ஞாயிறு, 23 டிசம்பர், 2018

இந்தோனீசியாவில் சுனாமி - 43 பேர் உயிரிழப்பு 584 பேர் காயம்..


BBC :இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் ஏற்பட்ட சுனாமியில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 584 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி ஞாயிறு அதிகாலை இந்தப் பேரிடர் அங்கு நிகழ்ந்துள்ளது.
ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணை ஜாவா கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது. இந்த நீரிணையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், நிலத்துக்கு அடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை உண்டாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
1883ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த க்ரகடோவா எரிமலை வெடித்துச் சிதறியதுதான், நவீன வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றமாகக் கருதப்படுகிறது.
பன்தேக்லங், தெற்கு லாம்பங் மற்றும் சேராங் பகுதிகளில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இருவரைக் காணவில்லை என்றும் பல கட்டடங்கள் சேதமாகியுள்ளன என்றும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு என்றும் முழு நிலவு தினத்தையொட்டி அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததும் இழப்பை அதிகரித்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். எரிமலை வெடிப்புகளை படம் எடுக்கும், நார்வே நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆய்ஸ்டன் லண்ட் ஆண்டர்சன் இரு பெரும் அலைகள் உண்டானதாகக் கூறுகிறார்.
"நான் கடற்கரையில் தனியாக இருந்தேன். எரிமலை வெடிப்பை புகைப்படம் எடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன். அப்போது இரு பெரும் அலைகள் எழுந்தன. ஆனால், முதல் அலை அவ்வளவு வலிமையானதாக இல்லை. ">"முதல் அலைக்குப் பிறகு ஓடிச்சென்று விடுதி அறையில் தூங்கிக்கொண்டிருந்த என் மனைவி மற்றும் மகனை எழுப்பிக்கொண்டிருந்தேன். அலைச் சத்தம் அதிகமாகக் கேட்டது. சன்னல் வழியாகப் பார்த்தபோது மிகப்பெரிய அலை வந்துகொண்டிருந்தது."
"அந்த அலை நாங்கள் தங்கியிருந்த விடுதியையும் தாண்டிச் சென்றது. அங்கிருந்த கார்கள் அடித்துச் செல்லப்பட்டன," என்றார்.
அவரது குடும்பமும், அங்கிருந்த பிறரும் விடுதியில் இருந்து வெளியேறி, அருகில் உள்ள காட்டுக்குள் சென்றனர். அங்குள்ள ஒரு குன்றின்மேல் தற்போது தஞ்சமடைந்துள்ளதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"எரிமலை வெடிப்புக்கு பின் வெளியாகும் பாறைக்குழம்பு, நிலத்தின் அடியில் உள்ள குளிர்ந்த பாறைகளுக்கு இடையில் செல்லும்போது, நிலத்தின் மேற்பரப்புக்கு கீழ் சரிவை உண்டாக்கும்," என்கிறார் எரிமலையியலாளர் ஜெஸ் ஃபீனிக்ஸ்.<>"க்ரகடோவா தீவில் உள்ள எரிமலையின் ஒரு பகுதி நீருக்கடியில் இருப்பதால், எரிமலை வெடிப்பு நிலத்துக்கடியில் உண்டாக்கும் சுனாமி ஏற்படும்."
இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் கடந்த செப்டம்பர் மாதம் உண்டான சுனாமியால் 2000க்கும் அதிகாமானவர்கள் உயிரிழந்தனர்.
சரியாக பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 26, 2004 அன்று 14 ஆசிய நாடுகளில் உண்டான சுனாமியால் 2.28 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்தனர். அந்த சுனாமிக்கு காரணமான நிலநடுக்கம் இந்தோனீசியாவின் வடக்குப் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக