ஞாயிறு, 27 ஜனவரி, 2019

25 மாநிலங்களில் 100 % மின்மயம்: மோடி அரசின் விளம்பர புரட்டு


savukkuonline.com :
வலுவானதொரு அறிவிப்புடன் 2018ஆம் ஆண்டை நிறைவு செய்தது நரேந்திர மோடி அரசாங்கம். 25 மாநிலங்கள் 100 % வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கியிருப்பதாக, டிசம்பர் 31ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பொன்றில் மின்சாரத் துறை தெரிவித்தது.
அந்த அறிவிப்பு உத்தரப் பிரதேசத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதோடு, பிரதான் மந்திரி சஹாஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா மூலம் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரத்தைக் கொண்டு சென்றதற்காகப் பாராட்டையும் தெரிவித்தது.சௌபாக்யா என்று அறியப்படும் இந்தத் திட்டம், செப்டம்பர் 2017இல் மோடியால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்புகளைக் கொண்டுசெல்வது இதன் நோக்கம்.
இதன் அடிப்படையில், உத்தரப் பிரதேசம் ஒரு அதிசயமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஏப்ரல் மாதத்தில், இந்த மாநிலம் 1.98 கோடி வீடுகளை மின்மயமாக்க வேண்டியிருந்தது. டிசம்பர் 31க்குள் இதைச் செய்ய, நாளொன்றுக்கு 60,000 வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்க வேண்டியிருந்தது. ஆகஸ்டின் பிற்பகுதியில், இலக்கைவிட 40% பின்னால் இருந்ததால், மாநில அதிகாரிகளால் காலக்கெடுவைச் சந்திக்க முடியாது என்று தெரிந்துவிட்டது. ஆனால், டிசம்பர் 31க்குள், மாநிலம் அதுடைய இலக்கை அடைந்ததோடு இல்லாமல், அதற்காக ரூ. 1,500 கோடி போனஸாகவும் பெற்றது.

இது எப்படி நடந்தது?
ஸ்க்ரால் இணைய இதழின் பார்வைக்குக் கிடைத்த அரசு ஆவணங்கள் இந்த ரகசியத்தை உடைக்கின்றன. உ.பி. மாநில அரசு, தன்னுடைய இலக்கை மாற்றி வைத்ததன் மூலம் இலக்கை அடைந்துள்ளது என்பது தெரியவருகிறது.
இந்த மாநிலம் மின்மயமாக்கலுக்கான உ.பி.யின் இலக்கு கடந்த ஏப்ரலில் 1.98 கோடி வீடுகளாக இருந்தது. அது பின்னர் 74.4 லட்சம் வீடுகளாக மாற்றப்பட்டது.
சௌபாக்யாவின் வலைதளத்தில், மாநிலங்களின் தகவல்கள் தினமும் அப்டேட் ஆவதற்கான ஒரு டாஷ்போர்டு உள்ளது. அதிலுள்ள அட்டவணை, 2017, அக்டோபர் 10 அன்று ஒவ்வொரு மாநிலத்திலும் மின்சாரம் இல்லாத வீடுகளின் எண்ணிக்கையையும், 2017 அக்டோபர் 10க்குப் பிறகு இன்னும் மின்சாரம் வழங்கப்பட வேண்டிய வீடுகளின் எண்ணிக்கையையும் காட்டுகிறது.
முக்கியமாக, மின்சாரமயமாக்கப்பட வேண்டிய வீடுகளின் எண்ணிக்கை குறைவதற்குப் பதிலாக இலக்குதான் குறைந்துவந்தது.
சரிந்துவரும் இலக்கு
ஏப்ரலில் மின்சாரத் துறைக்கு மின்மயமாக்கப்பட வேண்டிய வீடுகளின் எண்ணிக்கை மாநிலங்களால் வழங்கப்பட்டது. முந்தைய மின்சார திட்டங்களைப் போலல்லாமல், சௌபாக்யா, பொருளாதார அடிப்படைகள் இல்லாமல், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. உத்திர பிரேதசம் கொடுத்த கணக்குப்படி, அம்மாநிலத்தில் அக்டோபர் 2017இல் 1.98 கோடி வீடுகள் மின்சார இணைப்புகள் இல்லாமல் இருந்தன.
அக்டோபரில், உத்தரப் பிரதேசம் மின்சாரத் துறையின் முக்கிய செயலாளர், அலோக் குமார், மத்திய அரசின் சௌபாக்யா திட்டத்தின் வளர்ச்சியைப் பற்றிய கூட்டத்தின் விவரங்களை முன்வைத்து, மத்திய அரசிடம் மாநிலத்தின் இலக்கு 1.17 கோடி வீடுகளாக குறைந்துவிட்டது என்று தெரிவித்தார். ஆனால், மத்திய அரசுடன் நவம்பரில் நடந்த ஒரு சந்திப்பில், திட்டத்தின் தொடக்கத்தில், மின்சாரமயமாக்கப்படாத வீடுகளின் எண்ணிக்கையை 80 முதல் 80 லட்சமாகக் குறைத்திருப்பதாக (இலக்கின் 40% அல்லது 43% மட்டுமே) குமார் தெரிவித்தார்.
இந்த மறுஆய்வு செய்யப்பட்ட கணக்கு, மத்திய அரசிடம் சொன்னதோடு முரண்பட்டதோடு, கிடைத்திருக்கும் தகவல்களுக்கு எதிராகவும் உள்ளது. 2015-16ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசம், குடிநீர் இணைப்புள்ள வீடுகளைக் கணக்கெடுத்தபோதே, மின்சாரக் கணக்கையும் பெற்றது. இந்தக் கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ 1.12 கோடி மின்மயமாக்கப்படாத கிராமத்து வீடுகளும், 0.15 கோடி மின்மயமாக்கப்படாத நகரத்து வீடுகளும் இருந்தன. இவை எந்த மின்மயமாக்கல் திட்டத்திலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்த முரண்பாடுகளைக் கண்டுகொள்ளாமல், டிசம்பரின் முடிவில், மத்திய அரசு உத்தரப் பிரதேசத்தை, 74.4 லட்சம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கி 100% மின்மயமாக்கியதற்காகப் பாராட்டியது.
உத்தரப் பிரதேச அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளருக்கும் முதலமைச்சர் அலுவலகத்திற்கும் கேள்விகள் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டன. எவ்வித பதிலும் கிடைக்கவில்லை (மாநில அரசு பதிலளிக்கும் பட்சத்தில் இந்த செய்தி அப்டேட் செய்யப்படும்).
உத்தரப் பிரதேசம் மட்டுமல்ல
உத்தரப் பிரதேசம் மட்டும் இதில் தனியாக இல்லை. ஏப்ரல் மாதத்தோடு, அனைத்து மாநிலங்களும் சௌபாக்யா திட்டத்தின் கீழ் மின்மயமாக்கப்பட வேண்டிய இலக்குகளை மத்திய அரசிடம் ஒப்படைத்தன. அனைத்து மாநிலங்களும் தங்களுடைய இலக்குகளைக் குறைத்து மாற்றம் செய்துள்ளதாகத் தெரிகிறது.
துல்லியமாகச் சொன்னால், ஜனவரி மாதக் கணக்குப்படி, பிகார்தான் தனது இலக்கை அதிகமாகக் குறைத்துள்ளது, 1.6 கோடி வீடுகளிலிருந்து 35 லட்சம் வீடுகள் வரை; 1.28 கோடி வீடுகள் அல்லது 79% வீடுகளைக் குறைத்துள்ளது. சௌபாக்யா திட்டத்தின்படி, பிகாரும் 100% மின்மயமாக்கலை சாத்தியப்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் (81.5%), கர்நாடகம் (76.39%), ஆந்திரப் பிரதேசம் (72.83%) ஆகிய மாநிலங்களும் தங்களது இலக்குகளைக் குறைத்துள்ளன.
இந்த வீடுகள் இலக்கிலிருந்து விலக்கப்பட்டது ஏன்? மாநில அளவிலான மற்ற திட்டங்களின் கீழ் மின்மயமக்கப்படக்கூடியவை என்பதால் விலக்கப்பட்டனவா, இந்த வீடுகளே இல்லையா, அல்லது சில வீடுகள் ஒன்றிணைக்கப்பட்டனவா அல்லது இவர்கள் குடிபெயர்ந்ததால் மின்மயமாக்கலுக்கு ஒப்புதல் அளிக்க முடியவில்லையா? என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மின்சாரத் துறையின் இணைச் செயலாளரும் சௌபாக்யா திட்டத்தின் இயக்குனரும் மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட இக்கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை.
ஜார்காண்ட் மாநிலம்:
ஜார்கண்ட் மாநிலம் மட்டுமே மத்திய அரசிடம் தனது இலக்குகளை எப்படிக் குறைத்தது என்பதற்கான விளக்கத்தை அளித்த மாநிலம்.
ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு தெரிவித்த அந்த மாநிலத்தின் இலக்கு 31.6 லட்சம் வீடுகள். ஏப்ரலின் இடையில், ஜார்கண்ட் மத்திய அரசிடம் சௌபாக்யா தரவுகள் மற்றும் தபால் துறை நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில் மின்மயமாக்கப்பட வேண்டிய வீடுகளின் எண்ணிக்கையை 15 லட்சம் முதல் 16 லட்சமாகக் குறைக்க முடியும் என்று தெரிவித்தது.
மின்மயமாக்கப்பட வேண்டிய வீடுகளைக் குறித்த தொடக்க நிலைத் தரவுகள் பல மாநிலங்களில் சமூக – பொருளாதார சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து பெறப்பட்டது என்பதை அக்டோபர் 2017இல் ஸ்க்ரால் இதழில் வெளியிட்டிருந்தோம். ஏப்ரல் மாதச் சந்திப்புகளில், மத்திய அரசு இந்தத் தரவுகளை தபால் துறையின் புதிய தரவுகளுடன் சரிபார்த்துக்கொள்ளச் சொன்னது. மே மாதத்திற்குள் தங்களது இலக்குகளை முடிவு செய்யும்படி மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.
ஜார்கண்ட் மாநிலம் தனது இலக்குகளைக் குறைத்ததை அடுத்து, சௌபாக்யா வலைதளத்தில் அக்டோபர் 2017 கணக்குப்படி மின்மயமாக்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை 13.68 லட்சம் வீடுகள் என்றானது. ஜார்கண்ட் மாநிலமும் தன்னுடைய 100% வீடுகளையும் மின்மயமாக்கியுள்ளது.
பிப்ரவரி மாதத்தில், வணிகச் செய்தித்தாளான மிண்ட், சௌபாக்யா வலைத்தளத்தில் காணப்படும் இலக்குகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதாகத் தெரிவித்தது, “அடிக்கடி, மாதாமாதம் மாநிலத்திலுள்ள கிராம வீடுகளின் எண்ணிக்கை மாறுகிறது”. “எனவே, இந்த வீடுகளின் எண்ணிக்கையை மறுமதிப்பீடு செய்வதுதான் மின்மயமாக்கப்படும் எண்ணிக்கை அதிகரிப்பது என்னும் செயல்திட்டத்தின் ஒரு பகுதி”  என அது குறிப்பிட்டிருந்தது.
சௌபாக்யா திட்டம் அறிமுகப்படுத்தப்படுவது வரை, கிராமங்களில் மின்மயமாக்கல் என்பது தீன் தயாள் உபாத்யாய் கிராம ஜோதி யோஜனா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ராஜீவ் காந்தி கிராமின் வித்யுதிகாரன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் அரசால் செய்யப்பட்டது; இது வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கியது. ஒரு கிராமத்தில் 10% வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டால், அந்தத் திட்டத்தின் கீழ் அக்கிராமம் மின்மயமாக்கப்பட்டதாகக் கருதப்படும். எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி இதழில் வந்த ஒரு அறிக்கையின்படி, கிராம மின்மயமாக்கலுக்கான அரசின் தரவுகள் எவ்வளவு குறைந்த வீடுகளுக்குத் திட்டம் செல்கிறது என்பதைப் பிரதிபலிக்கிறது.
மோடி அரசாங்கம் தங்களுடைய சௌபாக்யா திட்டம் இதை மாற்றும் என்று தெரிவித்தது. ஆனால் கிடைத்திருக்கும் சீரற்ற தரவுகளை வைத்துப் பார்த்தால், எந்தளவிற்கு அது தன்னுடைய இலக்குகளை அடைந்துள்ளது என்பது தெரியவில்லை.
உத்தரப் பிரதேசத்தில் 100% வீடுகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த அதே பத்திரிக்கைக் குறிப்பில் மின்சாரத் துறை இதையும் தெரிவித்துள்ளது: “உத்தரப் பிரதேசத்தில் அரசாங்கம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின்மயமாக்கப்படாமல் விடுபட்ட வீடுகளைக் கண்டுபிடிக்கவும், அவ்வீடுகளிக்கு மின்சார இணைப்புகளை வழங்கவும் ஒரு பிரதான பிரச்சாரக் குழுவை அமைத்துள்ளது”.
மேலும், அக்குறிப்பில் அம்மாநிலமானது சௌபாக்ய ரதம் என்ற தனி வாகனத்தை அறிமுகம் செய்துள்ளதாகவும், அது மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயணிக்கும் என்றும், திட்டத்தில் விடுபட்டவர்கள் மின்சார இணைப்பிற்காக அந்த வாகனத்தை அணுகலாம் என்றும் தெரிவித்தது. திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள மக்கள் அழைக்க அந்த குறிப்பில் ஒரு ஹெல்ப்லைன் எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
நன்றி: ஸ்க்ரால்.இன்
https://scroll.in/article/910407/modi-government-electrified-100-households-in-25-states-by-slashing-targets

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக