சனி, 10 நவம்பர், 2018

ராஜபக்‌ஷே பிடியில் சிறிசேனா.. இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு!

மின்னம்பலம்: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு! ராஜபக்‌ஷே பிடியில் சிறிசேனாஇலங்கை அதிபர் மைத்ரி சிறிசேனா நேற்று (நவம்பர் 9) அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டார். நவம்பர் 10 நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது. நாடாளுமன்றக் கலைப்பு அறிவிப்போடு வரும் 2019 ஜனவரி 5 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார் சிறிசேனா.
கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்துவிட்டு ராஜபக்‌ஷேவை எப்படிப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாரோ அதுபோலவே இந்த நாடாளுமன்றக் கலைப்பும் சட்ட விரோதமானது என்று கொழும்பில் எதிர்ப்புக் குரல்கள் வலுத்துள்ளன.
ராஜபக்‌ஷேவுக்குப் பெரும்பான்மை இல்லை
ராஜபக்‌ஷேவைப் பிரதமராக நியமித்ததைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் எவ்வளவு முயன்றும் ராஜபக்‌ஷேவுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிட்டவில்லை.
225 இடங்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷே பெரும்பான்மை இலக்கான 113 இடங்களை தொடுவதற்காக பல்வேறு குதிரை பேரங்கள் நடத்தப்பட்டன. ஒரு எம்.பி.க்கு 48 கோடி ரூபாயில் இருந்து 300 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது.

கொழும்பில் இருக்கும் புத்தர் கோயிலில் வைத்து பணமும், அதன் பிறகு அமைச்சர் பதவியும் அளிப்பதாக வாக்குறுதி அளித்ததாகச் செய்திகள் வந்தன.
இந்தப் பண பேரத்துக்குப் பின்னரும் ராஜபக்‌ஷேவுக்குப் பெரும்பான்மை கிடைப்பது உறுதி ஆகாததால், வரும் 14ஆம் தேதி கூடவிருந்த நாடாளுமன்றத்தை நவம்பர் 10ஆம் தேதி முதல் கலைப்பதாக அறிவித்திருக்கிறார் அதிபர் சிறிசேனா.
இதுவும் சட்ட விரோதம்
2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 19-வது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு 150 எம்.பி.க்களின் பரிந்துரை வேண்டும். ஆனால் அதன்படி எதுவும் இல்லாமல் சட்ட விரோதமாக சிறிசேனா கலைத்துவிட்டார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிபருக்கு அரசியல் சட்டப்படி அதிகாரம் இல்லை என்றும் தெரிவிக்கிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள்.
19ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தில் முக்கியப் பங்கு வகித்தவரும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் ஜெயம்பதி விக்ரம ரத்னே இது முழுக்க முழுக்க சட்ட விரோதமான அறிவிப்பு என்கிறார்.
சர்வதேச அழுத்தம்
சிறிசேனாவின் நாடாளுமன்ற முடக்கத்துக்கும் ராஜபக்‌ஷேவை பிரதமராக நியமித்தமைக்கும் ஒரு சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஒரு சில நாடுகளே ஆதரவாக இருந்தன. மற்ற உலக நாடுகள் அனைத்தும் நாடாளுமன்றத்தைக் கூட்டச் சொல்லி வற்புறுத்தின.
நேற்று முக்கிய நகர்வாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இங்கிலாந்து ஹை கமிஷன் உயரதிகாரிகள் , நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர்கள் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை நீக்குவதற்ககாக உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறும், உடனே பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பை நடத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தாமதிக்குமானால் சர்வதேசத்தில் இலங்கைக்கு இருக்கின்ற நன்மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், முதலீட்டாளர்கள் இலங்கையை நாடுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இதனால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதாளத்தை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல இலங்கைகு பல்வேறு நிதி உதவிகள் செய்துவரும் ஜப்பான், ராஜபக்‌ஷேவைப் பிரதமராக ஏற்க முடியாது என்று தெரிவித்தது.
இதனால் முன்னெப்போதும் இல்லாத பெரிய சர்வதேச அழுத்தத்துக்கு ஆளானார் சிறிசேனா.
எச்சரித்த எம்.பி.
ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.யான ஹர்ஷ டி செல்வா நேற்று மாலையே தன் ட்விட்டரில் ஒரு சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.

“ராஜபக்‌ஷேவுக்குப் பெரும்பான்மை இல்லை என்பது தெரிந்துவிட்டதால் நாடாளுமன்றத்தையே கலைக்கும் முடிவுக்கு சிறிசேனா வந்துவிட்டதாக தகவல்கள் பரவிக் கிடக்கின்றன. நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டாலும் பல்வேறு அமைச்சர்களை சிறிசேனா நியமித்திருக்கிறார். அவர்களை வைத்து தேர்தல் பணிகளில் அரசின் செல்வாக்கைச் செலுத்த திட்டமிட்டிருக்கிறார் சிறிசேனா”என்று எச்சரித்திருந்தார். அவரது
எச்சரிக்கை சில மணி நேரங்களிலேயே பலித்துவிட்டது.
அன்றே குறிப்பிட்ட ராஜபக்‌ஷே
அக்டோபர் 29ஆம் தேதி மின்னம்பலம் பதிப்பில், மெஜாரிட்டி வேட்டையில் ராஜபக்‌ஷே குடும்பம் என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தச் செய்தியில் இலங்கையின் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அக்டோபர் 28 ஆம் தேதி ராஜபக்‌ஷே வெளியிட்ட அறிக்கையை சுட்டிக் காட்டியிருந்தோம்.
பிரதமர் அலுவலக இலச்சினை பொறுத்த லெட்டர் ஹெட்டில் இருந்து ராஜபக்‌ஷே வெளியிட்ட அறிக்கையில், “ஒரு வெறுப்பு அரசியல் கூட்டணியின் ஆட்சி முடிந்து இலங்கையில் புதிய ஜனநாயக ஆட்சி ஆரம்பமாகியுள்ளது. இன்று நாடு ஒரு நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது.
நாட்டை மேம்படுத்திட நான் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் கோருகிறேன். நாட்டில் உள்ள சிங்களர்கள், தமிழர்கள், புத்த மதத்தினர், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என அனைவரும் இந்த அரசில் பங்குபெற அழைக்கிறேன். நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்ட மாகாண கவுன்சில் தேர்தல்களை நடத்துவோம், கூடவே நாடாளுமன்றத்துக்கான தேர்தலையும் கூடிய விரைவில் நடத்துவோம்” என்று ராஜபக்‌ஷே கூறியிருப்பதை சுட்டிக் காட்டியிருந்தோம். ராஜபக்‌ஷே என்ன கூறினாரோ அதையே இன்று செயல்படுத்தியிருக்கிறார் சிறிசேனா.
இனவாதத் திட்டம்
மேலும், மீண்டும் இனவாதத்தை கூர்தீட்டும் ராஜபக்‌ஷே என்ற செய்தியைக் கடந்த நவம்பர் 7ஆம் தேதியன்று மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம்.
அதில், “எதிர்வரும் 14.11.18 அன்று, இலங்கை நாடாளுமன்றம் கூட இருக்கும் நிலையில் 225 உறுப்பினர் கொண்ட அவையில், ராஜபக்சேவின் பலம் 104 ஆக உயர்ந்துள்ளது. ரனிலின் ஐக்கிய தேசியக் கட்சி 105 இருந்து பலம் 97 ஆக குறைந்துள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 15 பேர் ஆதரவு அவர்களுக்கு தரப்பட உள்ளது. மொத்தம் 112.
ராஜபக்‌ஷே நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றாலும் வெல்லாவிட்டாலும் கூடிய விரைவிலேயே நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்தும் படி அதிபர் சிறிசேனா பரிந்துரைக்கப் போகிறார் என்றும் அந்தத் தேர்தலில் சிங்கள இன வாதத்தை ஒருங்கிணைத்து மீண்டும் வெற்றிபெற ராஜபக்‌ஷேஷே திட்டமிட்டிருக்கிறார் என்றும் கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன” என்று குறிப்பிட்டிருந்தோம்.
மேலும், “தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எழுத்துபூர்வமான உத்திரவாதம் அளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியிருக்கிறது. அதை ரனில் நிச்சயம் நிறைவேற்ற உறுதி அளிப்பார். அதனால் அவருக்கு பெரும்பான்மையான சிங்கள ஆதரவு பெருமளவில் குறைந்துவிடும். அதன் பின் தேர்தல் நடந்தாலும் ராஜபக்‌ஷே, சிங்கள பெரும்பான்மை இனவாதத்துக்கு தான் ஆதரவாகவும் ரனில் தமிழர்களுக்கு ஆதரவானவர் என்ற பிம்பத்தையும் ஏற்படுத்தித் தேர்தலில் வெற்றிபெறலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார்களாம்” என்றும் சுட்டிக் காட்டியிருந்தோம்.
இந்த சூழலில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி ரனிலுக்கு பதிலாக சஜத்தை தலைவராகக் கொண்டு தேர்தலை சந்திக்கலாமா என்றும் திட்டமிட்டுவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக