வெள்ளி, 21 டிசம்பர், 2018

கணினிகளை கண்காணிக்கும் மத்திய அரசின் சர்வாதிகார நோக்கத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்


தினகரன் : சென்னை: கணினி தகவல்களை
கண்காணிக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் உத்தரவு தனிமனித உரிமையை பறிப்பதாக கூறியுள்ளார். எனவே மேற்கண்ட உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

THE HINDU TAMIL: நாட்டில் உள்ள எந்தக் கணினியையும் ஆய்வு செய்து தகவல்களை யாருடைய அனுமதியின்றி எடுக்க 10 அரசு முகமைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் கட்சியும், அறிவிக்கப்படாத அவசரநிலை என்று ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளன.

நாட்டில் உள்ள அனைத்துக் கணினிகளில் பாதுகாத்து வைத்திருக்கும் தகவல்கள், பரிமாறப்படும் தகவல்களைக் கண்காணிப்பது, அனுப்பும் தகவல்களைக் கண்காணிப்பது, அந்தத் தகவல்களை இடைமறித்து ஆய்வு செய்வது, தடைசெய்வது, தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செய்ய சிபிஐ, ஐபி, என்ஐஏ, அமலாக்கப்பிரிவு, வருவாய் புலனாய்வு உள்ளிட்ட 10 விசாரணை முகமைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்து நேற்று இரவு உத்தரவிட்டது.
இதற்கு காங்கிரஸ், ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்தியஅமைச்சருமான ஆனந்த் சர்மா டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், “ தனிமனிதர்களின் அந்தரங்க உரிமை, அடிப்படை உரிமை மீதான தாக்குதலாகவே மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைப் பார்க்கிறோம். அந்தரங்க அடிப்படை உரிமை என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நேர் எதிராக அரசு நடக்கிறது.
மத்திய அரசு அதன் வலிமைக்குச் செயல்பட்டால், அதைக் கூட்டாக எதிர்ப்போம். 10 அரசு விசாரணை முகமைகளும் கணினித் தகவல்களை அனுமதியில்லாமல் பெறுவதும், கண்காணிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ்
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் கூறுகையில் “ மோடி அரசு அடிப்படை உரிமைகளையும், அந்தரங்க உரிமைகளையும் வெட்கமே இல்லாமல் கிண்டல் செய்கிறது, தண்டனைக் கிடைக்காது என்ற ஆணவத்தில் மீறுகிறது. தேர்தலில் கிடைத்த தோல்வியால், மோடி அரசு உங்களின் கணினிகளை ஆய்வு செய்கிறது?. பெரிய அண்ணன் போல் நடந்து கொள்வதே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மரபணுவாகும் “ எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மம்தா பானர்ஜி:


மம்தா பானர்ஜி : கோப்புப்படம்
 திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ட்விட்டரில் கூறுகையில், “ ஒட்டுமொத்த கண்காணிப்பு என்பது மோசமான சட்டமாகும். உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு நாட்டின பாதுகாப்புக்கா, ஏற்கெனவே பல நிர்வாக முறைகள் இருக்கும் இந்த உத்தரவு பாதுகாப்புக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்களா. இந்த உத்தரவால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள். மக்களே உங்கள் கருத்துக்களை கூறுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சி


ராம் கோபால் யாதவ்: கோப்புப்படம்
 சமாஜ்வாதிக் கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் கூறுகையில், “ மோடி அரசு முடிய இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தனக்குத் தானே குழிதோண்டிக் கொள்ளக்கூடாது. விரைவில் புதிய அரசு மத்தியில் அமையும்” எனத் தெரிவித்தார்.
சீதாராம் யெச்சூரி:


சீதாராம் யெச்சூரி : கோப்புப்படம்
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் கூறுகையில், “ ஒவ்வொரு இந்தியர்களும் கிரிமினல்கள் போல் ஏன் நடத்துகிறீர்கள்?, ஒவ்வொரு மக்களையும் வேவுபார்க்கப் பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமானது, தொலைத்தொடர்பு ஒட்டுக்கேட்பதாகும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு விரோதமானதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவால்:
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் கூறுகையில், “ இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை 2014ம் ஆண்டு முதல் நிலவுகிறது. அதிலும் கடந்த 2 மாதங்களாக மோடி அரசு அனைத்து எல்லைகளையும் மீறி, ஒவ்வொரு இந்தியரின் கணினியை கட்டுப்பாட்டுக்குள் எடுக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமைகளை நசுக்குவதைப் பொறுக்க முடியுமா?” எனத் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக