சனி, 10 நவம்பர், 2018

கிணறு இல்லையேல் சென்னையில் வாழ்வு இல்லை!

கிணறு இல்லையேல் சென்னையில் வாழ்வு இல்லை!மின்னம்பலம்: நரேஷ் சென்னைக்குச் செய்ய வேண்டியவை – 17<“சென்னையில் வசிப்பவர்கள் மிகவும் அலட்சியமாகத் தங்கள் இல்லங்களில் உள்ள கிணறுகளை மூடிவிடுகிறார்கள். உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். வருங்காலத்தில் இந்தக் கிணறுகள் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் சென்னையில் வாழ முடியும்.” - இந்தியாவின் மழை மனிதன் சேகர் ராகவன்.
சென்னையிலேயே சுவையான இயற்கையான நிலத்தடி நீர் கிடைக்கும் இடம் - பெசன்ட் நகர். கடற்கரையில் இருந்து கண் அளக்கும் தூரத்தில் இருந்தாலும், உப்புத் தன்மை அறவே இல்லாத அமுதமான நீர் ஊறும் பெரு நிலம் பெசன்ட் நகர். இதற்கு மிகமுக்கியக் காரணம், பெசன்ட் நகர் பாலவாக்கம், கொட்டிவாக்கம் ஆகிய இடங்கள் யாவும் பள்ளமான பகுதிகள். பெய்யும் மழை நீர் இயற்கையாகவே வடிந்து வந்து தேங்கும் நிலங்களாதலால், இவ்விடங்களில் இருக்கும் நீர் மிகுந்த சுவையுடன் இருக்கும்.
அப்போதெல்லாம், வெறும் 6 அடிகளில் ஊற்று பொங்கும். கிணறுகளில் இருக்கும் நீரைக் கைகளால் மொண்டு பருகலாம். ஆனால் இன்று ஆயிரம் அடிகளுக்கு அடியில் போய்விட்டது நிலத்தடி நீர்.
“படித்தவர்கள்தான் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். படித்தவர்கள் யாருக்குமே நிலத்தடி நீர் பற்றிய புரிதல் இல்லை. நிலத்தடி நீர் என்பதே மழைநீரிலிருந்துதான் வருகிறது என்கிற காமன் சென்ஸ்கூட இல்லாமல்தான் மக்கள் இருக்கிறார்கள்.” என்கிறார் சேகர் ராகவன்.
படிக்காத மக்களுக்கு நிலத்துக்கு அடியில் இருந்து ஊறும் நீர் மட்டும்தான் தெரியும். அவர்கள் இயற்கை தங்களுக்கு வழங்கிய நீரை மட்டும்தான் பயன்படுத்தினார்கள். படித்த அறிவாளிகளுக்கு என்று நிலத்துக்கு நூறு அடிக்கு கீழ் நீர் இருக்கிறது என்பது தெரிந்ததோ, அப்போது அதை சுரண்டும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார்கள். நிலத்துக்கு அடியில் இருக்கும் நீரை கண்டுபிடித்து சுரண்டத் தெரிந்தவர்களுக்கு, அந்த நீர் மழைநீர்தான் என்பதும் திரும்ப அதனை நிலத்தினுள் நிறைக்கவேண்டும் என்ற அடிப்படை அறிவியலும் புரியாமல்போனது ஆச்சரியம்தான்!

இதை விளக்க அறிவாளிகளின் இல்லக் கதவுகளை இவர் தட்டியபோது, மிக மோசமாக நடத்தப்பட்டார். 1995க்கு முந்தைய காலகட்டம். வேலைக்கு சென்றுகொண்டிருந்த நேரங்களில் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுகளில் மிதிவண்டியை மிதித்துக்கொண்டு தெருத் தெருவாகச் சென்று மழை நீர் சேமிப்பின் அவசியத்தை விளக்க முற்பட்டார்.
“மழை நீரைச் சேமிக்க வேண்டும். அது ஒன்றும் பெரிய வேலை அல்ல. மழை நீரைச் சேமிப்பதென்றால், பெய்யும் மழை பூமிக்குள் அனுமதிக்க வேண்டும். அவ்வளவுதான்! என்று சொல்வேன். ஆனால், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மெத்தப் படித்தவர்கள், என்னை வளாகங்களுக்குள்ளேயே அனுமதிக்கமாட்டார்கள். காவலாளியிடம் சொல்லி வெளியில் துரத்துவார்கள்” என்றார்.
இந்த அனுபவங்கள்தான் அவரை ஒரு இயக்கத்தை உருவாக்க வைத்தது. 1995ஆம் ஆண்டு முதல் இன்றுவரை அதை நடத்தி வருகிறார். வீடு வீடாகச் சென்றவரை பின்தொடர்ந்த பத்திரிக்கைகள், அவரின் வேலையை எளிமையாக்கின. அவர் தேடிக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் அவரைத் தேட ஆரம்பித்தார்கள். அப்படி உருவான இயக்க இல்லம்தான் ‘மழை இல்லம்'.
மந்தவெளிப்பாக்கத்தில் இயங்கிகொண்டிருக்கும் அவ்விடத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்தும், நிலத்தடி நீர் தேவை குறித்தும் விரிவான விழிப்புணர்வு வழங்கப்படும். விழிப்புணர்வும் புத்தகங்களும் இலவசம், விசிட் அடிப்பது அவசியம். ஆங்கிலத்திலும் தமிழிலும் மழை நீர் சேமிப்பு குறித்த சின்னச் சின்னப் புத்தகங்கள் இருக்கின்றன. மழை நீர் சேமிப்பு குறித்த விளக்க வரைப்படங்கள் இருக்கின்றன.
இவ்வில்லத்தை 2002ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். அதே வருடம் அக்டோபரில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, பழைய வீடு புது வீடு என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து இல்லங்களிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஜெயலலிதா காட்டிய அக்கறை போற்றுதலுக்குரியது. சட்டம் இயற்றியதிலிருந்து ஒரு வருட அவகாசம் வழங்கப்பட்டது. 9 மாதங்கள் உறங்கிக்கொண்டிருந்த அரசு அதிகாரிகளும் மக்களும், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கவில்லை என்றால் குடிநீர் இணைப்பைத் துண்டித்துவிடுவோம் என்று தமிழகம் முழுவதும் செய்யப்பட்ட பிரச்சாரத்தால் கடைசி மூன்று மாதங்களில் கடனே என்று மழை நீர் சேமிப்புக் கட்டமைப்புகளை உருவாக்கினார்கள்.

இந்த அவசர கதி கட்டமைப்புகள் காலப்போக்கில் கரைந்து சிதைந்துவிட்டன. நொடிந்துபோனார் சேகர் ராகவன். அப்போதுதான் இது சட்டத்தால் சீர்செய்யக்கூடிய செயல் அல்ல என்பது அவருக்குப் புரிந்தது. அன்றிலிருந்து சட்டங்களை இயற்றுவதை விட்டுவிட்டு, மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படுத்துவதே நிரந்தரமான தீர்வு என்பதை புரிந்துகொண்டார். அதன் விளைவாகவே இன்றுவரை மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது மழை இல்லம். தொடர்புக்கு: 96770 43869
தமிழத்தின் மழை மனிதர்
இந்தியாவின் மழை நீர் மனிதன் சேகர் ராகவன் என்றால், தமிழத்தின் மழை மனிதர் பொறியாளர்.கி.வரதாராஜன். திரூவாரூரைச் சேர்ந்த இவர், தன் இல்லத்தை மழை நீர் சேகரிப்புக் கிடங்காகவே மாற்றியமைத்திருக்கிறார். இதற்காக 10 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார். கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட வீடுகளில் இவர் அமைத்துக் கொடுத்த மழை நீர் மாதிரிக் கலங்கள், காலம் கடந்து சேவை செய்துவருகின்றன. அவர் மறைந்த பிறகும், அவர் செய்து கொடுத்த கட்டுமானங்கள் அவரின் சேவையை உரக்கச் சொல்லிவருகின்றன.
இவர்கள் சொல்லிச்சென்றவைதான் மக்களுக்கான தொழில்நுட்பம். மனிதர்களின் எதிர்காலத்திற்காகத் தங்களின் வாழ்வையே அர்ப்பணித்த இவர்களுக்கு ஏதேனும் செய்ய விரும்பினால், உங்கள் இல்லங்களில் மழை நீரைச் சேமித்து நிலத்தை நிறையுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக