சனி, 25 ஆகஸ்ட், 2018

உனக்கும் ஒண்ணும் கிடைக்கப் போறதில்ல!” – கனிமொழியிடம் அப்போதே சொன்ன அழகிரி,,, துர்க்காவின் ராஜ்ஜியம் ஆரம்பம்?

vikatan -ஆ.விஜயானந்த் தி.மு.கவில் கனிமொழிக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படாமல் இருப்பதில் அதிருப்தியில் இருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ‘ பொதுக்குழுவில் சீனியரான துரைமுருகன் முன்னிறுத்தப்படுவதில் தவறு இல்லை. அதேநேரம், கனிமொழிக்கும் பதவி வழங்கப்படும் என எதிர்பார்த்தோம்’ என்கின்றனர் ஆதங்கத்துடன்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கவின் பொதுக்குழு கூட இருக்கிறது. வரும் 28-ம் தேதி நடக்கும் நிகழ்வில் தி.மு.கவின் புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதில், கழகத்தின் புதிய பொருளாளராக துரைமுருகன் பொறுப்பேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், துரைமுருகன் கையில் வைத்திருக்கும் முதன்மை நிலையச் செயலாளர் பதவி, டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் அறிவாலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். மொத்தம் மூன்றே பதவிகளுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க இருக்கின்றனர். இதனால் கனிமொழி ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
” கருணாநிதி மறைவுக்குப் பிறகு, ‘ கட்சிக்குள் கனிமொழி கால் ஊன்றிவிடக் கூடாது’ என்பதில் குடும்ப உறுப்பினர்கள் சிலர் உறுதியாக இருக்கின்றனர்.


அவருக்குப் பதவி அளிப்பது பற்றி ஸ்டாலினும் பதில் சொல்லவில்லை. கருணாநிதியின் வாரிசுகளில் செல்வியோ தமிழரசுவோ நேரடி அரசியலுக்குள் வரவில்லை. ராஜ்ய சபா எம்.பி, மகளிரணித் தலைவி எனக் கருணாநிதியால் பதவி கொடுத்து உயர்த்தப்பட்டவர் கனிமொழி. அழகிரியைக் கட்சிக்குள் கொண்டு வந்த கருணாநிதியே, இரண்டு முறை அவரைக் கட்சியை விட்டு நீக்கவும் செய்தார். இறுதிவரையில் கருணாநிதியிடம் தண்டனை வாங்காதவர் கனிமொழி மட்டும்தான்” என விவரித்த தி.மு.க நிர்வாகி ஒருவர்,
கனிமொழி” ஸ்டாலினுக்குப் பிறகு அந்த இடத்துக்கு கனிமொழி வந்துவிடுவார் என்ற கவலைதான் குடும்ப உறுப்பினர்கள் சிலரிடம் உள்ளது. மாநிலத்தின் முதல்வராக ஸ்டாலின் வந்த பிறகு இதைப் பற்றி யோசிக்கலாம். அதற்கு முன்னதாக, கனிமொழிக்குக் கட்சியில் உயர் பதவி கொடுக்காமல் ஒதுக்கி வைப்பது சரியானதல்ல என்றே நினைக்கிறோம். கட்சிக்காரர்கள் மத்தியிலும், ‘ குடும்பம் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறது. அழகிரிதான் தவறு செய்கிறார்’ என்ற பேச்சு உள்ளது. கனிமொழியையும் புறக்கணித்துவிட்டால், தலைமை மீதே கட்சிக்காரர்கள் குற்றம் சொல்ல வேண்டிய நிலை உருவாகலாம். ‘தனக்குரிய அந்தஸ்து வேண்டும்’ என்பதில் உறுதியாக இருக்கிறார் கனிமொழி. அதைப் பற்றி வெளிப்படையாகவும் அவர் கேட்கவில்லை. ‘ அண்ணன் என்ன முடிவெடுத்தாலும் சரி’ எனப் பேசி வருகிறார்” என்றவர்,


” காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், ஸ்டாலினுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார் கனிமொழி. அப்போது விருந்தினர்கள் உள்பட யார் வந்தாலும் அவரையும் அருகில் அமர வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ஸ்டாலின். இதனைக் கவனித்த அழகிரி, ‘ நான் பார்த்துட்டுத்தான் வர்றேன். நீயும் ஓடிக்கிட்டே இருக்க. உனக்கு அவர் (ஸ்டாலின்) ஒன்னும் செய்யப் போறதில்லை’ எனக் கனிமொழியைப் பார்த்துக் கூறினார். இந்த வார்த்தைகளை அருகில் இருந்த கட்சியின் சீனியர்களும் கேட்டனர். கருணாநிதியின் இறுதிக் காரியம் முடிந்து மறுநாள் ஸ்டாலின், அழகிரி, செல்வி, தமிழரசு, கனிமொழி உள்ளிட்டோர் சமாதியில் மாலை வைக்கச் சென்றனர். மற்றவர்கள் மாலை வைத்துவிட்டு நகர்ந்தபோது, கனிமொழியை அழைத்து சமாதியில் மாலை வைக்கச் சொன்னார் அழகிரி. இதன்பிறகு, சி.ஐ.டி காலனியில் உள்ள கனிமொழியின் வீட்டுக்கு இரண்டு முறை சென்றிருந்தார் அழகிரி. அப்போது பேசும்போதும், ‘ நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்படாதம்மா’ என ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார். கட்சிப் பதவியில் சீனியர்களை முன்னிறுத்துவது சரியானதுதான். அதேநேரம், ஸ்டாலின் தலைமையை ஏற்றுச் செயல்படும் கனிமொழிக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறோம்” என்றார்.
” ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அத்தனை கட்சிகள் ஆதரித்தும் 13 சதவீத வாக்குகள்தான் தி.மு.கவுக்குக் கிடைத்தது. இந்தத் தேர்தலில் கனிமொழி பிரசாரம் செய்யவில்லை. இதேபோல், முன்பு ஒருமுறை சங்கரன்கோயில் இடைத்தேர்தலில், ‘ கனிமொழி பிரசாரம் செய்ய வேண்டாம்’ எனக் கூறிவிட்டார் ஸ்டாலின். அந்தத் தேர்தலில் தி.மு.க படுதோல்வியைச் சந்தித்தது. இதைப் பற்றிப் பேசிய கருணாநிதி, ‘ அவள் பிரசாரம் செய்திருந்தால் டெபாசிட்டாவது கிடைத்திருக்கும். இப்படியொரு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டீர்கள்’ எனச் சாடினார். அதேபோல், ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்துக்கும் கனிமொழி போகாமல் இருந்ததைக் கவனித்த கருணாநிதி, நேரடியாக அவரைக் களமிறக்கினார். அந்தப் பகுதி மக்களிடம், காடுவெட்டி குருவைக் குண்டாஸில் போட்ட சம்பவத்தைக் கண்டித்துப் பேசினார். அந்தத் தேர்தலில் 35 சதவீத வாக்குகள் தி.மு.கவுக்கு வந்து சேர்ந்தது. தற்போது தமிழ்நாட்டில் பலமுனைப் போட்டி வந்துவிட்டது. தெற்கு, மேற்கு ஆகிய மாவட்டங்களில் தி.மு.கவுக்கான அடிப்படை வாக்குகள் பெரிதாக இல்லை. பலமுனைப் போட்டியால் மீண்டும் ஆட்சிக்கு வருவதே கேள்விக்குறியாகிவிடக் கூடாது. ‘ கட்சி கைக்குள் வந்துவிட்டது. ஆட்சியைப் பிடித்துவிடுவோம்’ என நினைத்தால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்” என அச்சப்படுகின்றனர் கட்சியின் முன்னணி நிர்வாகிகள்.
அதேநேரம், தி.மு.கவின் சீனியர் ஒருவர் நம்மிடம் பேசும்போது, ” கட்சியின் ஒட்டுமொத்த மகளிர் அணியையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் கனிமொழி. இதுவே அவருக்கு மிகப் பெரிய பலம். மீண்டும் அவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்குவது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது. ஆனால், தேர்தலில் போட்டியிட்டு வெல்லவே கனிமொழி விரும்புகிறார். தற்போது வரையில் ஸ்டாலினின் குட்புக்கில் இருக்கிறார் கனிமொழி. அவருக்கு உரிய முக்கியத்துவமும் அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக