டும் ட்விட்டரில் ட்ரெண்டாக்கியுள்ளனர் நெட்டிசன்கள்.
#MaduraiThanksModi விட #GoBackModi ஹாஷ்டேக் ட்விட்டரில் முந்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக