செவ்வாய், 1 ஜனவரி, 2019

கௌசல்யா :வேறொரு பெண்ணின் 6 மாத கருக்கலைப்புக்கு நான் காரணமல்ல

tamil.thehindu.com : வேறொரு பெண்ணின் 6 மாத கருக்கலைப்பு என்பதும் அதற்கு நான்தான் காரணம் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம். அதில் உண்மையும் இல்லை என்று கவுசல்யா தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சங்கர் - பழநி கவுசல்யா ஆகிய இருவரும் காதலித்து 2015-ல்சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து, உடுமலைப்பேட்டையில் சங்கர் கடந்த 2016 மார்ச் 31-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு, தீண்டாமை, ஆணவப் படுகொலைக்கு எதிராக கவுசல்யா போராடி வந்தார்.

இந்த நிலையில், கோவையில் ‘நிமிர்வு கலையகம்’ என்ற பறை இசை பயிற்சி அமைப்பின் பொறுப்பாளர் சக்தி என்பவரை கவுசல்யா காதலித்து கடந்த டிசம்பர் 9-ம் தேதி மறுமணம் செய்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து, வேறொரு பெண்ணைக் காதலித்து ஏமாற்றியது உட்பட சக்தி மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சக்தி மீதான புகார்கள் குறித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட நீண்ட அறிக்கையில், ''ஒரு பெண்ணைக் காதலித்து கைவிட்டதை சக்தி ஒப்புக்கொண்டார். ஆனால், மற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டார். கவுசல்யாவும் தனது தவறைப் புரிந்துகொண்டார். எனவே, அவர்கள் இருவரும் பொது அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும். நிமிர்வு கலையகத்தில் இருந்து சக்தி வெளியேற வேண்டும். ரூ.3 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். 6 மாதங்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் அவர் பறை இசைக்கக் கூடாது. இதன் பிறகும், தேவையற்ற விமர்சனங்களை பொதுவெளியில் வைத்தாலோ, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பினாலோ எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும்'' என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் என் மீது சொல்லப்பட்ட பிழையை மட்டுமே நான் ஏற்கிறேன். மற்ற அவதூறுகளை மறுக்கிறேன் என்று கவுசல்யா தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கவுசல்யா எழுதி வெளியிட்ட பதிவில், ''தோழர் தியாகு, தோழர் கொளத்தூர் மணி ஆகியோரின் அறிக்கையில் என் மீது சொல்லப்பட்ட பிழையை மட்டுமே நான் ஏற்கிறேன். மற்ற அவதூறுகளை மறுக்கிறேன். 6 மாத கருக்கலைப்பு என்பதும் அதற்கு நான்தான் காரணம் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம். அதில் உண்மையும் இல்லை. இது தலைவர்களுக்கு நன்கு தெரியும்.
என்னுடைய பிழை என்பது சக்திக்கு முன்பு சில காதல்கள் இருந்திருக்கிறது சில போக்குகள் இருந்திருக்கிறது தெரிந்தே நான் விரும்பியதும் திருமணம் செய்து கொண்டதும் மட்டும்தான். இந்த அடிப்படையில் நான் செய்த பிழை என்று அறிக்கையில் கூறியிருப்பதை ஏற்றுக் கொள்கிறேன். நானும் சக்தியும் கருக்கலைப்புக்கு பொறுப்பு அல்ல என்பதை மீண்டும் அழுத்தமாகக் குறிப்பிட  விரும்புகிறேன். இவ்விளக்கம் இல்லாமல் அறிக்கையை பகிர்ந்தால் பல அவதூறுகளை ஏற்றுக்கொள்வது போல் ஆகிவிடும் என்பதாலேயே இந்த விளக்கம். இந்த அடிப்படையில் அறிக்கையை வெளியிடுகிறேன்'' என்று கவுசல்யா தெரிவித்துள்ளார்.
தியாகு, கொளத்தூர் மணி ஆகியோர் விசாரணை நடத்தி வெளியிட்ட அறிக்கையையும் கவுசல்யா தன் முகநூல் பதிவில் இணைத்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக