ஞாயிறு, 16 டிசம்பர், 2018

2018ஆம் ஆண்டின் தீர்ப்பு சொல்லும் கதைகள்

சவுக்கு : தேர்தல் முடிவுகள் தவிர்க்க முடியாததொரு தன்மையைக் கொண்டவை. அறிவிக்கப்பட்டவுடன் அவை முடிந்துபோன விஷயமாகிவிடுகின்றன. தீர்ப்பு தொடர்பான எண்கள் விருப்பு வெறுப்பின்றி ஆராய இடம் தருகின்றன. தேர்தல் முடிவைப் பற்றிப் படிக்கும்போதும் தொலைக்காட்சியில் பார்க்கும்போதும் அவற்றை நாம் இருவிதமான புரிதல்களை உணர்கிறோம்.
எனது நண்பர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் காலூன்றி நிற்கும் தத்துவவாதி. வாழ்நாளின் பெரும்பகுதியை கற்கள், கடிகாரங்கள், காலஅட்டவணை, தேர்தல்கள் போன்றவை பற்றி யோசிப்பதில் நேரத்தைச் செலவழிக்கிறார். முடிவுகள் வெளியான நாளில் கவனத்துடன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்; அவரருகே நான் அமர்ந்திருந்தேன். தேர்தல் செய்தி அறிக்கைகளை அவர் ‘திசை தவறிய இனவரைவியல் (மானுடவியல் தொடர்பான ஆய்வு)’ என வர்ணித்தார். தேர்தல் என்பது ஒருவிதமான கதை சொல்லும் கலை என்றும் முடிவுகள் அதைச் சிதைப்பதாகவும் கூறினார். முடிவுகளின் தன்மை,
போட்டியிட்டவர்கள் யார் யார், போன்ற நாடகத்தனமான விவரங்கள் அதீதமாகவும் அப்போதைக்குத் திருப்தி தரும்படியும் இருக்கும். எதிர்காலத்தை உருவாக்கும் பல்வேறு ஆழமான விசைகளின் சங்கமம் என்ற விதத்தில் தேர்தலை யாரும் பார்ப்பதில்லை என்றார்.
நாடாளுமன்றத் தேர்தல்கள் மிகவும் நெருங்கிவிட்ட சமயத்தில் இடைத்தேர்தல் போல நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களை இந்தியாவின் குரலாகக் கருதலாம். தேர்வுகளையும், சாத்தியக்கூறுகளையும் நன்கு யோசித்துதான் வாக்காளர் வாக்களிக்கிறார். உரத்து சிந்திக்கும் அவர், புதிய தேர்வுகளைச் சீர்தூக்கிப் பார்க்கிறார். சிந்தித்தல், மீண்டும் சிந்தித்தல் ஆகியன மூன்று மட்டங்களில் நிகழ்கின்றன. வாக்கு என்பது ரூபாய் நோட்டு மாதிரி, எதிர்காலத்திற்காகப் பந்தயம் கட்ட மக்களை ஊக்குவிக்க இத்தேர்தல்களை காங்கிரஸ் பயன்படுத்துகிறது. தன் மீது நம்பிப் பணம் கட்டலாம் என்று மற்ற கட்சிகளை நம்பவைக்க இத்தேர்தல்களை காங்கிரஸ் பயன்படுத்துகிறது. கூட்டணி இன்னும் இறுதியாக்கப்படவில்லை. ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை காங்கிரஸால் ஒன்றுதிரட்ட முடியுமா என்பதுதான் முதல் கேள்வி. இது முடிவான பிறகுதான் காங்கிரஸுடன் சேரலாமா, பாஜகவுடன் சேரலாமா இல்லை மூன்றாவது அணி தொடங்கி குட்டையைக் குழப்பலாமா என்று பல எதிர்க்கட்சிகள் முடிவு செய்யும்.
இத்துடன் இன்னொன்றும் ஏககாலத்தில் நிகழ்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகள் தமக்கே உரிய நிதர்சனத்தைக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சியில் முடிவுகள் அறிவிக்கப்படும்போது வாக்காளர்கள் கருத்தாளர்களாக மாற, இந்திய வீடுகள் அனைத்தும் விவாத அரங்குகளாக மாறித் தேர்தலை அலசுகின்றன. வாக்குக் கணிப்பு முடிவுகள் இவ்வாதத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. தொலைக்காட்சியில் தேர்தலின் தேர்வுகள் / வியூகங்கள் பற்றிப் பலரும் அலச வாக்காளர் இவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். தேர்தல் வியூகங்களில் ‘வீட்டு ஜனநாயகம்’ முக்கியமான அங்கமாக ஆகிவிட்டது. வீட்டு ஜனநாயகம், நாட்டுப்புற விளையாட்டைப் போல் ஒவ்வொரு சேனலுக்கும் இடையே போட்டியைத் தூண்டுகிறது. ஒவ்வொரு சேனலும் வாக்களிக்கும் விதங்களை ஒட்டிப் பல விதமான அலசல்களை முன்வைக்கிறது. தேர்தலை விட இதைத்தான் வாக்காளர்கள் அதிகம் விரும்புகிறார்கள். வாக்காளர் ஏதேனும் ஒரு கட்சிக்கு வாக்களிப்பதுடன் எந்த சேனலின் கணிப்பு சரியானது என்பதிலும் ஆர்வம் செலுத்துகிறார். கணிக்கும் முறைகளில் குறைகளும் போதாமைகளும் இருந்தாலும் வாக்குக் கணிப்புகள் என்பவை வரவேற்பறை ஜனநாயகத்தின் விளையாட்டுகள் என்று நான் சொல்லுவேன்.
மூன்றாவதாக, ஊடகத்தினரால் ‘அரையிறுதிப் போட்டி’ என்றும், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான இறுதியான முன்னோட்டம் என்றும் சொல்லப்பட்டவை இத்தேர்தல்கள். இந்தக் கதையாடலில் பாஜக மையமாகிறது. மக்களின் சந்தேகங்களைத் தீர்த்துவைத்து, தன்னைத் திருத்திக்கொண்டு வெற்றிப் பயணத்தைத் தொடங்க ஆயத்தமாகிறது.
தேர்தல்களை இத்தகைய கதையாடல்களாகப் பார்த்தால், தேர்தலைக் கணிப்பதில் பல விதமான பாணிகளும் சர்ச்சைகளும் நிறைந்திருக்கும். பணமும் வளர்ச்சித் திட்டங்களும் தேர்தல் விளையாட்டுக்கான புதுச் சந்தையாகும் தேர்தலின் ஆணாதிக்கத் தன்மை அப்போதுதான் நமக்குத் தெரியவருகிறது. பொருளோ, சிந்தாந்தத்தின் மகிமையோ வாக்காளர்களைக் கவர்வதில்லை. வளர்ச்சி, திட்டம் போன்ற வார்த்தைகள் ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ வருவதை அறிவிக்கின்றன. தனக்குச் சில சலுகைகள் கிடைக்குமென வாக்காளர் புரிந்துகொள்கிறார். மத்தியப் பிரதேசத்திலும் (சிவராஜ் சிங் சௌஹான்) ராஜஸ்தானிலும் (வசுந்தரா ராஜே சிந்தியா) வெளியேறும் முதல்வர்களானாலும் சரி, மீண்டும் வென்றுள்ள தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவாக இருந்தாலும் சரி, அவர்கள் அளித்துள்ள வாக்குறுதிகள் பல. வசுந்தராவின் ஆட்சியைப் பார்த்தால் ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ எதுவும் கொண்டுவரவில்லை என்பதுபோல் தெரிகிறது. பல்வேறு குழுக்கள் தேர்தலை ஒரு கணக்கியல் அமைப்பாக மாற்றி ஒவ்வொரு ஜாதி ஆட்களும், ‘எங்களுக்கு என்ன கிடக்கும்’ எனக் கேட்கும்படி ஆக்கிவிட்டன. வாக்கு என்பது தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் ஏடிஎம் மையங்களில் காசாக்கிக்கொள்ளக்கூடிய டோக்கனாக மாறிவிட்டது.
மாநிலங்களின் நிலைமை
ஒன்று மட்டும் தெளிவு. மாநிலப் பெரும்புள்ளிகள் தத்தமது கோட்டைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவது கடினம். சௌஹானுக்கும் 2003 முதல் முதல்வராக சத்தீஸ்கரில் இருந்து வந்த ரமன் சிங்குக்கும் இது பொருந்தும். தமது கோட்டையில் உள்ள வாக்குகளை அவர்கள் நம்பினர். ஆனாலும் ம.பி.யிலும் சத்தீஸ்கரிலும் அவர்கள் மண்ணைக் கவ்வினர். திரிசங்கு சொர்க்காம் போல் முன்னணி, பின்னணி என்றிருந்த ராஜஸ்தானில் காங்கிரஸ் முந்திவிட்டது. வசுந்தரா ராஜே மீது கட்சியினருக்கும் வெளியில் கட்சிக்கு இருப்பவர்களுக்கும் கோபம் இருந்தது. இதனால் ராஜஸ்தான் தேர்தல் முடிவு பாஜக உட்பூசலால் தானாக ஏற்படுத்திக்கொண்ட காயமா அல்லது காங்கிரஸின் வியூகத்தால் நிகழ்ந்ததா எனத் தெளிவாகத் தெரியவில்லை. ராஜேவின் தயக்கத்தை காங்கிரஸ் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு, இம்மாநிலத்தில் திரும்ப ஆட்சியைப் பிடிப்பதாக நம்பிக்கை ஊட்டியது. அஷோக் கேலாட் முதல் சச்சின் பைலட் வரை எல்லா காங்கிரஸ்காரர்களும் இங்குமங்கும் சுற்றி நிலைமையைச் சாதகமாக்கினர்.
ஒவ்வொரு மாநிலமும் தனித்தனிக் கூண்டுகளாக ஆகிவிட்டன. ‘ராமர் கோயில்’ திட்டத்தின் நிழல் 2019 தேர்தலுக்கு முன்பு அவற்றின் மேல் விழத் தயாராக உள்ளது. பிராந்திய அரசியல் என்றில்லாமல் தேசிய அளவில் இதைச் செய்ய வேண்டுமென்பதுதான் அவர்களுடைய வியூகம் என்பது தெளிவு. காங்கிரஸ் தற்போது உயிர்த் துடிப்புடன் இருப்பதால் ராமர் கோயில் கோரிக்கை இன்னும் தீவிரமாகலாம். ஒரு விதத்தில் தேர்தலின் மிகப்பெரும் விளைவு இதுதான். பாஜக என்றாலே தோற்கடிக்கப்பட முடியாத கட்சி என்ற முத்திரை கிழிக்கப்பட்டுவிட்டது; மாநில அளவில் காங்கிரஸ் திறனுடனும் கட்டுக்கோப்பாகவும் இருக்கிறது. மேலும், தமக்கு நல்ல வாய்ப்பு இருப்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்து தாம் ஒற்றுமையாக இருந்தால்தான் நல்லது நடக்குமென உணர்கின்றன.
இரண்டாவதாகத் தெளிவாகத் தெரிவது என்னவெனில் மாநில அளவிலான அரசியலின் நுணுக்கங்களும் விளைவுகளும் தேசிய அளவுத் திட்டங்களை விடவும் வித்தியாசமானவை. இங்கு முதல்வரே முக்கியம். தேசியத் தலைவர்கள் இப்போதைக்குப் பின்னணியில்தான் இருக்க வேண்டும். ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையும் அரசியல் மந்த நிலையும் பலரை வாட்டுகின்றன. காங்கிரஸின் செயலற்ற தன்மையை இம்முடிவுகள் மாற்ற வேண்டும். மாநிலங்களில் நிலவரம் தேசிய அளவில் இருப்பதை விடவும் துடிப்பாக உள்ளது. தேசியத் தலைமை இந்தத் தேர்தல் முடிவுகளால் வலுப்பெற்று மேலும் பல துடிப்பான வியூகங்களை எதிர்காலத்திற்கென வகுத்தாக வேண்டும்.
நெருக்கமான போட்டிஒரு எச்சரிக்கை
 நெருக்கமான போட்டிகளின் அபாயம் தெளிவாகத் தெரிகிறது. வெற்றிக்கான வித்தியாசம் குறைவாக இருந்தால், தரகர்களின் பங்கு முக்கியமானதாகிறது. இதுபோல் நடக்காதவாறு பார்த்துக்கொள்வது வாக்காளர்களின் கடமையாகும். வாக்குகள் வீணாகப் பிரிந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள ஏற்றவறு வியூகம் அமைப்பது எதிர்க்கட்சிகளின் வேலை. இம்முடிவுகள் எதிர்காலத்துக்கான ஒரு திட்டமிடலைத் தந்துள்ளன.
தேர்தல்களைப் பல்வேறு சாத்தியக்கூறுகள் உள்ள விளையாட்டாகப் பார்க்குமாறு இது ஜனநாயக இந்தியாவிடம் சொல்கிறது. ஒரு கட்சிக்கும்பெரிய அளவில் பெரும்பான்மை கிடைக்கும் நிலைமையும் தோற்கடிக்கப்பட முடியாத தன்மையும் தேர்தல் விளையாட்டை சுவாரசியமற்றதாக ஆக்கிவிடுகின்றன என்பது தெளிவு. இந்திய ஜனநாயகம் தன்னைப் பற்றிக் கற்றுக்கண்டிருப்பது இதைத்தான்.
 ஷிவ் விஸ்வநாதன்
(ஷிவ் விஸ்வநாதன், மாற்றுக் கருத்துக்கள், புதிய பார்வைகள் ஆகியவற்றுக்கான கம்போஸ்ட் ஹீப் என்னும் அமைப்பின் கல்வியாளர்.)
நன்றி:thehindu.com/opinion/lead/verdict-2018-a-democratic-fable/article25727931.ece 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக