வெள்ளி, 21 டிசம்பர், 2018

பிரபஞ்சன் காலமானார் .. புதுசேரியில் புகழ் பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று காலை

BBC : புதுச்சேரியை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாதெமி விருது
பெற்றவருமான பிரபஞ்சன் இன்று காலை (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 73. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1945ஆம் ஆண்டு பிறந்த பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம்.
முறையாக தமிழ் கல்வி பயில வேண்டும் என்பதற்காக கரந்தை கல்லூரியில் சேர்ந்து தமிழ் புலவர் பட்டம் பெற்ற பிரபஞ்சன், தஞ்சாவூரில் தமிழ் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
பின்னர், ஒருகட்டத்தில் அந்த பணியை விட்டு விலகி முழு நேர எழுத்தாளரானார். 1995ஆம் ஆண்டு பிரபஞ்சனின் வரலாற்றுப் புதினமான 'வானம் வசப்படும்' என்ற புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
'வானம் வசப்படும்', 'மானுடம் வெல்லும்', 'இன்பக் கேணி', 'நேசம் மறப்பதில்லை' என மொத்தம் நான்கு வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார் பிரபஞ்சன்.


பிரபஞ்சனின் படைப்புகள் இந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற இந்திய மொழிகளிலும், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், சுவீடிஷ் போன்ற பன்னாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபஞ்சன், சில நாள்களுக்கு முன்பு உடல் நிலை கடுமையாக பாதிப்படைந்து புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று காலை 11:30 மணிக்கு அவர் காலமானார். பிரபஞ்சனின் மறைவுக்கு பலரும் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக