வியாழன், 6 டிசம்பர், 2018

மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது

தினத்தந்தி :தமிழக சட்டசபையில் மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது என சபாநாயகர் அறிவித்தார்.
சென்னை, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அனைத்துக்கட்சி எம்எல்ஏ-க்கள் தலைமை செயலகம் வருகை தந்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.
 முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
 ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன மேகதாதுவில் அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி தந்தது அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது. தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்  என கேட்டு கொண்டார்.

தொடர்ந்து தி.முக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர்,  மனிதநேய ஜனநாயக கட்சி  எம்.எல்.ஏ. தமிமூன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் தனியரசு  எம்.எல்.ஏ,  ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் ஆகியோர் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் பதில் அளித்து பேசினார். அப்போது,

காவிரியில் தமிழகத்திற்கு அதிக உரிமை உள்ளது.  காவிரி ஒப்பந்த ஷரத்துக்களை மீறும் வகையில் கர்நாடக அரசின் செயல் உள்ளது. பாசன பகுதிகளை கர்நாடகா 27 லட்சம் ஹெக்டேர் வரை உயர்த்தி உள்ளது. பாசன பகுதியை உயர்த்தியதால் தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்கு நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது. 

காவிரி நீர் 20க்கும் மேற்பட்ட தமிழக மாவட்டங்களின் நீர் ஆதாரத்தை பூர்த்தி செய்கிறது.

காவிரி நீர் டெல்டா மக்களுக்கு ஆதாரமாக உள்ளது. பல்வேறு அணைகளை கட்ட கர்நாடகா முன்பிருந்தே  முயற்சித்து வருகிறது. காவிரி பிரச்சனையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது.

சிவசமுத்திரம், மேகதாது நீர்மின் திட்ட விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்படும் கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் அரசிதழில் வெளியிடப்பட்டு தீர்ப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது .

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் மாதந்தோறும் நீர் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்தது.

கர்நாடக அரசின் எந்த திட்டத்திற்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்க கூடாது என ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்று கடிதம் எழுதினேன், பிரதமரை சந்தித்தும் வலியுறுத்தினேன்.

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கிய உடனே, கர்நாடகாவின் தன்னிச்சையான நடவடிக்கையை கண்டித்து பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.

புதிய அணை, நீர்த்தேக்கம் என எதையும் கட்டக்கூடாது என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்  என பேசினார்.

தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என சபாநாயகர் பேசினார்.

தமிழக சட்டசபையில் மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது என சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக