சனி, 8 டிசம்பர், 2018

விவசாயிகளை அழிக்கத் துடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி!; எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டத்தில் கண்டனம்!!

sa
/nakkheeran.in - elayaraja": சேலம்
சென்னை இடையே எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை விளை நிலங்களின் ஊடாக அமைப்பதற்கு விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்திட்டம் அமைய உள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தொடர்ந்து எதிர்ப்பு நிலவுகிறது.
பத்தாயிரம் கோடி ரூபாயில் அமைய உள்ள எட்டுவழிச்சாலைத் திட்டத்தால் விவசாயமும், இயற்கை வளமும் பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக இத்திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி விவசாயிகள், பாமக மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இத்திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், பசுமைத் தீர்ப்பாயத்தின் அறிக்கை வரும் வரைக்கும் திட்டம் தொடர்பான யாதொரு பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது; நிலத்தில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தக்கூடாது என்றும் கறாராக உத்தரவிட்டிருந்தது.


உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி மஞ்சவாடி கணவாய் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டது, அளவீடு செய்து முடிக்கப்பட்ட விளை நிலங்களை உட்பிரிவு செய்தல் உள்ளிட்ட பணிகளை சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். அவற்றுக்கும் உயர்நீதிமன்றம் கடும் கண்டனங்களை பதிவு செய்தது.
sa

இந்நிலையில், கடந்த டிசம்பர் 1ம் தேதியன்று, எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக கையகப்படுத்துவதாகச் சொல்லியிருந்த நிலத்தைக் காட்டிலும், சில பகுதிகளில் கூடுதலாக நிலங்களை கையகப்படுத்த இருப்பதாகக்கூறி, அவற்றின் சர்வே எண்களின் பட்டியலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒரு விளம்பர அறிவிக்கை செய்திருந்தது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இந்த அறிவிக்கை, சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தத் திட்டத்தால் பாதிக்கப்பட உள்ள விவசாயிகள் சேலத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் கூடி, ஆலோசனைக் கூட்டம் நடத்தத் தீர்மானித்து இருந்தனர். இது தொடர்பாக காவல்துறையிடமும் முன்அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் எட்டு வழிச்சாலை தொடர்பாக எந்த ஓர் இடத்திலும் ஆலோசனைக் கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று மறுத்ததோடு, கூட்டம் நடத்த அனுமதித்திருந்த கல்யாண மண்டபத்தினரையும் போலீசார் மிரட்டியுள்ளனர்.

போலீசாரின் முட்டுக்கட்டைகள், உருட்டல் மிரட்டல்களுக்கு பணியாத விவசாயிகள், சேலத்தை அடுத்த உத்தமசோழபுரத்தில் உள்ள விவசாயி மணிகண்டன் என்பவரின் தோட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று (டிச. 7) ஒன்று கூடினர். வீரபாண்டி, பூலாவரி, நாழிக்கல்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார விவசாயிகள் மட்டுமின்றி பிற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

''விவசாயிகளின் எதிர்ப்பு, உயர்நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றையும் மீறி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிலம் எடுப்பு தொடர்பாக புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது. இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியரை அனைத்து விவசாயிகளும் ஒரே நாளில் சந்தித்து, மீண்டும் ஆட்சேபனை மனுக்களை வழங்குவது,'' என்று தீர்மானித்தனர். மேலும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், ''தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இவ்விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். விவசாயிகளை அழிக்கும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார். அவர், கமிஷனுக்காக இந்த திட்டத்தை செயல்படுத்திட ஆர்வம் காட்டுகிறார்.

எந்த சூழ்நிலையிலும் எங்களது நிலத்தை விட்டுத்தர மாட்டோம். எங்கள் பிரச்னைகளை ஒரே இடத்தில் கூடி பேசக்கூட அனுமதி வழங்க மறுத்த காவல்துறையும் கண்டிக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகள் தொடர்ந்து மேலும் பலகட்ட போராட்டங்களை நடத்துவோம்,'' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக