வெள்ளி, 16 நவம்பர், 2018

ஆந்திராவில் மாநில அரசு அனுமதியின்றி சிபிஐ சோதனை செய்ய தடை: சந்திரபாபு நாயுடு அதிரடி!

NDTV : ஆந்திர பிரதேசத்தில் அனுமதியின்றி சிபிஐ எந்த ஒரு சோதனையும்,
விசாரணையும் மேற்கொள்ளக்கூடாது என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திராவில் சிபிஐ சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது.
சட்டப்படி, டெல்லியில் மட்டுமே சிபிஐ அதிகாரம் பெற்றது. பிற மாநிலங்களில் நுழைய அம்மாநிலங்களில் ஒருமனதான சம்மதத்தை பெற வேண்டியது கட்டாயமாகும்.
ஆந்திராவில் சிபிஐ-க்கான இந்த அனுமதி தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால், ஆந்திராவில் மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஐ எந்த ஒரு வழக்கிலும் தலையிட முடியாது. இதைத்தொடர்ந்து சிபிஐ பணிகளை மேற்கொள்ள மாநில புலனாய்வு அமைப்புகளுக்கு ஆந்திர அரசு அதிகாரம் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நவ.8 ஆம் தேதி ஆந்திராவில் சிபிஐக்கு வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது ரகசிய ஆணை தற்போது வெளியே தெரியவந்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம், ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கவில்லை எனக்கூறி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து சந்திரபாபு நாயுடு விலகினார்.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் மத்திய அரசு தனது சொந்த நலன்களுக்காக, சிபிஐ மீதான நம்பகத்தன்மையை பலவீனப்படுத்துகிறது என சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி செய்திதொடர்பாளர் லங்கா தினகர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, கடந்த 6 மாதங்களாக சிபிஐ-யில் நடக்கும் சம்பவங்களுக்கு பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தனது அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான கருவியாக சிபிஐ பயன்படுத்திக் கொண்டதன் மூலம் அதன் சுதந்திரம் இழந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

COMMENT
சந்திரபாபு நாயுடுவின் இந்த நடவடிக்கைக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக