வெள்ளி, 5 அக்டோபர், 2018

சபரிமலை .. பெண் காவலர்களை தாருங்கள் . தமிழகம் உட்பட மாநிலங்களுக்கு கேரளா அரசு வேண்டுகோள்

பெண் காவலர்களை அனுப்புங்கள்: கேரள அரசு கடிதம்!
மின்னம்பலம் :சபரிமலையில் பணியாற்றப் பெண் காவலர்களைக் கொடுத்து உதவுங்கள் என்று மற்ற மாநிலங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது கேரள அரசு.
கடந்த 28ஆம் தேதியன்று, அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்குப் பரவலான ஆதரவு கிடைத்தாலும், சில பெண்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பது தொடர்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று சபரிமலை தேவசம் போர்டு முதலில் தெரிவித்தது. முதல்வர் பினராயி விஜயன் உடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தையடுத்து, பெண்களைச் சபரிமலைக்கு வர அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று திருவாங்கூர் தேவசம் போர்டின் தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.

சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்குத் தேவையான பாதுகாப்பும், வசதியும் செய்து தரப்படும் என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இந்நிலையில், சபரிமலை கோயிலில் நவம்பர் மாதம் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பெண் பக்தர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு தலா 30 பெண் காவலர்களைக் கொடுத்து உதவுமாறு தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்குக் கேரள அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேரள டிஜிபி லோக்நாத் பெஹாரா கூறுகையில், சபரிமலையில் பாதுகாப்புப் பணிக்காக இந்த மாதம் முதல் பெண் போலீசார் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். “கேரளக் காவல் துறையில் 6,000க்கும் அதிகமான பெண் காவலர்கள் உள்ளனர். அதில், 500 பேரைத் தேர்வு செய்து மண்டல பூஜை காலத்தில் பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கவுள்ளோம். காவல் துறையில் பாலினம் பேதமில்லை. அதனால், சபரிமலை நடை திறக்கப்பட்டதும் சந்நிதானத்தில் பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக