செவ்வாய், 5 ஜூன், 2018

அழுகிப்போன ஊடகங்களும் ,, போராட்டமும் PEOPLE'S DEMOCRACY தலையங்கம்

அழுகிப்போன ஊடகங்களும் அதில் நடத்த வேண்டிய போராட்டமும்
PEOPLE'S DEMOCRACY தலையங்கம்
இந்தியாவின் முக்கியமான அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் எவ்வளவு ஆழமாக அழுகிப்போயுள்ளன என்பதனை ‘கோப்ராபோஸ்ட்’ இணையதளஊடக நிறுவனத்தின் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ எனும் புலன்விசாரணை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா, ஜீ தொலைக்காட்சி, இந்தியாடுடே, இந்துஸ்தான் டைம்ஸ், ஏபிபி நியூஸ், ஜாக்ரான்குழுமம் (தமிழகத்தில் தினமலர்) உள்ளிட்ட 25 ஊடகநிறுவனங்களை கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தியுள்ளது. இவர்கள் அம்பலப்படுத்தியுள்ள விஷயங்களின் இரண்டாவது தவணைதான் இது.சங் பரிவார் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்ட ஓர் அமைப்பினைக் கூறி ‘ஆச்சார்யா’என தன்னை சித்தரித்துக் கொண்ட கோப்ராபோஸ்டின் பத்திரிகையாளர் ஒருவர் இந்த ‘ஸ்டிங் ஆபரேஷனில்’ ஈடுபட்டார். இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லவும், இறுதியாக மக்களை மதரீதியாகபிளவுபடுத்திடவும் தேவையான விஷமப் பிரச்சாரத்தைசெய்திட பல நூறு கோடி ரூபாய்களை அளிப்பதாகச்சொல்லி ‘ஆச்சார்யா’ ஊடகங்களின் உரிமையாளர்களையும், நிர்வாகிகளையும் அணுகியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை மிகுந்த வேட்கையோடு பல ஊடக நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டு இதனை முன்னெடுத்துச் செல்ல ஒப்புதல் அளித்தது, அனைத்து மாண்புகளையும், பத்திரிகைத் துறைக்கான நேர்மையையும் சமரசம் செய்து, பணம் வாங்கிக் கொண்டு செய்திகளை வெளியிடுவதோடு பொய்ப் பிரச்சாரம் செய்வதை அம்பலப்படுத்துகிறது. (பணம்பரிவர்த்தனை நடந்திருப்பது தொடர்பாக) ‘பேடிஎம்’நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டதாக அந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நச்சுக் கலவையாக...
இத்தகைய நிலை குறித்த தனது கருத்தை தெரிவிக்கும்போது, “விஷமத்தனம், வெறித்தனம், பொறுப்பற்றதன்மை மற்றும் அதிகாரத்திற்கு அடிபணிதல் ஆகியவற்றின் நச்சுக்கலவையாக பல முக்கியமான ஊடக நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் மாறிப் போயுள்ளன” என முன்னணி விமர்சகரான பானு பிரதாப் மேத்தா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார். கார்ப்பரேட் ஊடகத்தில் ஆசிரியர் குழுவின் சுயேச்சையான செயல்பாட்டில் சமரசம் செய்து கொள்ளப்பட்டு, வர்த்தகம் மற்றும் தலையங்கத்தில் இடம் பெற வேண்டியஅம்சங்களுக்கும் இடையேயான இடைவெளி இல்லாமல்போகச் செய்யப்பட்டுள்ளது. லாபத்திற்கான செயல்பாடுஎன்பது மட்டுமே கார்ப்பரேட் ஊடகங்களின் நோக்கமாகும். மேலும், பணம் சம்பாதிப்பது என்பதே ஊடகத்தின்உள்ளடக்கத்தை தீர்மானிக்கும் அளவுகோலாக மாறிப் போயுள்ளது.நவீன தாராளவாத காலத்தில் கார்ப்பரேட் ஊடகத்தின் குணாம்சம் தெள்ளத் தெளிவாக உள்ள நிலையில், சில பிரபல ஊடக நிறுவனங்களின் நிர்வாகிகளும், உரிமையாளர்களும் பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு வெளிப்படையான விசுவாசத்தை காட்டியிருப்பதை கோப்ரா போஸ்டின் புலன்விசாரணை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
‘பெரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இந்துத்துவா அமைப்பின் கூட்டணியே மோடி அரசு’ என இந்த அரசைப் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மிகச் சரியாக குறிப்பிட்டுள்ளது. பொதுநீரோட்ட ஊடகத்தில் தற்போது இது பிரதிபலித்துள்ளது. கார்ப்பரேட் அதிகாரத்திற்கும், இந்துத்துவாவிற்கும் தற்போதைய அரசின் முழுமையான ஆதரவு உள்ளது என்ற எதார்த்த நிலையில், ஊடகங்கள் இவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுவதை அரசின் தலையீட்டின் வாயிலாக சரி செய்திட இயலும் என எதிர்பார்ப்பதில் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை.
ஊடகத்துறையினுள் போராடுவோம்!
சுதந்திரமான பத்திரிகை தொழில் மற்றும் ஊடக நேர்மை ஆகியவற்றில் பற்றுடன் உள்ள ஊடகநிறுவனங்களும் உள்ளன. அத்தகைய ஊடக நிறுவனங்கள் ஆதரிக்கப்பட வேண்டும், வலுப்படுத்தப்பட வேண்டும். ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் ஊழல் நிறைந்த, முறைகேடான நடைமுறைகள் இருந்தபோதும், உண்மையை அம்பலப்படுத்தவும், சுயேச்சையான மதிப்பீடுகளின் அடிப்படையில் உண்மைகளைத் தெரிவித்திடவும் உறுதிபூண்டுள்ள எண்ணற்ற பத்திரிகையாளர்கள் உள்ளனர். பத்திரிகைத் துறையின் நேர்மையையும், நடுநிலை தவறாது செய்திகள் தரப்படுவதையும் உத்தரவாதம் செய்திட அவர்கள் ஊடகத் துறையினுள் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.
வலுவான மற்றும் வெளிப்படையான வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அனைத்து விதமான ஊடகங்களின் செயல்பாட்டையும் மேற்பார்வை செய்யத்தக்க சுயேச்சையான, சட்டப்பூர்வமான ‘ஊடகக் கவுன்சில்’ ஏற்படுத்தப்பட பொதுக் கருத்து உருவாக்கப்பட வேண்டும். ஊடகத் துறை ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என்பதே இடதுசாரி மற்றும் ஜனநாயக அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலாகும். இது செயல்படுத்தப்பட வேண்டுமெனில், அதற்கு ஊடகத் துறையின் மீது பெரும் வர்த்தகநிறுவனங்களின் இறுக்கமான பிடிக்கு முடிவு கட்டப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்நியமூலதனத்தின் பிடியிலிருந்தும் ஊடகத்துறை விடுபடுவதையும், பல ஊடக நிறுவனங்களின் உரிமையாளராக ஒரேகார்ப்பரேட் நிறுவனம் இருப்பது தடுத்து நிறுத்தப்படுவதையும் இது உறுதி செய்யும்.
அரசு ஒளிபரப்பு சேவை என்பது ஊடகத் துறையின் மிக முக்கியமானதொரு பகுதியாக ஆகிட வேண்டும்.ஊடகத் துறையில் சீர்திருத்தம் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கும் இடது ஜனநாயக மாற்றின் மிக முக்கியமான பகுதியாகும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி (ஜூன் 3) தமிழில்: ராகினி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக