சனி, 25 ஆகஸ்ட், 2018

முல்லை பெரியாறு - கேரளா கம்யுனிஸ்டுகளின் தமிழக வெறுப்பு சுயரூபம்

பதிலடி தர வேண்டும்/tamil.oneindia.com -veerakumaran: சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் ஒரே நோக்கமாக உள்ளது. அதற்கு சமீபத்திய உதாரணம் தான், உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம்.
புதிதாக கட்டிய இடுக்கி அணைக்கு போதிய நீர் செல்லாததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதை கண்டு எரிச்சல் அடைந்த கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது தகர்த்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி திரிகிறது.
தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் வாழும் சுமார் ஒரு கோடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், விவசாயிகளின் ஒரே நீர் ஆதாரமாக இருப்பது முல்லை பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர்தான்.


தமிழகம் வளர்ந்திருக்கும்

கேரளா மட்டும் முரண்டு பிடிக்காமல் இருந்திருந்தால், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இந்த தென் மாவட்டங்கள், முல்லைப் பெரியாறு அணையில் கிடைக்கும், கூடுதல் தண்ணீரை பயன்படுத்தி செழிப்படைந்து நாட்டுக்கே முன்னுதாரணமாக மாறி இருக்கும். ஆனால் தண்ணீரைக் கொண்டு சென்று வீணாக அரபிக் கடலில் கலப்போமே தவிர, தமிழக விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் கொடுக்க மாட்டோம் என்று மனிதாபிமானமற்ற போக்கை கடைபிடித்து வருகிறது கேரள அரசு. அங்கு, எந்த அரசு அமைந்தாலும் இதுதான் தமிழர்களின் சாபக்கேடாக உள்ளது.


142 அடி தேக்கலாம்

இடுக்கி அணைக்கு கூடுதல் தண்ணீர் தேவை என்பதற்காக 155 அடி வரை தேக்கி வைக்க வாய்ப்பு உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி என்ற அளவிற்கு கொண்டு வந்துவிட்டது கேரளா. இந்த 142 அடியை கூட சட்டப் போராட்டத்தின் மூலமே பெற்றது தமிழகம். ஆனால் ஏதாவது ஒரு புரளியை கிளப்பி விட்டு, அணையில் நீரை குறைத்துவிட மெனக்கெடுகிறது கேரள அரசு.

எத்தனை பொய்கள், புரளிகள்

எத்தனை பொய்கள், புரளிகள்

பூகம்பத்தால் அணை உடைந்துவிடும், மழை வெள்ளத்தால் அணை உடைந்து விடும்.. இப்படி எதற்கெடுத்தாலும், மனசாட்சியற்ற புரளிகள் அங்கே இருந்து கிளப்பி விடப்படுகின்றன. உச்சநீதிமன்ற குழுவே, ஆராய்ந்து அணை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று கூறிய பிறகும் கேரளாவின் கோஷம் மட்டும் குறைந்தபாடில்லை. சுயநலம் அது ஒன்றே அங்குள்ள அரசுகளின் தாரக மந்திரம்.


புது தந்திரம்

தங்கள் தந்திரம் எதுவும் பலிக்கவில்லை என்று தெரிந்ததும், இப்பொழுது அணையின் கட்டுப்பாட்டை காவிரி மேலாண்மை வாரியம் போன்ற ஒரு நடுநிலை அமைப்புக்குள் கொண்டு செல்ல முயற்சிக்கிறது கேரளா. இதுவரை முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் எந்த உத்தரவையும் கேரளா மதித்து செயல்படுத்தியதாக வரலாறு கிடையாது. நீர் பிடிப்பு பகுதிகளில் கூட வாகன பார்க்கிங் அமைக்க மனசாட்சியில்லாமல் திட்டமிட்டது கேரளா. ஆனால் இப்பொழுது மேற்பார்வைக் குழுவை அமைத்து அதன் கட்டுப்பாட்டில் அணையை கொடுக்க வேண்டும் என்று கேரளா கூறுவது, தாங்கள் நினைத்தபடி தண்ணீரின் இருப்பையும், திறப்பையும் முடிவு செய்து கொள்ளலாம் என்ற மறைமுக தந்திரத்தின் ஒரு வெளிப்பாடுதான்.


மேற்பார்வை குழு

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று கேரள அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தான் இவ்வாறு ஒரு யோசனையை தெரிவித்துள்ளது கேரளா. இரு மாநிலங்களின் நீர்ப்பாசனத் துறை செயலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு மேற்பார்வைக் குழுவை அமைக்க வேண்டும், பெரிய வெள்ளம் ஏற்படும்போது உடனடியாக தண்ணீர் திறந்து விடுவது பற்றிய முடிவை இந்த குழு எடுக்க வேண்டும், இந்த குழுவின் கீழ் இயங்கும் வகையில் மேலாண்மை குழு ஒன்றையும் அமைக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணையின் அன்றாட நீர் வரத்து, நீர் இருப்பு, நீர் திறப்பு ஆகியவற்றை இந்த குழு கண்காணிக்க வேண்டும்.. என்றெல்லாம் புதுப்புது நிபந்தனைகளை தனது கோரிக்கையாக சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது கேரளா.


பதிலடி தர வேண்டும்

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவது போன்ற செயல் தான் இந்த புது யோசனை. வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இந்த விவகாரத்தில் பதிலுக்கு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உள்ளது. அப்போது கேரளாவின் இந்த அனைத்து தந்திரங்களுக்கும் சரியான சட்ட பதிலடி கொடுத்து முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மீண்டும் மீட்டு எடுக்க வேண்டும், என்பது தமிழக தென் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக