சனி, 2 ஜூன், 2018

தமிழிசை :தூத்துக்குடியில் 13 பேரின் இழப்பு 1000 பேரின் இழப்பைத் தடுத்திருக்கிறது

tamilthehindu :தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரின் இறப்பு 1000 பேரின் இழப்பைத் தடுத்திருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து   கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை  சவுந்தரராஜன் பேசும்போது,  "தூத்துக்குடியில் நடந்த வன்முறை சூழலில் 1000 உயிர்களுக்கு மேல் பலியாகி இருந்திருக்க வேண்டியது. மிக கொடூரமான விஷயம் அங்கு நடந்து கொண்டிருந்தது. அங்கு 13 பேர் பலியானது மனதுக்கு வலிக்கிறது. எனினும்  இந்த 13 பேர் சுடப்பட்டது 1000 பேரின் உயிரிழப்பைத் தடுத்திருக்கிறது” என்றார்.
 தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே  காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு பின்னணியில் பாஜக இருப்பதாக கூறப்படுவது  குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஸ்டாலின், திருமாவளவன், கம்யூனிஸ்ட் என அவர்கள் அனைவரும் ஒரே கருத்தைக் கூறலாம். ஆனால் பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், ரஜினி ஒரே கருத்தை கூறினால் சொல்லிக் கொடுத்துப் பேசுகிறார்கள் என்பதா? தமிழக மக்கள் இதனை அளவுகோலாக பார்த்துக் கொள்ளட்டும்.

நீங்கள் தீவிரவாதிகள் இல்லை என்று கூறுகிறீர்கள். அதை நிரூபியுங்கள். நாங்கள் தீவிரவாதிகள் இருந்தார்கள் என்று கூறினோம். அதனை போலீஸார் நிரூபித்துள்ளனர்" எனக் கூறினார்.
மேலும் மருத்துவக் குழுவுடன்  மூன்று  நாட்கள் தங்கி தூத்துக்குடியில் களப்பணி ஆற்ற உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக