ஞாயிறு, 14 அக்டோபர், 2018

சங்கர் .. ஐ ஏ எஸ் அகடெமி .. எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் வகுப்பில் சேர்த்துக்கொண்டார்.

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமிவிகடன் - ஞா. சக்திவேல் முருகன் -குலோத்துங்கன் :
பஞ்சர் கடைக்காரர் பையன் நான்.. இன்னிக்கி ஐ.ஏ.எஸ்… காரணம், சங்கர் அண்ணன்!’ – ;பஞ்சர் கடைக்காரர் பையன் நான்.. இன்னிக்கி ஐ.ஏ.எஸ்… காரணம், சங்கர் அண்ணன்!’ –
சி.வில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி என்றால் டெல்லி என்பதை மாற்றி, தென்னிந்தியாவில் சென்னையை சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சிக் களமாக மாற்றியவர்களில் முதன்மையானவர் சங்கர். இவர், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து 10 பேர் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர் என்ற செய்தியை மாற்றி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர்.
கடந்த பத்து ஆண்டுகளில் இவரிடம் பயிற்சி பெற்ற 900-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியா முழுவதும் உயர் பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். சங்கர் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி இந்தியாவில் பல்வேறு பகுதியில் பணியாற்றி வரும் மத்திய அரசில் உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கும், தமிழ்நாட்டில் பல்வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், தற்போது ஐ.ஏ.எஸ் கனவை மனதில் சுமந்து வருபவர்களுக்கும் பேரதிர்ச்சி!


மருத்துவப் பரிசோதனை முடிந்தபின் அண்ணாநகரில் உள்ள  `சங்கர் ஐ.ஏ.எஸ். அகடாமி’ பயிற்சி மையத்தில் சங்கரின் உடல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது.  சென்னை மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலி செலுத்தியவர்களிடம் பேசினோம்.

சிவகாசியைச் சேர்ந்த மாணவர் அரவிந்த், “மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறோம். கடந்த ஓராண்டாக சென்னையில் பயிற்சி பெற்று வருகிறோம். சங்கர் அவர்கள் புவியியல் பாடத்தை கற்றுக்கொடுப்பதை பார்த்து, அதனடிப்படையில் நானும் புவியியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்து வருகிறேன். நண்பர் போல பழகி புவியியல் சொல்லிக்கொடுப்பார். இப்போது, அவர் எங்களோடு இல்லை என்பது எங்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
இந்திரகுமாரும், ரூபனும், “புதன்கிழமை சங்கர் சார் எங்களுக்குக் கடைசியாக வகுப்பு எடுத்தார். அப்போது, வெள்ளிக்கிழமை கிளாஸ்க்கு வரவில்லை என்றால் அதன் பின்பு பயிற்சி வகுப்புக்கு வராதே என்று சொன்னார். ஆனால், அவர் சொன்னதுபோல, வெள்ளிக்கிழமை அவருடைய கிளாஸ் இல்லாமல் சோகத்தில் எங்களைத் தத்தளிக்க வைத்துவிட்டார். கடந்த நான்கு மாதங்களாக அவருடைய புவியியல் வகுப்பில் கலந்துகொண்டு வருகிறோம். நாங்கள் எல்லோரும் கல்லூரி முடித்து வந்தாலும், புவியியல் பாடத்தை எல்.கே.ஜி அளவுக்கு இறங்கி வந்து சொல்லி தருவார்” என்றனர்.
தங்களுக்கு புவியியல் பாடத்தின் மீது காதல் கொள்ளச் செய்தவர் புவியில் இல்லையே என்று கண்ணீருடன் தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டவர்கள்,  சிறிய இடைவெளிக்குப் பின்னர், “‘சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் தடவை தோல்வி என்றாலும் கவலைப்படாதே. கடைசி வரை இலக்கை விடாதே’ என்று ஊக்கப்படுத்துவார் சங்கர் சார். அவருடைய முதல் வகுப்பில் கலந்துகொண்டால் நாமும் ஐ.ஏ.எஸ். ஆவோம் என்பதை மனதளவில் கொண்டு வந்து விடுவார். பலரும் ஐ.ஏ.எஸ். தேர்வு என்றாலே பயப்படுகின்றனர். 10-ம் வகுப்பு தேர்வுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து படிக்கிறோமோ அதே அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்தால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று சொல்லி ஊக்கப்படுத்துவார்.
சென்னையில் நேரடி வகுப்பு நடக்கும். இதே வகுப்புகள் திருவனந்தபுரம், பெங்களூரு, திருச்சியிலும் வீடியோ வகுப்புகளாக இருக்கும். வீடியோ வகுப்பில் கடைசி பெஞ்சில் உள்ள மாணவர் என்ன செய்கிறார் என்பதைக்கூட கவனிப்பார். அந்த அளவுக்கு ஒவ்வொருத்தரையும் கவனித்து உரையாடுவார். அவர் கோவப்பட்டு நாங்கள் பார்த்ததே கிடையாது. வார்த்தைக்கு வார்த்தை ’ஃப்ரண்ட்ஸ்’ என்று சொல்லி நண்பராகப் பழகுவார். அவருடைய நட்பும், புவியியல் வகுப்பும் இனி யாராலும் ஈடு செய்ய முடியாது” என்றனர்.
சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி
சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் படித்து தற்போது மத்திய அரசு பணியில் இருக்கும் சரவணன், “எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டப்படிப்பில் அரியர் உடன் சென்னைக்கு வந்தேன். என்னுடைய ஆர்வத்தை பார்த்துவிட்டு எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் வகுப்பில் சேர்த்துக்கொண்டார். சோர்ந்தபொழுதெல்லாம் தட்டிக்கொடுத்து ஊக்கம் கொடுத்தால் பட்டப்படிப்பை மட்டுமல்ல, சிவில் சர்வீஸ் தேர்விலும் வெற்றி பெற்று தற்போது ஆந்திராவில் மத்திய அரசுத்துறையில் பணியாற்றி வருகிறேன். தன்னம்பிக்கையின் உதாரணமாக இருந்தவர்,  மரணத்தை தழுவி கொண்டார் என்பது  எங்களை மிகுந்த வேதனையில் தள்ளி இருக்கிறது” என்றார்.
கோவா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உள்ள குலோத்துங்கன், “சங்கர் அண்ணன் எங்களுடைய குரு என்றுதான் சொல்வேன். சகோதராகவும், நண்பராகவும், குருவாகவும் இருந்த அவருடைய இழப்பு என்னுடைய தனிப்பட்ட இழப்பாகவும், தமிழகத்தின் இழப்பாகவும் உணர்கிறேன். ஒரு சைக்கிள் பஞ்சர் கடைக்காரரின் பையனும் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற வைக்க முடியும் என்பதற்கு சங்கரின் உழைப்பே காரணம். என்னிடம் ஒரு பைசாவும் வாங்கிக்கொள்ளாமலேயே பயிற்சி வகுப்பில் சேர்த்துக்கொண்டார்.
சிவில் சர்வீஸ் தேர்வு ஒரு சிலருக்கு 100 மீட்டர் ஓட்டம், இன்னும் சிலருக்கு 200 மீட்டர் ஓட்டம், ஆனால் இறுதியில் நிச்சயம் இலக்கை அடைய முடியும் என்று சொல்லி எங்களின் இலக்கை அடைய வைத்திருக்கிறார். சிவில் சர்வீஸ் தேர்வு என்றால் என்னவென்று தெரியாமல் சென்னைக்கு வந்தவர்களை எல்லாம் வாரி அணைத்து, தேர்வில் வெற்றி பெற தகுந்த வழிகாட்டி வெற்றியாளனாக மாற்றி இருக்கிறார். சிவில் சர்வீஸ் ஓட்டத்தில் எங்கெல்லாம் தடுக்கி விழுகிறோம் என்பதை ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும், குருவாக சங்கர் அண்ணனும், அவரது மனைவி வைஷ்ணவி அக்காவும் சரியான முறையில் கண்டறிந்து அடுத்த ஓட்டத்தில் வெற்றி பெற வைப்பார்கள். தற்போது சங்கர் அண்ணனின் மறைவு  எங்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது” என்றார்.
தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக இருக்கும் பிரதாப் முருகன், “சங்கர் அண்ணா, மிகவும் நல்ல மனிதர், கடின உழைப்பாளி. புவியியல் பாடத்தில் நிபுணர். சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வுக்குத் தயார்படுத்துவதில் சிறப்பு வாய்ந்தவர், பல தடைகளை தாண்டி வெற்றியாளர்களை உருவாக்கியவர் தற்போது இல்லை என்பது தமிழகத்துக்கு, குறிப்பாக சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகுபவர்களுக்குப் பேரிழப்பு” என்றார்.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக