திங்கள், 14 ஜனவரி, 2019

கொடநாடு கொலைகள் .. பத்திரிகையாளர் மேத்யூஸ் சாமுவேலை பிடிக்க தமிழக போலீஸார் கேரளாவில் முகாம்


tamil.thehindu.com/tamilnadu/ கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்த ஷயான், மனோஜை சென்னை தனிப்படை போலீஸார் டெல்லியில் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக ஆவணப்படம் தயாரித்து வீடியோவாக வெளியிட்ட பத்திரிகையாளர் மேத்யூஸ் சாமுவேலைப் பிடிக்க போலீஸார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி 10-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் புகுந்து, காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. மற்றொரு காவலாளியை கட்டிப் போட்டுவிட்டு எஸ்டேட்டில் இருந்த விலை உயர்ந்த கை கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து தப்பியது. எஸ்டேட்டில் இருந்த முக்கிய ஆவணங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றதாக கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் சிக்கிய ஷயான், மனோஜ் ஆகியோர் டெல்லியில் கடந்த 11-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தனர். கோடநாடு எஸ்டேட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஆவணப் படம் ஒன்றை தெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் சாமுவேல் வெளியிட்டார். கோடநாடு சம்பவத்தின் பின்னணியில் முதல்வர் பழனிசாமி இருப்பதாகவும் மேத்யூஸ் சாமுவேல் குற்றம்சாட்டினார். ஆவணப் படத்தில் பேசியுள்ள ஷயானும் முதல்வர் பழனிசாமி மீது குற்றம்சாட்டியிருந்தார். இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
முதல்வர் மறுப்புஇதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டை முதல்வர் பழனிசாமி மறுத்துள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘கோடநாடு சம்பவத்தில் என்னை தொடர்புபடுத்தி மேத்யூஸ் சாமுவேல் வெளியிட்ட செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறானது. அந்த சம்பவத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. பொய்யான குற்றச்சாட்டின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா கூறும்போது, ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த சில நாட்களிலேயே தொடர்ச்சியாக சந்தேகத்துக்கு இடமான மரணங்கள், நிகழ்வுகள் நடந்துள்ளன. இதற்கு முறையான விசாரணை நடத்த வேண்டுமானால் முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும்’’ என்றார்.
மேத்யூஸ் சாமுவேல், ஷயானின் டெல்லி பேட்டி தொடர்பாக அதிமுக தொழில்நுட்பப் பிரிவின் மாநில இணை செயலாளர் ராஜன் சத்யா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். தனிப்படை அமைப்புஅதன்படி, டெல்லியில் சர்ச்சைக்குரிய வகையில் பேட்டியளித்த ஷயான், தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், கோடநாடு வழக்கில் சிக்கிய மற்றொருவரான மனோஜ் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து 3 பேரையும் பிடிக்க மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரில் ஒரு குழுவினர் டெல்லிக்கும் மற்றொரு குழுவினர் கேரளாவுக்கும் சென்றனர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய உதவி செய்யும்படி இரு மாநில போலீஸ் அதிகாரிகளுக்கும் தமிழக போலீஸார் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், டெல்லியில் முகாமிட்டிருந்த சென்னை தனிப்படை போலீஸார், சர்ச்சைக்குரிய வகையில் பேட்டியளித்த ஷயான், மனோஜ் ஆகிய இருவரையும் நேற்று மாலை கைது செய்தனர். அவர்களை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, இன்று காலை சென்னைக்கு அழைத்து வர உள்ளனர். அவர்களை சென்னையில் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்திவிட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர். டெல்லி பேட்டி விவகாரம் தொடர்பான முழு பின்னணி விவரங்களையும் சேகரிப்பதற்காக அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் சைபர் கிரைம் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேலை பிடிக்க தமிழக சைபர் கிரைம் போலீஸார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக