வியாழன், 6 டிசம்பர், 2018

நெல் ஜெயராமனுக்கு ஸ்டாலின் புகழாஞ்சலி .. தமிழ்நாட்டின் மண் வளம் காக்க தன் வாழ்வை அர்ப்பணித்தவர்

tamil.thehindu.com/: தமிழ்நாட்டின் மண் வளம் காக்க தன் வாழ்வை அர்ப்பணித்தவர் நெல் ஜெயராமன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
170க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட சாதனை மனிதர் ‘நெல் ஜெயராமன்’ புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை அவருடைய உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மாலையணிவித்து இறுதி வணக்கம் செலுத்தினார்.
பின்னர் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''மண் வளம் காக்கும் நெல் விளைச்சலைப் பெருக்கி, இயற்கை வேளாண்மை வாயிலாக புதிய விடியலை உருவாக்கி வந்த ‘நெல்’ இரா.ஜெயராமன் இன்றைய விடியலுக்கு முன்பாகவே இறந்துவிட்டார் என்ற துயரச்  செய்தி அறிந்து வேதனையடைகிறேன்.

காவிரி டெல்டாவான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் பிறந்த ஜெயராமன், 169 வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டு, இயற்கை  வேளாண் விஞ்ஞானி  நம்மாழ்வார் வழியில் செயல்பட்டவர். 5 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய நெல் ஆராய்ச்சிக்கான பண்ணையை நிறுவி, அதில் வெற்றிகரமாக விளைச்சலை உண்டாக்கி, நம்மாழ்வாரால் ‘நெல்’ஜெயராமன் எனப் பெயர் சூட்டப்பட்டவர்.
ஆண்டுதோறும் பாரம்பரிய நெல் கண்காட்சியை நடத்தி இன்றைய தலைமுறையினரும் இயற்கை விவசாயத்தில் ஈடுபடத் தூண்டியவர். அவரது பணிகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
அண்மைக்காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்த நெல் ஜெயராமனை சில நாட்களுக்கு முன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவருக்கு நிதியுதவியும் அளித்து வந்த நிலையில், நெல் ஜெயராமன் மறைந்துவிட்டார் என்ற செய்தி அதிகாலையில் இடி தாக்கியது போல அமைந்தது.
தமிழ்நாட்டின் மண் வளம் காக்க தன் வாழ்வை அர்ப்பணித்த நெல் ஜெயராமனுக்கு என் சார்பிலும் திமுக சார்பிலும் இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர் பிரிவால் துயர்ப்படும் குடும்பத்தினர், நண்பர்கள், இயற்கை ஆர்வலர்கள் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கையை சீர்கெடச் செய்யாமல் அதனை மேம்படுத்தும் வழிகளை நாம் மேற்கொள்வதே நெல் ஜெயராமனுக்கு என்றென்றும புகழ் சேர்க்கும் பணியாக அமையும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக