புதன், 5 செப்டம்பர், 2018

அழகிரி எதிர்பார்த்த அளவு தொண்டர்கள் கூடினரா?

மறைந்த மின்னம்பலம் :திமுக தலைவர் கலைஞரின் நினைவிடம் நோக்கி இன்று (செப்டம்பர் 5) பேரணி நடத்தப்போவதாக அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி அறிவித்திருந்தார். நேற்று முன் தினமே சென்னை வந்த அழகிரி பேரணி தொடர்பாகத் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல், தென்மாவட்டங்களில் உள்ள அழகிரியின் ஆதரவாளர்களும் சென்னையில் குவிந்தனர்.
அரசியல் ரீதியாக மட்டுமே பிரச்னை
பேரணி தொடங்குவதற்கு முன்பாக டைம்ஸ் நவ் ஊடகத்திற்கு அழகிரி அளித்த பேட்டியில், “கலைஞர் மறைந்து 30 நாட்கள் ஆன நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினர். அதற்காகவே இந்த அமைதி பேரணி நடத்தப்படுகிறது. திமுகவுக்கு தற்போது எந்த செய்தியும் சொல்லப்போவது இல்லை. கட்சியில் சேர்க்கவில்லை என்றால் என்ன செய்வது என்பது குறித்து பேரணி முடிந்த பின்னர் ஆலோசிக்கப்படும். கட்சியில் என்னை இணைக்க வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே நிபந்தனை. எனக்கும் ஸ்டாலினுக்கும் அரசியல் ரீதியாக பிரச்னைகள் உள்ளன. ஆனால், குடும்ப ரீதியாக எந்த பிரச்னையும் கிடையாது. ஊடகங்கள் பெரிதாக்குகின்றன” என்று தெரிவித்தார்.


ஒத்தி வைக்கப்பட்ட அரசு நிகழ்ச்சி
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வித் துறை சார்பில் விருது வழங்கும் விழா பேரணி வாலாஜா சாலையில் இன்று காலை நடைபெறுவதாக இருந்தது. அழகிரியின் பேரணி காரணமாக மாலை 3 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி காவல்நிலையம் அருகில் இருந்து இன்று காலை 10 மணிக்கு அமைதி பேரணி தொடங்கியது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கருப்புச் சட்டை அணிந்து பேரணியில் பங்கேற்றனர். அழகிரி மற்றும் துரை தயாநிதி அழகிரி ஆகியோரின் உருவங்கள் இடம்பெற்ற டி-சர்ட்களையும் சிலர் அணிந்திருந்தனர். ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று அழகிரி அறிவித்த நிலையில், அந்த அளவு ஆதரவாளர்கள் கூடாதபோதும், பல ஆயிரம் பேர் பங்கேற்று இருந்தனர்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைகளில் பதாகைகளுடன் ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி என்று கோஷம் எழுப்பியவாறே நடந்துசென்றனர். ‘கரம் கோர்ப்போம், கழகம் காப்போம்’ போன்ற பதாகைகளும் பேரணியில் தென்பட்டன.

அமைதி பேரணி என்பதால், கோஷமிட வேண்டாம் என்று ஆதரவாளர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அழகிரி வலியுறுத்தினார். பகல் 12 .40 மணி அளவில் அண்ணா சதுக்கம் வந்தடைந்த அழகிரி, கலைஞரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, “ கலைஞர் மறைந்து 30 நாட்கள் ஆனதை முன்னிட்டு இந்த பேரணி நடத்தப்பட்டது. வேறு நோக்கம் கிடையாது. பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.
உங்களுக்கு ஆதரவு தெரிவித்ததாக வேளச்சேரி ரவி நீக்கப்பட்டுள்ளாரே என்ற கேள்விக்கு, “ இந்த பேரணியில் 1.50 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் எல்லோரையும் கட்சியில் இருந்து நீக்குவார்களா” என்றும் கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக