வெள்ளி, 21 டிசம்பர், 2018

சொராபுதீன் தம்பதிகள் கொலைவழக்கில் குற்றவாளிகள் 22 பேரும் விடுதலை.. போலி என்கவுண்டர் ...

சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை தினத்தந்தி : சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மும்பை, குஜராத் மாநிலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக், அவரது மனைவி சவுசர்பி ஆகியோர் போலீஸ்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் என்று கூறி அவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.இந்த என்கவுண்டர் போலியாக நடத்தப்பட்டது என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த நிலையில் சொராபுதீன் ஷேக்கின் உதவியாளர் துளசி பிரஜாபதியும் என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுவும் போலியாக நடந்த என்கவுண்டர் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த என்கவுண்டர்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த போலி என்கவுண்டரில் குஜராத் மாநில அரசில் உள்துறை மந்திரியாக இருந்த அமித் ஷாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு அமித்ஷா கைது செய்யப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த என்கவுண்டர் வழக்கு விசாரணை மும்பை சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டில் நடந்தது.

சுமார் 500 பேர் சாட்சிகளாக பட்டியலிடப்பட்டனர். ஆனால் 210 பேர் மட்டுமே சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டனர். இது தொடர்பாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில் அமித்ஷா மற்றும் ராஜஸ்தான் உள்துறை மந்திரியாக இருந்த குலாப்சந்த் கட்டாரியா பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அமித்ஷா, கட்டாரியா உள்பட 16 பேரை இந்த வழக்கில் இருந்து சி.பி.ஐ. கோர்ட்டு விடுவித்தது.

மீதமுள்ள 22 பேர் மீதும் விசாரணை நடந்தது. சமீபத்தில் வக்கீல்கள் வாதம் முடிந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இந்த போலி என்கவுண்டர்கள் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், சூழ்நிலை ஆதாரங்களும்  போதுமான அளவு இல்லை எனவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக