செவ்வாய், 5 ஜூன், 2018

2ஜியை எதிர்கொள்ளத் தவறிவிட்டோம்: சல்மான் குர்ஷித் நேர்காணல்!

2ஜியை எதிர்கொள்ளத் தவறிவிட்டோம்: சல்மான் குர்ஷித் நேர்காணல்!மின்னம்பலம் :நிஸ்துலா ஹெப்பர், சந்தீப் புகான் : ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சட்ட அமைச்சராக இருந்த சல்மான் குர்ஷித், 2ஜி வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ‘அலைக்கற்றை அரசியல்: திரை விலகும் உண்மைகள்’ என்ற தலைப்பில் நூலை எழுதி வெளியிட்டார். அந்தப் புத்தகம் கிட்டத்தட்ட காங்கிரஸ் பற்றிய சுய விமர்சனமாகப் பார்க்கப்படுகிறது.
2ஜி விவகாரத்தில் ஊழல் நடைபெற்றிருக்க சட்ட ரீதியான எந்த முகாந்திரமும் இல்லை என்றபோதும் காங்கிரஸ் கட்சி கருத்துக் களத்தில் இதுபற்றிய தெளிவை ஏற்படுத்தாமல் இருந்துவிட்டது என்றும், தோற்கப் போகிறோம் என்ற உணர்வுடனேயே 2014 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது என்றும் இந்நூலில் விவரித்திருக்கிறார் சல்மான் குர்ஷித்.
இந்த நூல் குறித்தும் 2ஜி விவகாரத்தைக் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கையாண்ட விதம் பற்றியும் மனம் திறந்து, ‘தி இந்து’ ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் முன்னாள் மத்திய சட்ட அமைச்சரான சல்மான் குர்ஷித். அந்தப் பேட்டியிலிருந்து சில பகுதிகள்:
இப்போதைய சூழலில் ஸ்பெக்ட்ரம் அரசியல் என்ற நூலினை எழுதி வெளியிடுவதற்கான பின்னணி என்ன?


நான் சொல்வதை நீங்கள் விரும்புகிறீர்களோ, வெறுக்கிறீர்களோ, ஆமோதிக்கிறீர்களோ, மறுக்கிறீர்களோ... ஆனால், நான் சொல்வது உண்மை. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குக்கு சட்ட ரீதியான எந்த அடிப்படையும் கிடையாது. என்னுடைய ஆர்வம் எல்லாம் இந்த ஸ்பெக்டரம் விவகாரம் நீதிபதிகளால் எவ்வாறு உணரப்பட்டது, மக்களால் எவ்வாறு உணரப்பட்டது, அன்று ஆட்சியில் இருந்த எங்களால் எவ்வாறு உணரப்பட்டது என்பது பற்றி எழுதுவதுதான். நான் இந்த நூலை எழுதத் தொடங்கியபோது இந்த வழக்கின் தீர்ப்பு இவ்வாறு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், நான் இந்த நூலை எழுதி முடித்த நேரம் சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்தது. அதையடுத்து நான் நூலில் சில பகுதிகளைச் சேர்க்க நேரிட்டது.
2ஜி புகார் போன்ற புகார்களை அன்றைய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசு அணுகிய விதம் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
நான் கொஞ்சம் வெளிப்படையாகவே பேச விரும்புகிறேன். 2ஜி விவகாரத்தை அன்றைய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் தனது பிரச்சினையாகக் கருதவில்லை. அது ஒரு தனிப்பட்ட அமைச்சரின் பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது. நான் இதைத் தாண்டி வெளியே சென்று ஏதாவது செய்ய முயற்சித்தேன். நான் இது தொடர்பாக அன்றைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்தித்தேன். ஏனென்றால் இது தொடர்பாக அன்றைய அரசு நிறைய அழுத்தத்துக்கு ஆட்பட்டிருந்தது. நாடு முழுவதும் வதந்திகளின் மீது கட்டமைக்கப்பட்ட உரையாடல்களே நடந்துகொண்டிருந்தன. ஆனால் இதைப் பற்றி விவாதம் நடத்த அப்போது எந்தத் தளமும் இல்லை. விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் வேறு கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் இந்தப் புறக்கணிப்புக்கு ஆளாகிறாரோ என்று இதன் மீதான எதிர்மறை உணர்வு அதிகரித்தது. திரு.ராஜாவுடன் நாங்கள் பெரிய அளவிலான நெருக்கம் கொண்டிருக்கவில்லை. நேரில் பார்க்கும்போது ஒரு ஹலோ சொல்லிக்கொள்வதோடு சரி. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை அரசின் கூட்டுப் பிரச்சினையாக யாரும் அணுகவில்லை, அது தொலைத் தொடர்புத் துறை அமைச்சரின் பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்பட்டது.
அரசு பதிவு செய்த வழக்கின்பேரில்தானே ராஜா பதவியை ராஜினாமா செய்தார்?
ஆம். ஆனால் அந்த நடவடிக்கையால் அரசுக்குப் புகழ் எதுவும் கிடைக்கவில்லை. மாறாக அந்த அமைச்சருக்குப் பெருமளவிலான மனச் சீற்றத்தைதான் அது ஏற்படுத்தியது.
2ஜி விவகாரத்தில் ஏன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன?
நீதிமன்றங்கள் அரசுக்கு உத்தரவுகளை வழங்கிக்கொண்டிருந்தன. அடுத்த விசாரணைத் தேதிக்குள் இது நடக்க வேண்டும், அது நடக்க வேண்டுமென்று நீதிமன்றங்கள் கூறின. நீதிமன்றங்கள் புலனாய்வைக் கண்காணித்துக்கொண்டிருந்தன, சிபிஐயிடம் அறிக்கை கேட்டன. அரசுத் தரப்பு வழக்கறிஞர்களைக்கூட அவர்களே தேர்வுசெய்தனர். இந்திய நாட்டின் அட்டர்னி ஜெனரல் என்னும் உயர்ந்த பதவியில் இருப்பவர், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்யப்படும் காட்சியை கற்பனை செய்தும் பார்க்க முடியுமா? அந்த உயந்த மனிதரான குலாம் வாஹன்வதியை (2009 முதல் 2014 வரை மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பதவி வகித்தவர். 2014 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார்) இப்போது நாம் இழந்துவிட்டோம். சட்ட அமைச்சர் என்ற முறையில் அவரோடு சென்று நான் அமர்ந்திருப்பேன். இங்கே நான் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். நான் அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி சிங்வியிடம், ‘அவர் எங்களின் ஆள் அல்லர். அவர் மிகச் சிறந்த சட்ட நிபுணர்’ என்று சொன்னேன். அதற்கு அந்த நீதிபதி, ‘அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டார். ஒவ்வொரு நாளும் நீதிமன்றங்களில் பேசப்படும் ஹேஷ்யங்களும், அவை பத்திரிகைகளில் பதிவு செய்யப்படும் விதமும் எங்கள் மன உளைச்சலை அதிகப்படுத்திக்கொண்டேதான் இருந்தன.

பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி என்று ஒன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இருந்ததே... பின் எப்படி ஒரு தனிப்பட்ட அமைச்சரின் பிரச்சினையாக இது பார்க்கப்பட்டது?
சில சமயங்களில் நிலைமை பயங்கரமாகிவிடும்போது, எதனோடும் இணைந்து செயல்பட முடியாது. நாங்கள் அனைவரும் சுயநலவாதிகளாகவே மாறிவிட்டோம். அலைக்கற்றை விவகாரத்தில் அரசுக்கு இழப்பு ஏதுமில்லை என்று முதன்முதலில் சொன்னவர் கபில் சிபல். இந்த அலைக்கற்றை ஒதுக்கீடுகள் பணத்துக்காக ஒதுக்கப்படவில்லை. சிறந்த நெட்வொர்க், அனைவருக்கும் தொலைத் தொடர்பு வசதி ஆகியவற்றை வைத்தே அரசு இதைச் செய்திருக்கிறது என்றார் கபில் சிபல். அதை அடிப்படையாக வைத்தே ஜூரோ லாஸ் என்ற வாதத்தை அவர் முன் வைத்தார். ஆனால் அரசாங்கத்தில் இருந்த யாரும் கபில் சிபல் ஏன் இப்படிச் சொல்கிறார் என்று அறிந்துகொள்ளவே இல்லை. யாரும் இதில் தலையிட விரும்பவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக