புதன், 5 செப்டம்பர், 2018

குட்கா விஜயபாஸ்கர் டிஜிபி ராஜேந்திரன்,ஆணையர் ஜார்ஜ் வீடுகளில் சோதனை ...

குட்கா: அமைச்சர், டிஜிபி இல்லங்களில் திடீர் ரெய்டு!மின்னம்பலம்: குட்கா முறைகேடு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் வீடுகளில் இன்று காலை முதல் சிபிஐ குழுவினர் சோதனை நடத்திவருகின்றனர்.
2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை அடுத்த செங்குன்றத்தில் மாதவராவ் என்பவர் பங்குதாரராக இருக்கும் குட்கா குடோனில் வருமான வரித் துறையினர் திடீரென சோதனை நடத்தினர். இச்சோதனையின்போது சிக்கிய டைரியில் குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கிய முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட காவல் உயரதிகாரிகள் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குட்கா ஊழல் முறைகேடு தொடர்பாக திமுக சார்பில் ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை சிபிஐக்கு மாற்றிக் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

இதனையடுத்து விசாரணையைத் தொடங்கிய சிபிஐயின் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு, குட்கா ஊழலில் தொடர்புடைய மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது ஐபிசி 120-பி சட்டப் பிரிவின் கீழும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் (1988) கீழும் வழக்குப் பதிவு செய்தது.
கடந்த ஜூன் மாதம் சென்னை வந்த சிபிஐ குழு, தமிழக உணவுப் பாதுகாப்பு துறை அலுவலகத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். குட்கா ஊழலில் சிக்கிய மாதவ ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார்?,
குட்கா குடோனுக்கு அனுமதி வழங்கியது, அங்கு நேரில் ஆய்வு நடத்தியது யார்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளையும் அங்குள்ள அதிகாரிகளிடம் எழுப்பியிருந்தனர். மேலும. சம்மன் அனுப்பிய நிலையில் சில நாட்களுக்கு முன்பு, சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான மாதவ ராவிடம் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. செங்குன்றத்திலுள்ள குட்கா கிடங்கிற்கும் சீல் வைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜபாஸ்கர் வீட்டிற்கு இன்று (செப்டம்பர் 5) காலை வந்த 5 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் சோதனை நடத்திவருகின்றனர். சோதனை நடந்துவரும் நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரும் இல்லத்தில் உள்ளார்.


இதுபோலவே முகப்பேரிலுள்ள டிஜிபி ராஜேந்திரன் இல்லம், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு உள்ளிட்ட 40 இடங்களில் மத்திய பாதுகாப்புப் படை உதவியுடன் சிபிஐ சோதனை நடத்திவருகிறது. மாதவராவ் டைரியில் உள்ள பெயர்கள், ஆதாரங்கள் ஆகியவை அடிப்படையில் இச்சோதனை நடைபெறுகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் இல்லத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது முதல்முறையாக டிஜிபி ராஜேந்திரன் இல்லத்தில் நடைபெற்றுவரும் இச்சோதனை காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக