திங்கள், 14 ஜனவரி, 2019

கொடநாடு தொடர் கொலைகள் ஸ்டாலின் இன்று ஆளுநரை சந்திக்கிறார்!

M K Stalin will meet TN governor today to give a complaint on Kodanad estate murders tamil.oneindia.com - shyamsundar : சென்னை: கொடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் தொடர்பாக இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து புகார் அளிக்க உள்ளார்.
கொடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மர்ம மரணங்களுக்கு பின் யார் இருக்கிறார், எதனால் இந்த மர்ம மரணங்கள் நடந்தது என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் மூன்று நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம மரணங்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார். இதுகுறித்து ஆவணப்படமும் அவர் வெளியிட்டார்.
இதில் மேத்யூஸ் சாமுவேல் தமிழக முதல்வரை நேரடியாக குற்றஞ்சாட்டி இருந்தார். இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வர் பழனிச்சாமி இந்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று, பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்.

இது தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என்றும் கூறினார். அதேபோல் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரை சந்தித்து இதுகுறித்து புகார் அளிக்க போவதாக கூறினார்.
அந்த வகையில் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து புகார் அளிக்க உள்ளார். இன்று மாலை 5.30 மணிக்கு ஸ்டாலின் ஆளுநரை சந்திக்க இருக்கிறார். முதல்வருக்கு எதிரான ஆதாரங்களை ஆளுநரிடம் ஸ்டாலின் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக