வெள்ளி, 16 நவம்பர், 2018

அக்ஷாரவின் படங்களை நடிகை ரதியின் மகன் நடிகர் தனுஜ் லீக் செய்தாரா?

அக்ஷாரா .. தனுஜ்
மின்னம்பலம் : நடிகை அக்‌ஷரா ஹாசனின் புகைப்படங்களை வெளியிட்டது
பிரபல நடிகையின் மகன் என்ற சந்தேகத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
கமல் ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. இதையடுத்து தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் யாரால் வெளியிடப்பட்டன என்று கேள்விகள் எழுந்தன. இவ்விவகாரம் குறித்து நடிகை அக்‌ஷரா ஹாசன் சமீபத்தில் மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ்வழக்கு விசாரணையில் தற்போது புதிய திருப்பமாக அக்‌ஷராவின் நண்பர் தனுஜ் வெளியிட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

1980களில் உல்லாசப் பறவைகள், முரட்டு காளை போன்ற தமிழ்ப் படங்களில் நடித்த நடிகை ரதியின் மகனும் நடிகருமான தனுஜ் விர்வானியைக் காதலித்து வந்தார் அக்‌ஷரா. பிறகு கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும்
பிரிந்துவிட்டார்கள். தற்போது வெளியான புகைப்படங்கள், அக்‌ஷரா 2013 வரை பயன்படுத்திய ஐ போன் 6-ல் எடுக்கப்பட்டவை. தன்னுடைய புகைப்படங்களை 2013ஆம் ஆண்டு தனுஜிடம் பகிர்ந்துள்ளார் அக்‌ஷரா. இதனால் சமீபத்தில் வெளியான அக்‌ஷராவின் தனிப்பட்ட புகைப்படங்கள் தனுஜால் கசியவிடப்பட்டதா என்கிற கோணத்தில் மும்பைக் காவல்துறை விசாரணை செய்து வருவதாகவும் இதுகுறித்து தனுஜை விசாரணை செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அக்‌ஷராவின் புகைப்படங்களை தான் கசியவிடவில்லை என தனுஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவருடைய செய்தித்தொடர்பாளர் மும்பை மிரருக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். அக்‌ஷரா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பல வருடங்கள் அக்‌ஷராவும் தனுஜும் டேட்டிங் செய்தார்கள். ஆனால் தற்போது அவர்கள் ஒன்றாக இல்லை. எனினும் அவர்கள் நண்பர்களாக நீடிக்கிறார்கள். அவர்கள் இப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இரு நாட்களுக்கு முன்புகூட கிண்டலாகப் பேசிக்கொண்டார்கள். அவர்களுடைய உரையாடல்களை தனுஜ் வைத்துள்ளார். தேவைப்பட்டால் அதையும் வெளியிடுவோம். நட்பு ரீதியில் அவர்கள் செய்துகொண்ட கிண்டல், அவர்களுடைய பிரிவினால் நட்பு மோசமடையவில்லை என்பதைக் காட்டுகிறது. அவர்கள் இன்னமும் நண்பர்களாகத்தான் உள்ளார்கள். ஒருவேளை தனுஜை அக்‌ஷரா குற்றம் சாட்ட வேண்டுமென்றால் அவர் பல மாதங்களாக தனுஜிடம் பேசிக்கொண்டிருக்கமாட்டார். அவர்கள் பிரிந்து கிட்டத்தட்ட ஒரு வருடமாகிறது. அக்‌ஷரா எதிர்கொண்ட இந்தப் பிரச்சினையை தனுஜ் நன்கு அறிவார். காவல்துறையின் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க தனுஜ் தயாராக உள்ளார். குற்றம் செய்தவர் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக