செவ்வாய், 18 செப்டம்பர், 2018

கிணற்றில் மண்சரிவு: 3 பெண்கள் உயிரிழப்பு

கிணற்றில் மண்சரிவு: 3 பெண்கள் பலி!மின்னம்பலம்: காஞ்சிபுரம் அருகே பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது ஏற்பட்ட மண்சரிவால், ஏழு பெண்கள் உட்பட எட்டு பேர் நேற்று (செப்டம்பர் 17) கிணற்றில் விழுந்தனர். அதில் மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் அணைக்கட்டுப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சூரியகுப்பம் பகுதியில் பொதுக் கிணற்றில் குடிப்பதற்குத் தண்ணீர் எடுப்பதற்காக, கிணற்றின் வெளிப்பகுதியில் பெண்கள் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்தக் கிணற்றின் சுவர் சரிந்தது. இதனால் கிணற்றின் அருகில் இருந்த ஏழு பெண்களும் கிணற்றுக்குள் விழுந்தனர். அருகில் இருந்த நாகப்பன் என்பவர் அவர்களைக் காப்பாற்றச் சென்றபோது, அவரும் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, பொதுமக்கள் ஓடிவந்து கிணற்றுக்குள் இருந்தவர்களை மீட்கத் தொடங்கினர். நாகப்பன், மல்லிகா, சிவகாமி, அம்சா, நீலாவதி ஆகிய ஐந்து பேர் மீட்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், 55 அடி ஆழமுடைய இந்தக் கிணற்றில் 15 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்ததாகத் தெரிவித்தனர். “சசி, மங்கை, கமலா ஆகிய மூன்று பெண்கள் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டனர். சிமென்ட் சிலாப் உடையும் தருவாயில் இருந்ததால், தீயணைப்புத் துறையினரால் கிணற்றுக்குள் இறங்க முடியவில்லை. இதனால், கிணற்றில் விழுந்தவர்களின் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்திருந்தாலும், சாலை வசதி இல்லாததால் கிணற்றின் அருகே செல்ல முடியவில்லை. இரவு மழை பெய்ததால், கிணற்றின் மேல் இருந்த சுவரில் ஈரப்பதம் இருந்தது. கிணற்றின் சுற்றுச்சுவர் தரமாகக் கட்டப்படாததே, சுவர் சரிந்ததற்கு முக்கியக் காரணம்” என்று வேதனையுடன் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக