ஞாயிறு, 23 டிசம்பர், 2018

இந்தோனேசியா சுனாமி - உயிரிழந்தோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரிப்பு .. விடியோ


இந்தோனேசியா சுனாமி - உயிரிழந்தோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரிப்புmaalaimalar : இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.  ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இந்திய பெருங்கடலுடன் இணைக்கும் சுந்தா ஜலசந்தி உள்ளது. மேற்கு ஜாவா தீவில் பல எரிமலைகள் உள்ளன. அவற்றில் அனாக் கிரகடாவ் என்ற மலை கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது.
அதில் இருந்து புகை வெளியே வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக் குழம்பும் வெளியாகியது. அப்பகுதி முழுவதும் அதிர்ந்து குலுங்கியதால் சுட்டெரிக்கும் வெப்பமும் வெளியேறியது.
இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சம் அடைந்தனர். இதற்கிடையே, சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து திடீரென ராட்சத சுனாமி அலைகள் தோன்றியது. சுமார் 65 அடி உயரம் (20 மீட்டர்) அலைகள் எழும்பி கரையை வந்தடைந்தன. இந்த சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின.

; அங்கு சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின. சாலைகள், ஓட்டல்களுக்குள் கடல்நீர் புகுந்ததால் பீதி அடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
சுனாமி தாக்குதலில் முதல் கட்டமாக 43 பேர் பலியானதாக தகவல் வெளியானது. பின்னர் உயிர்ச்சேதம் 168 ஆக உயர்ந்தது. மேலும், 750 பேர் காயம் அடைந்தனர். 30 பேரை காணவில்லை.
இந்நிலையில், இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.
> பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலால் பலியானோருக்கு  ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சுந்தா எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக