வெள்ளி, 26 அக்டோபர், 2018

18 தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல்... தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்

 18 தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல்?மின்னம்பலம : 18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார்.
தகுதி நீக்க வழக்கில் இன்று (அக்டோபர் 25) தீர்ப்பு வழங்கிய மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன், 18 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார். மேலும் 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் 18 தொகுதிகளும் காலியாகியுள்ளது. அங்கு எப்போது தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழும்பியுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது, திருப்பரங்குன்றம் மற்றும் தஞ்சை ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இது அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு அரசியல் தலையீடு எதுவும் காரணமில்லை என்றும் ஜனவரிக்குள் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது என்றும் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் கூறியிருந்தார்.

தற்போது 18 தொகுதிகள் காலியாகியுள்ளதால் 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு இன்று (அக்டோபர் 25) பேட்டியளித்த ஓ.பி.ராவத், “எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அந்த தொகுதிகள் காலியாகும். தொகுதி காலியானால், 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, அந்தக் கோணத்தில் இந்த விவகாரத்தை அணுகுவோம்” என்று கூறியுள்ளார்.
“இந்த உத்தரவு இறுதியானது என்றால் தேர்தல் நடத்தப்படும். ஒருவேளை, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தேர்தல் தள்ளிப்போகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக