செவ்வாய், 18 செப்டம்பர், 2018

வேலைகளை விழுங்க காத்திருக்கும் ரோபோக்கள்!

வேலைகளை விழுங்க காத்திருக்கும் ரோபோக்கள்!minnambalam :2025ஆம் ஆண்டுக்குள் இன்றைய அலுவலகப் பணிகளில் இருக்கும் பாதி அளவு வேலைகள் இயந்திரங்களால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது.
உலகம் தானியங்கி ரோபோக்களை நோக்கி முன்னேறி வருவதால் மனிதன் இயந்திரங்களுடன் இணைந்து பணியாற்றும் தற்போதைய முறையில் மிகப்பெரும் மாற்றம் நிகழ உள்ளதாக சுவிட்சர்லாந்தில் உள்ள உலக பொருளாதார மன்றம் (WEF) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பெருகிவரும் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தால் 2025ஆம் ஆண்டுக்குள் 58 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள் வரவுள்ளதாகவும் இந்த ஆய்வு கூறியுள்ளது. எண்ணிக்கைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு ஆறுதல் அளித்தாலும் சதவிகித அடிப்படையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தற்போதைய சூழலில் சராசரியாக 71 சதவிகித வேலைகளை மனிதன் செய்வதாகவும், 29 சதவிகித வேலைகளை இயந்திரங்கள் செய்வதாகவும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் 2022ஆம் ஆண்டு மனிதர்களின் வேலை விகிதம் 58 சதவிகிதமாக சரியும் என்றும், இயந்திரங்களின் வேலை விகிதம் 42 சதவிகிதமாக உயரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு நிலவரப்படி சராசரியாக ஒவ்வோர் அலுவலகங்களிலும் இயந்திரங்களின் வேலைவிகிதம் 52 சதவிகிதத்தை தொடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நான்காவது தொழில்துறை புரட்சியின் தாக்கத்தால் புதிதாக 133 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, அதில் 75 மில்லியன் வேலைகள் இயந்திரமயமாகிவிடும் என்று WEF தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தால் வேலைகளின் தரம், இடம், வடிவம் மற்றும் நிரந்தரத்தன்மை அதிகரிக்கும் என்றும் WEF எச்சரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக