வெள்ளி, 26 அக்டோபர், 2018

மாறன் சகோதரர்கள் வழக்கு: தீர்ப்பு தேதி தள்ளிவைப்பு!

மாறன் சகோதரர்கள் வழக்கு: தீர்ப்பு தேதி தள்ளிவைப்பு!மின்னம்பலம் : சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவருடைய சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு சென்னை பிஎஸ்என்எல் அதிவேக தொலைபேசியின் 700க்கும் மேற்பட்ட இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாகவும் இதனால் அரசுக்கு சுமார் ஒரு கோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு சென்னை 14ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன், வேதகிரி கெளதமன், கண்ணன், ரவி உள்ளிட்ட 5 பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டதற்கு முன்னர் ஆவணங்கள் எதுவும் இல்லை. போதிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லாமல் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு இன்று (அக்டோபர் 25) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாறன் சகோதரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள், அமீத் தேசாய், நீரஜ் கிஷன் கவுல், வில்சன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.
கலாநிதி மாறன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அமீத் தேசாய், இந்த வழக்கில் சன் தொலைக்காட்சி தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீது மட்டுமே குற்றம் சாட்டப்பட்ட நிலையில், திடீரென அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அதிகாரியான கலாநிதி மாறனை குற்றவாளியாக சேர்த்தது தவறு எனவும் அவர் தான் இந்த குற்றத்தை செய்யத் தூண்டினார் என்பது தொடர்பான எந்தவிதமான ஆவணங்களும் விசாரணை அதிகாரியிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.
ஆதாரங்கள் இல்லாமல் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய வேண்டுமென்று வாதிட்டார்.
தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கவுல், விதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு எண்ணிக்கை தொலைபேசி இணைப்புகள் மட்டுமே இருப்பதாகவும் ஆனால் அமைச்சர் என்ற முறையில் அவர் தொலைபேசி இணைப்புகளைப் பயன்படுத்தியதாகவும் அதனை சிபிஐ அதிகாரிகள் கவனிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த வழக்கில் சிபிஐ குற்றம் சாட்டுவது போன்று 700க்கும் மேற்பட்ட இணைப்புகளை அவர் பெறவில்லை என்று குறிப்பிட்ட அவர், இணைப்பு எண்களை தொலைபேசி இணைப்பாக கருத முடியாது என வாதிட்டார். எனவே முறைகேடாக இவர்கள் இணைப்புகளாக பயன்படுத்தியதாக சிபிஐ கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். மேலும் இவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் ஆவணங்களும் இல்லை எனவும் எனவே ஆதாரங்கள் இல்லாத நிலையில் அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டு பதிவை நீதிமன்றம் ஏற்க கூடாது. அதனை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
கௌதமன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கில் கௌதமன் மீது எதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆதாரங்களை விசாரணை அதிகாரி சமர்ப்பிக்கவில்லை. அமைச்சரின் நேர்முக உதவியாளர் என்ற முறையில் அவர் அரசிடமிருந்து ஒரு தொலைபேசி இணைப்பை பெற விதிகளில் இடம் உள்ளது. எனவே அதைத்தான் அவர் பயன்படுத்தினார். அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. எனவே இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டவர்கள் முன்னுக்கு பின் முரணாக வாக்குமூலம் அளித்துள்ளனர் அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டு பதிவு தவறானது. எனவே இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இறுதியாக இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜகோபால், ஆரம்பத்திலிருந்து மனுதாரர்கள் தெரிவிக்கும் ஒரே வாதம் ஆதாரம் இல்லை என்பது தான். ஆனால் ஏற்கனவே இந்த வழக்கில் இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் இவர்களுக்கு எதிராக இந்த வழக்கில் மிக தீவிரமான ஆதாரங்கள் இருப்பதாக கூறி இருக்கிறது. அதனை இவர்கள் ஏற்க மறுப்பது தவறானது. ஆதாரங்கள் இல்லை என்றால் அதனை குற்றச்சாட்டு பதிவின்போது மறுக்க முடியாது. வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் சந்தித்து அதன் மூலமே குற்றவாளிகள் இல்லை என நிரூபிக்க வேண்டுமே தவிர பொத்தாம் பொதுவாக இவர்கள் ஆதாரமில்லை, ஆவணங்கள் இல்லை என்று கூறும் கூற்றை ஏற்றுக் கொள்ள கூடாது. போதுமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்யும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். எனவே அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக்கூடாது. வழக்கை சந்திக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும், இவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பினை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக