வெள்ளி, 5 அக்டோபர், 2018

சாட்சியை மிரட்டிய நித்தியானந்தா

சாட்சியை மிரட்டிய நித்தியானந்தா தரப்பு!
மின்னம்பலம்: நித்தியானந்தாவுக்கு எதிரான பாலியல் வழக்கில் சாட்சி சொல்லக் கூடாது என்று பாதிக்கப்பட்ட பெண்ணை நித்தியானந்தா தரப்பினர் மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் ஒருவர் தங்கியிருந்தார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கியிருந்த அவரை, ஆன்மிகப் பேரின்பம் என்ற பெயரில் நித்தியானந்தா பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கில் விசாரணை பெங்களூரு ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் உள்ளதால் நித்தியானந்தாவுக்கு பிடிவாரண்டு பிறக்கப்பட்டுள்ளது.

 இதை எதிர்த்து அவர் தொடர்ந்த மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், நித்தியானந்தாவுடன் தான் இருக்கும் வீடியோ மார்பிங் செய்யப்பட்டது எனக் கூறி ராம்நகர் நீதிமன்றத்தில் நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான விசாரணைக்கு, குற்றம்சாட்டப்பட்ட லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ் ஆகியோர் நேற்று (அக்டோபர் 4) ஆஜராகினர்.
விசாரணை முடிந்து வெளியே வந்தபோது நீதிமன்ற வளாகத்தில் நித்தியானந்தாவின் சீடர்கள் மூவர் இருந்துள்ளனர். அவர்களில் சச்சின் என்பவர் ஆர்த்தி ராவைப் புகைப்படம் எடுத்துள்ளார். புகைப்படம் எடுக்க உங்களுக்கு உரிமை இல்லை என்று ஆர்த்தி அவரிடம் கூறியுள்ளார். அப்போது சச்சின், “நான் அப்படிதான் புகைப்படம் எடுப்பேன், உன்னால் என்ன செய்ய முடியும்” என்று கூறியதோடு நித்தியானந்தாவுக்கு எதிராக சாட்சி கூறினால் நடப்பதே வேறு என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து ஆர்த்தி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சச்சினை கைது செய்த போலீசார் அவரது போனையும் பறிமுதல் செய்தனர். இன்று (அக்டோபர் 5) காலை சச்சின் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். எனினும், அவரது போன் காவல்துறையினர் வசமே உள்ளது.
நித்தியானந்தா மீதான வழக்கின் விசாரணை, விசாரணை நீதிமன்றத்தில் 11ஆம் தேதி தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக