சனி, 2 ஜூன், 2018

ஸ்டெர்லைட்- அவுஸ்திரேலிய தாமிரத்தின் அமில கழிவுகளை கொட்டும் இடம்தான் தூத்துகுடி .. மிகப்பெரிய மோசடி!

மாலைமலர் :ஆஸ்திரேலியாவில் தோண்டி எடுத்து இந்தியாவில் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் தாமிரத்தாது பற்றி தெரிந்து கொள்வோமா? போராட்டம்... போராட்டம்... எதற்கெடுத்தாலும் போராட்டம்! இப்படியே போனால் நாட்டில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது.
இந்தியா குப்பை கிடங்காக மாற்றப்படுகிறதா? ஸ்டெர்லைட் விவகாரத்தில் புதைந்த ரகசியங்கள்இப்படி ஒவ்வொரு ஆலையாக மூடிக்கொண்டே வந்தால் வேலைக்கு எங்கே போவது?
வேலை கேட்டும் போராடுகிறோம். வேலை தரும் ஆலைகளும் வேண்டாம் என்கிறோம். இதற்கு என்னதான் தீர்வு? என்ற நியாயமான கேள்வி எல்லோரது மனதிலும் இருக்கிறது.
இந்த கேள்வி யதார்த்தமானதுதான்.
ஸ்டெர்லைட் வேண்டும் என்று நினைப்பது போல் வேண்டாம் என்று சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. அதில் புதைந்து கிடக்கும் ரகசியத்தை புரிந்து கொண்டால் நிச்சயம் வேண்டாம் என்றுதான் சொல்ல தோன்றும்.
எல்லோரும் நினைப்பது போல, ஸ்டெர்லைட் என்பது தாமிரம் உற்பத்தி செய்யும் ஆலை அல்ல.. அது தாமிர உருக்காலை.. உருக்காலை என்று சொல்வதைக் காட்டிலும், சுத்திகரிப்பு ஆலை என்றே சொல்வதுதான் சரியாக இருக்கும்.
அதாவது பூமியில் வெட்டியெடுக்கப்படும் தாமிரத் தாதுவிலிருந்து தாமிரத்தைத் தனியேப் பிரித்தெடுப்பதுதான் ஸ்டெர்லைட்டின் வேலை. நல்லதுதானே. இதில் நமக்கு என்ன நஷ்டம்? என்று தான் நினைக்க தோன்றும்.
ஏதோ ஒரு ஆலை. அதன் மூலம் மூவாயிரம் பேருக்கு வேலையும் கிடைக்கிறதே... இருந்துவிட்டுப் போகட்டுமே என்று தான் நினைப்போம்.


ஆனால் தாமிரத்தாது எங்கே தோண்டி எடுக்கப்படுகிறது தெரியுமா?

தமிழ்நாட்டிலோ இந்தியாவில் எந்த பகுதியிலுமோ அல்ல. ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் தோண்டி எடுக்கப்படுகிறது.

அங்கு தோண்டியெடுக்கப்படும் தாமிரத்தாது, பல்லாயிரம் மைல்கள் தாண்டி, தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டு உருக்கி, பிரித்தெடுக்கப்பட்டு தாமிரமாக மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கே கொண்டு போகப்படுகிறது.

தாமிரம் எங்கு வேண்டுமானாலும் போகட்டுமே நமக்கு வேலை கிடைக்கிறதல்லவா என்றே நினைப்போம். ஆனால் ஆஸ்திரேலியாவில் தோண்டி எடுக்கப்பட்டு, இங்கே கொண்டு வந்து அதை சுத்திகரித்து விட்டு, மீண்டும் அங்கேயே கொண்டு போய்விடுகின்றார்கள் என்றால், சுத்திகரிப்பதற்காக மட்டும் ஏன் இவ்ளோ தூரம் கொண்டு வர வேண்டும்? ஏனென்றால் அவர்கள் தேசத்தில் தாமிரத்தாதுவை சுத்திகரித்துப் பிரித்தெடுக்க தடை இருக்கிறது. அவர்களுக்குத் தெரியும்.. இதைப் பிரித்தெடுக்கும் பொழுது, நச்சு வெளிவந்து காற்றையும், மண்ணையும், நிலத்தடி நீரையும் பாழ் படுத்திவிடும் என்று இந்தியாவிற்குள் முதலில் அவர்கள் அணுகியது குஜராத்தைத்தான். உண்மையை புரிந்து அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

கர்நாடகா, மே.வங்கம், கோவா, கேரளா என்று ஒவ்வொரு மாநிலமாக சென்று அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. பிறகு, மஹாராஷ்டிரத்திற்குள் நுழைந்தார்கள். சரத்பவார் முதலில் அனுமதியளித்தார். ஆலை செயல்பட ஆரம்பித்ததும் ஒரே மாதத்தில் இதன் பாதிப்புகளை அறிந்து, ஆலையை இழுத்து மூடினார். அதன் பிறகு தான் அவர்கள் தமிழ்நாட்டை தேடி வந்தார்கள். நம்மவர்கள்தான் வந்தாரை வாழ வைப்பவர்களாயிற்றே! விரட்டுவார்களா? வாருங்கள் என்று வாரி அணைத்து கொண்டார்கள்.



சிப்காட்டில் ஸ்டெர்லைட்டிற்கு 1-8-1994 அன்று முதல்வராக இருந்த ஜெயலலிதா அனுமதி கொடுத்தார்.

ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்று தனியார் அமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆனால் 17.05.1995-ல் தமிழக அரசும், 22.05.1995ல் மாசுகட்டுப்பாட்டு வாரியமும் ஸ்டெர்லைட் செயல்பட அனுமதி கொடுத்தது.

அந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி முதன்முதலில் வழக்குத் தொடர்ந்தது வைகோ. அதனைத் தொடர்ந்து சி.ஐ.டி.யும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது. வழக்கு வழக்காக இருந்தது. 01.01.1997ல் ஆலை செயல்படத் தொடங்கியது.

வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 28-9-2010-ல் தடை விதித்தது.

அதற்கு கோர்ட்டு குறிப்பிட்ட காரணங்கள் ஸ்டெர்லைட் ஆலை சென்சிடிவ் ஏரியாவில் அமைந்திருக்கிறது.

அரசு விதிகளின்படி, ஆலையைச் சுற்றிலும் 250 மீ பரப்பளவில் பசுமை பெல்ட் ஏரியாவாக பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு அவ்விதம் பராமரிக்கப்படவில்லை.

50 கோடிக்கு மேல் முதலீட்டில் துவக்கப்படும் ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதற்கு முன்னால் பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும். அந்த மாதிரி கேட்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. ஆனால் அதற்குள் அரசு விதிகள் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சென்சிடிவ் ஏரியா 25 கி.மீ. என்பது 14.10.1996 அன்று ரத்து செய்யப்படுகிறது.

பசுமை பெல்ட் 250 மீ பரப்பாக இருக்க வேண்டும் என்பது 25 மீ பரப்பாக இருந்தால் போதும் என்று 18.08.1994 அன்று குறைத்து ஆணையிடப்படுகிறது. மக்கள் கருத்து கேட்கப்பட வேண்டும் என்பது 10.06.1997 லிருந்துதான் நடைமுறைக்கு வருகிறது. ஆனால் ஸ்டெர்லைட் 16.01.1995 அன்றே செயல்பாட்டிற்கு வந்து விட்டதால் ஸ்டெர்லைட்டிற்கு அந்த விதி பொருந்தாது என்றனர்.

சென்னை உயர்நீதி மன்றம்  எந்தக்காரணங்களுக்காக எல்லாம் ஸ்டெர்லைட் செயல்படக் கூடாது என்று முடிவு செய்ததோ, அந்தக் காரணங்கள் எல்லாம் ஒன்றுமில்லால் ஆக்கப்பட்டதால் உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்து, ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி கொடுத்தது.

ஆனாலும் சுப்ரீம் கோர்ட்டு ஸ்டெர்லைட்டிடமிருந்து 100 கோடி வசூலித்து 5 ஆண்டுகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நிரந்தர வைப்புத் தொகையில் வைத்து, அதன் வட்டித் தொகையை ஸ்டெர்லைட்டினால் பாதிக்கப்படுபவர்களின் நலத் திட்டங்களுக்காகப் பயன் படுத்திவர வேண்டும் என  உத்தரவிட்டது.

இதுதான் ஸ்டெர்லைட் கடந்து வந்த பாதை...

இப்பொழுதுதான் அரசே ஆலையை மூட அரசாணையைப் பிறப்பித்து விட்டதே என்றாலும் ஒரு ஆலையை மூட  வேண்டும் என்றால், அதற்கான நியாயமானக் கா ணங்களைத் தெரிவிக்க வேண்டும். அரசின்  காரணங்களுக்கு நியாயமான மாற்றுக் கருத்து ஆலையிடம் இருக்கிறதா என்பதற்கான விளக்கம் கோரப்பட்டிருக்க வேண்டும்.

இது  எதுவுமே செய்யப்படாமல் அவசர கதியில் பிறப்பிக்கப்படும் எந்த ஒரு உத்தரவும் செல்லத் தக்கதல்ல என்று  அறிவிக்கப்படவே வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் அமைச்சரவை கூடி, தாமிரத்தை சுத்திகரிப்பது ஆபத்தானது என அறிவித்துத் தமிழக எல்லைக்குள் அதைத் தடை செய்வதாகக் கொள்கை முடிவாக அறிவித்தால் மட்டுமே ஸ்டெர்லைட்டில் தொங்கும் பூட்டு நிரந்தரமாக தொங்கும். அல்லது உடைந்து போகும்.

இதில் தவறு இழைத்தது நீதான்.. நீதான்... என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்தால் காரியம் ஆகாது. ஆட்சியில் இருந்த அனைவருக்கும் இதில் பங்கு இருக்கிறது. அதே போல் செய்த தவறை மறைக்க முயற்சிக்காமல் தவறு செய்து விட்டோம் என்ற உண்மையை ஒத்துக்கொண்டு அடுத்து ஆக வேண்டியதை பாருங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக