செவ்வாய், 5 ஜூன், 2018

சமூக விரோதிகளின் தலைவன் ரஜினிகாந்த்! பொய்களும், மோசடிகளும், மிரட்டல்களும், ... சந்தோஷ் ராஜ் அனுபவங்கள்

Mathavaraj : ‘யார் நீங்க?’ என்று நடிகர் ரஜினிகாந்த்தைக் கேட்ட சந்தோஷ் ராஜ்
ஏற்கனவே மரணத்தை மிக அருகில் பார்த்துத்தான் வந்திருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வந்து ஆசை காட்டவும், அச்சுறுத்தவும் செய்திருக்கின்றனர்.
கல்லூரி மாணவனாக, அனைத்துக் கல்லூரி மாணவர் அமைப்பில் ஒரு அங்கமாக இருந்த சந்தோஷை, ஸ்டெர்லைட் ஆலை குறித்த விழிப்புணர்வு பற்றி இருக்கிறது. அதன் பாதிப்புகளை அறிய, அறிய அந்த ஆலையை மூட வேண்டும் என்ற துடிப்புடன் போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். அப்படித்தான் மே 22 கலெகடர் வளாகத்தை நோக்கிய பேரணியில் கலந்து கொள்ளச் சென்றிருக்கிறார். அமைதியாக கலெக்டர் வளாகத்தில் சென்று அமர்வதுதான் நோக்கமாய் இருந்திருக்கிறது. எல்லாம் சிதைக்கப்பட்டு இருக்கிறது. தன் அருகில் 65 வயது கந்தையா நெஞ்சில் ரத்தம் சிதற தரையில் வீழ்ந்ததைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார். அதற்குள் அவரது தலையில் பலத்த அடி.
எல்லாம் முடிந்தது என்று நினைத்த சந்தோஷ்ராஜ், தான் உயிரோடு இருப்பதை அறிந்த பிறகு தன்னை சந்திக்க வந்த அரசியல் வாதிகளை எல்லாம் கேள்விக்கணைகளால் துளைத்திருக்கிறார்.

முதலில் அமைச்சர் கடம்பூர் ராஜூ. ”ஸ்டெர்லைட் ஆலையை மூடுவேன் என எழுதித் தாருங்கள்” என அவரிடம் கேட்டு, வெலவெலக்க வைத்திருக்கிறார்.
அடுத்தநாள் வந்த துணை முதல்வர் பன்னீர் செல்வத்திடம்,”துப்பாக்கியால் சுடுவதற்கு யார் உத்தரவு கொடுத்தது?” என்றும், “ஸ்டெலைட் ஆலையை மூடாமல் இருக்க எவ்வளவு பணம் வாங்கினீர்கள்?” என்றும் கேட்டு விரட்டி இருக்கிறார்.
அதற்கு அடுத்த நாள் வந்த ரஜினிகாந்த்தை “யார் நீங்க?” என்று கேட்டு இருக்கிறார். அவர் முகமெல்லாம் சுருங்கிப் போயிருக்கிறார்.
ரஜினிகாந்த்திடம் அப்படிக் கேட்டது குறித்து அவர் பகிர்ந்திருப்பது முக்கியமானது. “அவரது படத்தை முதல் நாள் பார்க்க டிக்கெட்டுக்காக வரிசையில் நின்று அடிபிடிச் சண்டை போட்டவன் நான். தியேட்டரில் எழுந்து நின்று ஆடியவன். அவரை சூப்பர் ஸ்டாராக நினைத்து வளர்ந்தவன். ஆனால் மே 30ம் தேதி அவர் ஆஸ்பத்திரிக்கு வந்த போது, என் குழந்தைப் பருவ கதாநாயகனாக அவர் இல்லை. ஒரு அரசியல்வாதியாக மட்டும் தெரிந்தார்” என்கிறார்.
அப்படிப்பட்ட மிக நேர்மையான, நுட்பமான உணர்வுகள் கொண்ட சந்தோஷ் அதன் பிறகு சந்தித்த நிகழ்வுகள் மோசமானவை.
ரஜினிகாந்த் சென்ற சில மணி நேரங்களில் திலிபன் என்பவர் வந்து சந்தோஷோடு ஒரு செல்பி எடுக்க வேண்டும் என விரும்பி இருக்கிறார், கள்ளம் கபடு இல்லாமல் சந்தோஷ் சம்மதித்து இருக்கிறார். சிறிது நேரத்தில் தேசீயக்கொடியை எரித்த திலிபனோடு தொடர்பு என்று ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் செய்தி பரவ ஆரம்பித்திருக்கிறது. “இந்த தேச விரோதியா நம் தலைவரைப் பார்த்து நீ யார் என்றான்!” என ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொதிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
‘நான் என் மக்களுக்காகப் போராடினால் தேச விரோதியா?’ என சந்தோஷ் மனமொடிந்திருக்கிறார். தேச விரோதச் சட்டத்தில் கைது செய்யப் போகிறார்கள் என சந்தோஷின் உறவினர்கள் பயந்து போயிருக்கிறார்கள்.
பின்னர் இரவு 12.30 மணிக்கு வந்து, சந்தோஷை அந்த வார்டின் மூலைக்கு அழைத்துச் சென்று, ரஜினியை தலைவரே என்று அழைக்கும்படியாகவும், ரஜினி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தில்தான் அவரிடம் கேள்வி கேட்டதாகவும் பேசச் சொல்லி இருக்கிறார்கள். உடல்நலம் பெற்றதும் சென்னை வந்து, ரஜினிகாந்திடம் மன்னிப்பு கேட்பதாகவும் சந்தோஷ் சொன்னதை அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. விளக்கமளித்து பேசச் சொல்லி அவர்கள் மொபைலில் அதை பதிந்தார்கள். சந்தோஷை சென்னைக்கு அழைத்துச் சென்று அவரது வாழ்வையே மாற்றுவதாகவும், உயர் கல்விக்குரிய அத்தனை ஏற்பாடுகளையும் செய்வதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
‘இந்த அதிமுகக்காரங்க கூட பரவாயில்ல. ரஜினி மக்கள் மன்றத்தினரைப் பார்த்து நிஜமாகவே பயந்துவிட்டேன்” என்கிறார் சந்தோஷ்ராஜின் தாயார் வசந்தி.
“The news minute’ என்னும் பத்திரிகை சந்தோஷ்ராஜை சந்தித்து உண்மையை உலகுக்குச் சொல்லி இருக்கிறது.
தமிழகத்தில் ஒரு மாணவன் “யார் நீங்க?’ என கேள்வி கேட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அதை மறைக்கவும், உண்மையை சிதைக்கவும் எவ்வளவு பிரயத்தனங்களும், பொய்களும், மோசடிகளும், மிரட்டல்களும்,
இந்த அண்டர் கிரவுண்ட் ஆபரேஷன்தான் ரஜினியின் ஆன்மீக அரசியலா?
ஒரு இளஞனின் சத்திய ஆவேசத்துக்கு ரஜினியால் ஏற்பட்டு இருக்கும் இந்த சோதனைதான் தமிழருவி மணியனுக்கு காந்தியமா?
மிஸ்டர் ரஜினி அரசியலுக்கு வந்து எதைக் கிழிக்கப் போகிறார் என்பது சந்தோஷ் மூலம் தெரிந்து விட்டது.
சமூக விரோதிகளின் தலைவன் ரஜினிகாந்த் என விளையும் பயிர் முளையிலேயே தெரிந்து விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக