ஞாயிறு, 14 அக்டோபர், 2018

கலைஞரின் உள்ளம் கவர்ந்த இந்திரஜித் பரிதி இளம்வழுதி


சிவசங்கர் எஸ்.எஸ் : தலைவர் கலைஞர், தலைவர் தளபதி ஆகியோர் நெஞ்சம் கவர்ந்த தொண்டர் அண்ணன் பரிதி இளம்வழுதி. இன்று மறைந்துப் போனார். மனம் கனக்கிறது.
தி.மு.க பொதுக் கூட்டங்கள் கேட்டவர்கள் மனதில் தனக்கென்று ஓர் இடம் பிடித்திருப்பார் பரிதி இளம்வழுதி. சென்னை தமிழில் கலோக்கியலாக பேசும் அவரது ஸ்டைலுக்கென்றே, ஒரு ரசிகர் கூட்டம் உண்டு தமிழகமெங்கும், அதுவும் கட்சி கடந்து. அப்படி ஒரு இயல்பான, நகைச்சுவையான, மனம் கவரும் பேச்சாக இருக்கும்.
அப்படி அவர் பேச்சை சிறு வயதில் இருந்து கேட்டு பிரமித்த எனக்கு, 2006 - 2011 சட்டப்பேரவையில் அவரை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், அவரது கடந்த கால சட்டமன்ற செயல்பாடுகள்.
1984 ஆம் ஆண்டில் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தவர், 2011 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். தி.மு.க சட்டமன்ற வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வு.

1989 ஆம் ஆண்டில் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆனது தான் அவருக்கு வரலாற்றில் ஓர் இடத்தைக் கொடுத்தது.
1991 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது தான், தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு வந்த இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் கொலைக்கு காரணம் தி.மு.க என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. வேட்பாளர் மரணத்தால், எழும்பூர் தொகுதி தேர்தல் நிறுத்தப்பட்டது.
நடந்த பொதுத்தேர்தலில் தலைவர் கலைஞர் மாத்திரமே வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர், மீதி அத்தனை வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். தமிழ்நாட்டு மக்கள் ராஜீவ் மரணத்திற்காக அனுதாபப்பட்டு வாக்களித்து விட்டனர். தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் கலைஞர் பதவி விலகினார்.
சிறிது நாட்கள் கழித்து நடைபெற்ற தேர்தலில் அண்ணன் பரிதி வெற்றி பெற்றார். அண்ணன் பரிதி, தனி ஒரு மனிதராக சட்டமன்றம் சென்றார். துளியும் பயம் இல்லாமல், ஜெயலலிதாவை எதிர்த்து குரல் கொடுத்தார். அதற்காக ஒவ்வொரு நாளும் சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப் பட்டார். ஒரு நாள் அவர் வேட்டியையும் உருவி விட்டனர். அன்றிலிருந்து 'பேண்ட்' அணிய ஆரம்பித்தார். ஆனாலும் பணியில் தளரவில்லை.
சில நாட்கள், அண்ணன் பரிதி சபைக்காவலர்களால் தாக்கப்பட்டதாகவும் தகவல். ஆனாலும் அசரவில்லை அண்ணன் பரிதி. அதனால் தான் தலைவர் கலைஞரால், "அபிமன்யு, இந்திரஜித்" என்று பாராட்டப்பட்டார்.
அவர் தான், எனது 2011 - 2016 சட்டமன்ற பணிக்கு முன்னத்தி ஏர். அவர் வழியில் தான் ஜெயலலிதாவை எதிர்த்து, நேரில் குரல் கொடுத்தேன்.
திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி அமைப்பை துவங்கும் போது, தளபதி அவர்களோடு உடனிருந்தவர் இளம்வழுதி. கழகத்தில் தன் பணியால், பல்வேறு பொறுப்புகளை வகித்தார். மாவட்டக் கழக செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்தவர். கழகத்திற்காக எந்த போராட்டக் களத்தையும் சந்திக்க தயாராக இருந்தவர்.
ஒவ்வொரு தொண்டனின் செயல்பாட்டிற்கும் அங்கீகாரம் அளிக்கும் கட்சி, அனுமதிக்கும் கட்சி தி.மு.க என்பதற்கு "அண்ணன் பரிதி" அவர்களது சட்டமன்ற செயல்பாடு ஓர் அடையாளம்.
அவரது தந்தையார் இளம்பரிதி கழகத்தின் சார்பில், சட்டமன்ற மேலவை உறுப்பினராகப் பணியாற்றியவர். தமிழகம் எங்கும் பயணித்து, பொதுக்கூட்டங்கள் பேசியவர். அவர் வழியில் தன் கழகப் பயணத்தை அமைத்துக் கொண்ட அண்ணன் பரிதி ஒரு சின்ன மனத்தாங்கலில், தன் பயண திசையை மாற்றிக் கொண்டார். கழகத்தை விட்டே விலகிப் போனார்.
அவரது இந்த செயல் கழகத் தோழர்களுக்கு மிகப் பெரும் மனச்சுமை ஆனது. எந்த ஜெயலலிதாவை எதிர்த்து, ஒற்றை மனிதராக நின்று சட்டமன்றத்தில் களமாடினோரோ, அந்த ஜெயலலிதா தலைமையை அவர் ஏற்றுக் கொண்டது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத செயல் ஆகிப் போனது. எப்படியும் கழகம் திரும்புவார் என்பதே பலரின் எண்ணமாக இருந்தது.
மறைந்து விட்டார் அண்ணன் பரிதி. இடையில் நடந்த சம்பவங்களை விட, அவரது கடந்தகால பணியே மனதில் நிழலாடுகிறது. அதனால் தான் இன்று தலைவர் தளபதி அவர்கள் நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தினார்கள். கழகம் என்றும் உழைத்தவர்களை மறக்காது என்பதற்கு இது ஓர் உதாரணம், அவர்கள் தவறே செய்திருந்தாலும்.
# சில கறைகள் ஏற்பட்டாலும், நீ என்றும் எம் மனதில் பரிதி - சூரியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக