சனி, 10 நவம்பர், 2018

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கு; மாறன் சகோதரர்கள் மீது மீண்டும் குற்றச்சாட்டு பதிவு: சென்னை உயர் நீதிமன்றம்

tamil.thehindu.com : சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீதும் மீண்டும் முறையாக குற்றச் சாட்டைப் பதிவு செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்த தயாநிதி மாறன் தன்னுடைய அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்தி சன் தொலைக்காட்சிக்காக சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதையடுத்து 700-க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் அதிவேக இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு ரூ. ஒரு கோடியே 76 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதிமாறன், கலாநிதிமாறன், பிஎஸ்என்எல் பொதுமேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், பிஎஸ்என்எல் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச்செய லாளர் கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலெக்ட்ரீசியன் ரவி ஆகிய 7 பேர் மீதும் சிபிஐ கடந்த 2007-ல் வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை கடந்த 11 ஆண்டுகளாக சென்னை 14-வது சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீதும் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வசந்தி முன்பாக இரண்டாவது முறையாக குற்றச்சாட்டுப்பதிவு செய்யப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுப் பதிவை ரத்து செய்யக் கோரி மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நடந்தது.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் நீரஜ் கிஷன் கவுல், அமித் தேசாய், பி.வில்சன், ஏஆர்எல்.சுந்தரேசன் ஆகியோரும் சிபிஐ தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் மற்றும் சீனிவாசன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.
இந்நிலையில் நீதிபதி நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘‘தங்கள் மீதான குற்றச்சாட்டுப்பதிவை ரத்து செய்யக் கோரி மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள மனு தள்ளு படி செய்யப்படுகிறது. ஆனால் இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்கு எதிராக குற்றச் சாட்டுப்பதிவு என்பது குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டத் தின்படி முறையாக பதிவு செய்யப்படவில்லை.
எனவே இவ்வழக்கில் உள்ள ஆவணங்களை கவனமாக பரிசீலித்து உரிய ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப் பட்ட அனைவர் மீதும் மீண்டும் புதிதாக தேவையான குற்றச்சாட் டுக்களை பதிவு செய்ய வேண் டும் என சிபிஐ சிறப்பு நீதி மன்றத்துக்கு உத்தரவிடுகிறேன்.
தேவைப்பட்டால் இந்த மறுகுற்றச்சாட்டுப்பதிவுக்கு சிபிஐ தரப்பும் விசாரணை நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும்’’ என உத்தரவிட் டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக