வெள்ளி, 26 அக்டோபர், 2018

இலங்கை மலையகத் தமிழர்கள் மாபெரும் கிளர்ச்சி!

  : இலங்கை மலையகத் தமிழர்கள் மாபெரும் கிளர்ச்சி!
மின்னம்பலம்:
இலங்கை மலையகத் தமிழர்கள் தங்களது அடிப்படை சம்பளத்தை உயர்த்த வலியுறுத்தி மாபெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக ஈழத்தின் திருகோணமலை, மட்டக்களப்பில் தமிழர்கள் போராட்டத்தை நடத்தி உள்ளனர்.
இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எனப்படும் மலையக தோட்டங்களில் இந்திய வம்சாவளியினராகிய தமிழர்களே கூலிகளாக இருக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து வரும் இவர்களது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க அரசியல் கட்சிகள் எத்தனையோ முளைத்திருந்தன.

பரவும் போராட்டம்
ஆனாலும் தங்களது துயரம் தீரவில்லை என்ற விரக்தியில் இப்போது வீதிக்கு வந்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தமிழர்களது அடிப்படை கோரிக்கையே தங்களது சம்பளத்தை நாளொன்றுக்கு ரூ1,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பதுதான். ஆனால் ரூ600 மட்டுமே வழங்க முடியும் என்பது பெருந்தோட்ட முதலாளிகளின் திட்டவட்டமான நிலைப்பாடு.
இக்கோரிக்கையை வலியுறுத்தி தலவாக்கலை பகுதியில் அக்டோபர் 22-ல் நடைபெற்ற பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஹட்டன்- நுவரெலியா சாலையை வழிமறித்தும் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து ஏற்பட்டது.
விந்துலை பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் 2,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து மலையகத் தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை கிழக்கு பல்கலைக் கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் அக்டோபர் 23-ல் போராட்டத்தில் குதித்தனர். “உதிரத்தினை உரமாக்கும் உறவுகளுக்காக போராடுவோம்” என்ற தலைப்பில் இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தின் அடுத்த கட்டமாக கொழும்பு காலி முகத்திடலில் பல்லாயிரக்கணக்கான மலையகத் தமிழர்கள் கறுப்பு உடையுடன் அணி திரண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். கொழும்புவாழ் மலையக இளைஞர்களால் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போராட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முற்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இன்றைய கொழும்பு போராட்டத்துக்கு ஆதரவாக திருகோணமலையில் ஈழத் தமிழர்கள் போராட்டத்தை நடத்தினர். இதனிடையே தங்களது சம்பளவு உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி மலையகமான வெலி ஓயா, ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி இளைஞர்கள் பாதயாத்திரையைத் தொடங்கி உள்ளனர். பொகவந்தாலவ ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலில் சிதறு தேங்காயை உடைத்து இப்பேரணி புறப்பட்டிருக்கிறது. மலையகத் தமிழர்களின் இந்த எழுச்சி கொழும்பு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மலையகத் தமிழர்களின் ரத்தம் தோய்ந்த வரலாறு
இலங்கையின் கண்டி பிரதேசத்தை 1815-ல் ஆங்கிலேயர் கைப்பற்றினர். இதனால் இலங்கையின் மலையகப் பிரதேசத்தில் ஆங்கிலேயர்கள் கை ஓங்கியது.
இதனைத் தொடர்ந்து 1820களில் காஃபி பயிரிடுதலை ஆங்கிலேயர்கள் தொடங்கி வைத்தனர். இதே காலகட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாட, ஜாதிய ஆதிக்கம் தலை தூக்க பலர் மடிந்து போயினர்.
இந்த பேரவலத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கிறது ஆங்கிலேய அரசு. இப்படி ஒடுக்குமுறைக்கும் பஞ்சத்துக்கும் உள்ளானோரை கண்டிக்கு அழைத்து சென்று காஃபி தோட்டத் தொழிலாளர்களாக குடி அமர்த்தியது. இப்படி இலங்கையின் கண்டிக்கு செல்லும் வழியிலும் சென்ற பின்னர் காலநிலை ஒத்துவராமலும் மாண்டோர் ஆயிரமாயிரம் பேர்.
இலங்கையின் மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, ரத்தினபுரி, கேகாலை ஆகிய மலைப்பிரதேசங்களை தங்களது கடுமையான உழைப்பால் சொற்ப கூலியை பெற்றுக் கொண்டு வளம் கொழிக்கும் பூமியாக்கிவர்கள் தமிழர்கள். இவர்களே மலையகத் தமிழர்கள்.
பழிதீர்க்கப்படும் மலையகத் தமிழர்கள்
இத்தமிழர்கள் வாழும் வீடுகள் இன்றளவும் லயன் வீடுகள் எனப்படும் ஒண்டிக் குடித்தனங்களாகவே இருக்கின்றன. இலங்கையில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் பழிதீர்க்கப்படுகிறவர்களாகவே இந்த மலையகத் தமிழர்கள் இருந்து வருகின்றனர்.

1947-48 இந்திய- பாகிஸ்தான் ஒப்பந்தம், சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தம், பிரஜாவுரிமை சட்டம் போன்றவர்களால் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்ற ஏதிலிகளாகிப் போயினர். இதன் உச்சகட்டம் என்பது 1964 சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தம்தான். இதன்படி 5,25,000 தமிழர்கள் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த பிரச்சனைக்கு 1988-ல் தான் தீர்வு காணப்பட்டு நாடற்றோர் என்கிற நிலை மாறியது.
வெறும் தோட்டத் தொழிலாளர்களாக தலைமுறை தலைமுறையாக ரத்தத்தையும் வியர்வையும் சிந்திய மலையகத் தமிழர் சமூகம் இப்போது கல்வி, வாழ்க்கையில் மேம்படத் தொடங்கிவிட்டது. இதனால்தான் இதுவரை ஒருநாள் சம்பளம் ரூ500 என்கிற அடிமை நிலையை ஒழித்துக் கட்ட போர்க்குரலை எழுப்பி வீதிக்கு வந்திருக்கின்றனர் மலையகத் தமிழர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக