ஞாயிறு, 23 டிசம்பர், 2018

பேராசிரியர் க.ப.அறவாணன் காலமானார் ..

selliyal.com :சென்னை – நெல்லை மனோன்மணியம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவருமான க.ப.அறவாணன் (படம்) இன்று காலமானார்.
9 ஆகஸ்ட் 1941-இல் நெல்லை மாவட்டத்திலுள்ள கடலங்குடி எனும் ஊரில் பிறந்த அறவாணன், வெள்ளை ஆடைகள், தொப்பி என வித்தியாசமான தோற்றத்துடன் தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்தவர்.
நீண்டகாலமாக தமிழர் வரலாறு, சமூகவியல், மானுடவியல், தமிழ் இலக்கியம் எனப் பல்வேறு தளங்களில் தமிழ் உலகில் உரைகள் வழங்கியும், நூல்கள் எழுதியும் வந்தார். இதுவரையில் சுமார் 56 நூல்களை பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார்.

மலேசியாவுக்கும் பலமுறை வருகை தந்திருக்கும் அறவாணன் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார்.

கி.வீரமணி, : பேராசிரியர் முனைவர் க.ப. அறவாணன் மறைந்தாரே!
"தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?" என்ற அரிய நூல் உட்பட தமிழுக்கும் தமிழர்க்கும் ஏராளமான ஆய்வு நூல்களை வாரி வழங்கியவரும், மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவரது மறைவு தமிழுலகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். நமது கழக மேடைகளில் பங்கேற்று, பலமுறை உரையாற்றி மகிழ்ந்தவர்.
அவர்தம் பிரிவால் பெரும் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரின் வாழ்விணையர் தாயம்மாள் அறவாணன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
- தலைவர்,
திராவிடர் கழகம்.
திருச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக