செவ்வாய், 1 ஜனவரி, 2019

சுதேசி வேடத்தில் பழங்குடிகளின் மூலிகை அறிவை திருடி விற்கும் பாபா ராம்தேவ்

vinavu.com - kalaimathi ::வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, உள்நாட்டு நிறுவனங்களும் இயற்கை வளங்களை சுரண்டுவதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் பங்கு தரவேண்டும் என தீர்ப்பில் தெரிவித்தார் நீதிபதி.. யோகா சாமியார் ராம்தேவ் தனது தயாரிப்புகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி பொருட்கள் என கூவிக்கூவி விற்பனை செய்து வருகிறார்.  இப்படி உள்ளூர் மக்களின் மூலிகை அறிவை பயன்படுத்தி கொழுத்ததும் அவர்களுக்கு லாபத்தில் பங்கு தர மறுத்து நீதிமன்றமும் சென்றிருக்கிறார் இந்த ‘சுதேசி’.

இமயமலை பகுதிகளில் உள்ள மூலிகைகளை உத்தரகாண்ட் பழங்குடி மக்கள் பல காலமாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் மூலிகை அறிவை தனது ‘ஆயுர்வேத’ மற்றும் ‘மூலிகை’ கலந்த பொருட்களைத் தயாரிக்க பயன்படுத்தி வருகிறது ராம்தேவின் ‘திவ்யா பார்மஸி’ என்ற நிறுவனம்.
பல்லுயிர் சட்டத்தின் மூலம், உத்தரகாண்ட் மாநில பல்லுயிர் ஆணையம், ராம்தேவ் நிறுவனத்தின் 2014-15 ஆண்டின் லாபமான  ரூ. 421 கோடி ரூபாயிலிருந்து, ரூ. 2 கோடியே நான்கு இலட்சம் ரூபாயை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் படி கேட்டது. இதை தர மறுத்து நீதிமன்றம் சென்றது அந்நிறுவனம்.
பல்லுயிர் சட்டம் இந்திய நிறுவனங்களுக்கு பொருந்தாது என்றும் சொன்னதோடு, தனது லாபத்தில் பங்கு தருவது அரசியலமைப்பு விதி 14-ன் கீழ், சம உரிமைச் சட்டத்தை மீறுவதாகும் என ராம்தேவ் கம்பெனி வாதாடியது.  அதோடு மாநில ஆணையம் காரணம் இல்லாமல் விதிகளைப் போடுவதாகவும் இது வாழ்வதற்கான மற்றும் தொழில் செய்வதற்கான அடிப்படை உரிமையை பறிப்பது எனவும் வாதாடியது.
உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் நீதிமன்றம் இப்போது தீர்ப்பு வழங்கியிருக்கிறது. “நாடாளுமன்றம் உள்ளூர் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்திருக்கிறது. ஆனால், இப்போதும் ‘இந்திய நிறுவனங்களிடமிருந்து’ இதை காப்பாற்ற முடியவில்லை.” என ராம்தேவின் ‘சுதேசி’ பற்றை விமர்சித்துள்ளது நீதிமன்றம்.

“நிலப்பரப்பு எதுவாயினும் உயிரியல் வளங்கள் அனைத்தும் நிச்சயம் நாட்டுக்கு சொந்தமானது. ஆனால், இந்த சொத்து மூத்த குடிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் சொந்தமானது. ஏனெனில் காலம் காலமாக அவர்கள்தான் அதை பாதுகாத்து வருகிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்களும் பழங்குடிகளும் இமாலயப் பகுதிகளில் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடிகள்.  பாரம்பரியமாக உயிரியல் வளங்களை (மூலிகை உள்ளிடவற்றை) சேகரித்து வருகிறார்கள். காலம்காலமாக இவற்றைப் பற்றிய அறிவு இவர்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது.
Tribes of indiaஎப்போது அதை பறிக்க வேண்டும், எந்த காலத்தில் பறிக்க வேண்டும், அதன் தன்மை என்ன, மனம் என்ன, தனிப்பட்ட குணம் என்ன, நிறம் என்ன… என அனைத்து தகவல்களையும் அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். இந்த அறிவு அவர்களுடைய அறிவுசார் சொத்துடமையாக கொள்ளப்படாவிட்டாலும் கூட சொத்துரிமையாக கருத தகுதி உடையதே” என நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
நீதிபதி சுதான்சு துலியா கடந்த வாரம் இந்த தீர்ப்பை வழங்கினார். வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, உள்நாட்டு நிறுவனங்களும் இயற்கை வளங்களை சுரண்டுவதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் பங்கு தரவேண்டும் என தீர்ப்பில் தெரிவித்தார் நீதிபதி.
முன்னதாக, ராம்தேவ் நிறுவனம் ‘சுதேசி’ நிறுவனம் என்றால், இயற்கை வளங்களை பயன்படுத்த அனுமதிகூட கேட்கத் தேவையில்லை என வாதாடியது.  நீதிமன்றத்தின் தீர்ப்பு ராம்தேவின் நிறுவனத்துக்கு மட்டுமல்லாமல், இயற்கை வளங்களை திருடும் அனைத்து ஆயுர்வேத, ஹெர்பல், அழகு சாதனப் பொருட்கள்-மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
மக்களின் உழைப்பையும் இயற்கை வளத்தையும் திருடி காசு சம்பாதித்த ராம்தேவ், ‘சுதேசி பொருட்களை வாங்குங்கள், சுதேசி நிறுவனங்களை வாழவையுங்கள்’ என விளம்பரம் செய்கிறார். இந்த போலி ‘சுதேசி’யின் விளம்பரத்தை நம்பிக் கொண்டிருக்கிறது நடுத்தர வர்க்கம். தேசப்பற்று, சுதேசி என்கிற வார்த்தையை மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிகிறவனெல்லாம் அயோக்கியனாகவே இருக்கிறான்.
கலைமதி
நன்றி: த வயர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக