வியாழன், 27 செப்டம்பர், 2018

தமிழ் சினிமாவில் புது செண்டிமெண்டு .. போஸ்டரில் நாயும் கூட இருக்கனுமா?

கோலிவுட்டை ஆக்கிரமித்துள்ள  'புதிய' சென்டிமென்ட்!மின்னம்பலம் :சுந்தர்.சி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியாகிக் கவனம் பெற்றுவருகின்றன.
வெற்றிகரமான இயக்குநராக வலம்வந்த இயக்குநர் சுந்தர்.சி தலைநகரம் என்னும் படத்தின் வாயிலாக நடிகராகவும் களமிறங்கினார். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரவே பலபடங்களில் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்துவந்தார் சுந்தர்.சி. ஆனால் தலைநகரம் அளவுக்கு அவருக்கு எந்தப் படமும் தனித்த கவனத்தைப் பெற்றுத்தரவில்லை.
அரண்மனை உள்ளிட்ட சில படங்கள் வசூல்ரீதியாக வெற்றிபெற்றாலும் அது அவரது இயக்கத்திற்கென்றே கிடைக்கிற வழக்கமான ஒரு வெற்றியாகவே ரசிகர்களிடம் பார்க்கப்பட்டது. இத்தகைய சூழலில் தனது நடிப்பால் முத்திரையைப் பதித்துவிடவேண்டும் என்னும் சூழல் சுந்தர்.சிக்கு. இந்தநிலையில்தான் இயக்குநர் வி.இஸட்.துரை இயக்கும் படத்தில் நடித்துவருகிறார் சுந்தர்.சி. இதில் சுமார் 85 சதவிகித படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவுற்ற நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத் மற்றும் சூரத்தில் நடக்கவுள்ளன.

வழக்கமாகக் காமெடிப் படங்களில் கவனம் செலுத்தும் சுந்தர். சி இதில் புதிய பரிமாணத்தில் வலம்வரவுள்ளார். அந்தவகையில் காவல் துறை அதிகாரியாக அவர் நடிக்கும் இந்தப்படம் ஹாரர் வகைப்படமாக அமையவுள்ளது. ஹாரர்தான் என்றாலும் வழக்கமான ஹாரர் கதைக்கென்றே இருக்கிற தேய்வழக்குகள் இதில் இருக்காது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பட டைட்டில் மற்றும் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இப்படத்திற்கு ‘இருட்டு’ எனப் பெயரிட்டுள்ளனர். சுந்தர்.சி காவல்துறை அதிகாரி வேடத்தில் தோன்ற அவருக்கு அருகில் ஒரு நாயும் இடம்பெற்றுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்குகளில் நாயின் புகைப்படமும் சேர்த்தே வெளியிடப்படுவது தமிழ் சினிமாவில் சமீபமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ரஜினி நடித்த காலா ஃபர்ஸ்ட் லுக், அடுத்ததாக வந்த பரியேறும் பெருமாள் போஸ்டர், அதன் பின்னர் அசோக் செல்வன் நடிக்கும் ‘ஜாக்’ ஃபர்ஸ்ட் லுக், யோகி பாபு நடித்துவரும் ‘கூர்கா’ ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றில் நாயும் இடம்பெற்றிருந்தது. அந்தவரிசையில் தற்போது ‘இருட்டு’ படமும் இணைந்துள்ளது.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு க்ரிஷ் இசையமைக்கிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக