வெள்ளி, 5 அக்டோபர், 2018

கீழடி ஆய்வு .. உண்மைகளை மறைக்கச் சதி,,, மிக பெரும் சக்திகள் பின்னணியில் ..

கீழடி: உண்மைகளை மறைக்கச் சதி?மின்னம்பலம்: கீழடியில் நடந்துவரும் அகழாய்வு குறித்த அறிக்கையை, அங்கு பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது தொல்லியல் துறை.
சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில், 2014ஆம் ஆண்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கின. பெங்களூரு தொல்லியல் துறைக் கண்காணிப்பாளரான அமர்நாத் ராமகிருஷ்ணன் அதற்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2016ஆம் ஆண்டு வரை, அவர் அங்கு பொறுப்பில் இருந்தார். அவர் பதவி வகித்த காலத்தில், 1,000க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கூறப்படுகிறது. இவை எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்று துல்லியமாக அறிய, அவை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இரண்டு கட்ட ஆய்வுகளுக்குப் பின்னர், அமர்நாத் ராமகிருஷ்ணன் அஸ்ஸாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். இதற்குத் தமிழ் மற்றும் தமிழர் அமைப்புகள், கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், மத்திய அரசு அவரை மீண்டும் கீழடிக்கு மாற்றும் எண்ணத்தை ஏற்கவில்லை. அதன்பின் கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வு தொடர்ந்து வரும் நிலையில், இந்த அகழ்வாராய்ச்சி பற்றிய இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியைப் பெங்களூருவில் உள்ள வேறு அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது தொல்லியல் துறை.
அகழாய்வு நடந்தபோது பொறுப்பில் இருந்த அதிகாரியே இறுதி அறிக்கை தயாரிக்கும் வழக்கம் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு உறுதுணையாக, சட்டப் பிரிவுகளும் உள்ளன. இந்த நிலையில், தற்போது அமர்நாத் ராமகிருஷ்ணனுக்குப் பதிலாக வேறு அதிகாரிகள் துணையோடு கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை தயார் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது, தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகழாய்வில் கிடைத்த பொருட்கள் எத்தனை ஆண்டுகள் முற்பட்டது என்பது உட்படப் பல முக்கியமான தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்துவது இந்த அறிக்கை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அமர்நாத் ராமகிருஷ்ணனை அறிக்கை தயாரிக்கவிடாமல் தடுப்பதன் மூலமாக, தமிழ் நாகரிகம் மிகத் தொன்மை வாய்ந்தது என்ற உண்மையை மறைக்கச் சதி நடப்பதாகத் தெரிவித்துள்ளனர் தமிழ் ஆர்வலர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக