செவ்வாய், 1 ஜனவரி, 2019

பள்ளத்தில் விழுந்து பலியான மெக்கானிக்!

பள்ளத்தில் விழுந்து பலியான மெக்கானிக்!மின்னம்பலம் : திண்டுக்கல் சாலையொன்றில் புதிதாகக் கட்டப்படும் பாலத்திற்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலியானார். அந்த இடத்தில் அறிவிப்புப் பலகை வைக்காததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியிலுள்ள சாலையில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காகச் சாலையின் நடுவே 10 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பணிகள் நடைபெறுவது குறித்து எந்த அறிவிப்புப் பலகையும் வைக்கப்படவில்லை.

தாடிக்கொம்பு அருகேயுள்ள நந்தவனப்பட்டி கருவூல காலனியைச் சேர்ந்த சங்கர், நேற்று முன்தினம் (டிசம்பர் 30) இரவு 9 மணி இப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார். பாலம் கட்டுவதற்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாகப் பலியானார். அடுத்த நாள் காலையில் தான் அவர் பள்ளத்தில் விழுந்து இறந்தது தெரிய வந்தது.
தாடிக்கொம்பு போலீசார் இறந்து கிடந்த சங்கரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த சங்கருக்கு கோமதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
சாலையின் குறுக்கே புதிதாக பாலம் கட்டுவது குறித்த எச்சரிக்கை அறிவிப்புகள் ஏதும் சம்பவ இடத்தில் இல்லை. இதற்கு அந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக