வியாழன், 7 ஜூன், 2018

காலா - அடுத்தடுத்த காட்சிகளில் வேகம் பிடிக்கும் ,, நேரடி நிலவரம் .

காலா டிக்கெட்: நேரடி ரிப்போர்ட்!மின்னம்பலம் : ரஜினி நடிப்பில் காலா திரைப்படம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் இன்று (ஜூன் 7) வெளியாகியுள்ளது. ரஜினி இதற்கு முன் ரஞ்சித் இயக்கத்தில் நடித்த கபாலி திரைப்படம் ஒரு சினிமாவாக எதிர்கொண்ட விமர்சனத்தைவிடவும் அதிக ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படுகிறது என்ற விமர்சனம்தான் அதிக அளவில் இருந்தது. எனவே, காலா படத்தின் டிக்கெட் கட்டணம் எப்படி உள்ளது எனத் தெரிந்துகொள்ள இன்று மின்னம்பலம் டீம் அடித்த விசிட்டின் நேரடி ரிப்போர்ட் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை சத்யம், பலாசோ, மாயாஜால் உள்ளிட்ட பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் 207 ரூபாய். சில திரையரங்குகளில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் டிக்கெட்டுகளை இந்தக் கட்டணத்தில் பெற்றுக்கொண்டு 500 ரூபாய் வரை விலை உயர்த்தி விற்கின்றனர். கபாலி திரைப்படத்திற்கு 1000 ரூபாய், 2000 ரூபாய் என்னும் விலையில் கவுண்டரிலேயே டிக்கெட்டுகளை விற்றது போன்ற சம்பவத்தைக் காலா படத்திற்குப் பார்க்க முடியவில்லை. காலைக் காட்சிகள் நிலவரப்படி ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தாலும் சில திரையரங்குகளில் சில சீட்டுகள் காலியாக உள்ளன.

ஈரோடு மகாராஜா மல்டிபிளக்ஸ் தியேட்டரில் டிக்கெட் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பொறியியல் கல்லூரி மாணவர் இன்ஃபேன்ட் ஃபெலிக்ஸ் என்பவரிடம் நாம் கேட்டபோது, “வழக்கமாக மற்ற படங்களுக்கு 150 ரூபாய் இங்கு வசூலிக்கப்படும். ஆனால் காலாவுக்கு 200 ரூபாய் டிக்கெட் வசூலிக்கிறார்கள். ஆனால், இதைவிட அதிகமாக எதிர்பார்த்தோம்” என்றவர், “அஜித், விஜய், படங்களின் முதல் நாள் கொண்டாட்டம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். அதை ஒப்பிடுகையில் கூட்டம் குறைவுதான்” என்று
கூறினார்.
கோவை, பொள்ளாச்சி
கோவையில் உள்ள திரையரங்குகளில் காலை நேரக் காட்சியில் 80 % பர்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். மாலை மற்றும் இரவு நேரக் காட்சிகள், சனி, ஞாயிறு காட்சிகள் முழுவதுமாக விற்றுள்ளன.
பொள்ளாச்சியில் காலை நேரக் காட்சியில் 60 % டிக்கெட்டுகளே விற்றுள்ளன. பொள்ளாச்சி ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் கேட்டபோது, “ரசிகர்களுக்காக மொத்தமாக டிக்கெட்டுகளை நாங்கள் வாங்கினாலும் தியேட்டர் கட்டணத்திற்கே விற்கிறோம். ஒரு ரூபாய்கூட கூட்டி விற்கவில்லை” என்று கூறினார். சில இடங்களில் 500 ரூபாய் வரை விற்கிறார்களே என்று சொன்னபோது, “ப்ளக்ஸ் பேனர், கட் அவுட் வைக்கக்கூடிய செலவுக்காக விற்றிருப்பார்கள்” என்று கூறினார்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன:
1. பல திரையரங்குகளில் 200 ரூபாய்க்கே டிக்கெட் விற்கப்படுகிறது.
2. கூட்டம் ரஜினி படத்துக்கான மலைக்கவைக்கும் கூட்டமாக இல்லை.
காலை நேரக் காட்சிகளில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு குறைவாக இருந்தாலும் படத்தைப் பற்றிய பாஸிடிவ் செய்திகள் வருவதால் அடுத்தடுத்த காட்சிகளில் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக