வியாழன், 7 ஜூன், 2018

தூத்துக்குடி மக்களின் வாக்குமூலங்கள்! மின்னம்பலம் .

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த மக்கள் விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை – பகுதி 2
கட்டுரையின் கடந்த பிரிவில் குறிப்பிட்டதுபோல, 144 தடையுத்தரவு போடப்பட்டிருப்பது பற்றிப் பேரணியில் பங்கெடுத்தவர்கள் பலருக்குத் தெரியவில்லை. அது சிறு பகுதியில் மட்டும் போடப்பட்டிருந்தது; மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை செல்ல மக்கள் அனுமதிக்கப்பட்டனர். பிரதான சாலையின் மறுபக்கம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரெதிரே கிராமங்களை நோக்கிச் செல்லும் சந்துகளில் மக்களின் சுதந்திரமான போக்குவரத்து காணப்பட்டது. போலீஸ் அவற்றில் தடுப்புகளைப் போடவோ அல்லது அந்தத் தெருக்களைக் கட்டுப்படுத்தவோ செய்யவில்லை. பிரதான சாலையைக் கிராமங்களுடன் இணைக்கும் இந்தச் சந்துகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கிச் செல்ல வழித்தடங்களாக அமைந்தன. சில இடங்களில் மட்டும் போடப்பட்டிருந்த தடைகளால் தடுக்கப்பட மக்கள் இந்த சந்துகளைப் பயன்படுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடைய முடிந்தது. வாக்குமூலங்கள்படி, பேரணிக்காக ஒதுக்கப்பட்டிருந்த எஸ்.ஏ.வி. பள்ளிக்கூட மைதானத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்களும் நிறுத்தப்பட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவர்களை நோக்கி திசைதிருப்பிவிடப்பட்டனர்.

பெண்களும் குழந்தைகளும்கூடப் பேரணியில் பெரும் எண்ணிக்கையில் பங்கெடுத்தனர் என்றும் அவர்கள் தங்களுடன் உணவு, படுக்கைகள் ஆகியவற்றையும் கொண்டுசென்றனர் என்றும் மக்களுடைய வாக்குமூலங்கள் காட்டுகின்றன. மக்கள் தங்கள் குறைகளைப் பற்றி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் நோக்கத்துடன் அமைதியாக நடத்திய ஆர்ப்பாட்டம் என்பதை இது காட்டுகிறது. ஏராளமான எண்ணிக்கையில் பெண்களும் குழந்தைகளும் இருந்தபோதிலும் போதிய எண்ணிக்கையில் பெண் போலீஸ்காரர்கள் போடப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
காவல் துறையினர் போதுமான அளவு இருந்தார்களா?
மக்கள் விசாரணைக் குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டபடி மொத்த போலீசார் எண்ணிக்கை 1900 மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எண்ணிக்கை 50,000. இத்தகைய பெரும் எண்ணிக்கையிலான ஆர்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசாரின் எண்ணிக்கை போதுமானதல்ல என்பது தெளிவு. பல போலீஸ் சரகங்கள் 144 தடையுத்தரவின் கீழ் வரவில்லை. எனவே சட்டப்படியும் சுதந்திரமாகவும் அணிவகுத்துச் செல்ல மக்களை அது அனுமதித்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நெருக்கமாக உள்ள சில கிராமங்களிலிருந்து அளிக்கப்பட வாக்குமூலங்கள் குறைந்த அளவு கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்பட்டது குறித்து தெரிவித்தன. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு முறையாக, நீர் பீய்ச்சியடிக்கும் பீரங்கி வண்டிகள் பயன்படுத்தப்பட்டன என்று ஒன்றுகூடத் தெரிவிக்கவில்லை. கலைந்து போகுமாறோ அல்லது ஒதுக்கப்பட்ட ஆர்பாட்டப் பகுதியான எஸ்.ஏ.வி. பள்ளிக்கூட மைதானத்துக்குச் செல்லும்படியோ பொது அறிவிப்பு செய்யப்பட்டது என்றோ அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டது என்றோ ஒரு வாக்குமூலம்கூட உறுதிசெய்யவில்லை.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தைச் சென்றடைந்தபோது அந்த வளாகத்தில் ஏற்கனவே சில வண்டிகள் பற்றி எரிந்துகொண்டிருந்தன என வாக்குமூலங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளை சட்டையும் காக்கி பேண்ட்டுகளையும் அணிந்துகொண்டு கற்களைத் தாங்கிச் சென்ற சில போலீஸ்காரர்கள் போராட்டக்காரர்கள் போல் காட்டிக்கொண்டு கற்களை வீசியெறிந்தனர் என்றும் அவர்களில் சிலர் ஆர்பாட்டக்காரர்களால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட பிறகு அந்த போலீஸ்காரர்கள் விரைவாக ஓடிவிட்டனர் என்றும் வாக்குமூலங்கள் தெரிவித்தன.
காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள்
பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் உள்பட தூத்துக்குடியில் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது என்பதை மக்களுடைய வாக்குமூலங்கள் உறுதிசெய்கின்றன. எந்த அளவுக்கு அவர்கள் காயமடைந்திருக்கின்றனர் என்பது பற்றி மக்கள் விசாரணைக் குழுவினரிடம் பல சாட்சிகள் தங்கள் மருத்துவ ரெக்கார்டுகளைக் காட்டினர் மற்றும் தங்கள் காயங்களைக்கூடக் காட்டினர். எடுத்துக்காட்டாக, பாதிக்கப்பட்ட ஒரு பெண் அவருடைய இல்லத்திற்கு மக்கள் விசாரணைக் குழு சென்றபோது அவர் துப்பாக்கி முனையால் தம் வயிற்றில் மோசமாக தாக்கப்பட்டது பற்றியும் அதனால் கடுமையான காயம் ஏற்பட்டது பற்றியும் சாட்சியமளித்தார்.
போலீசார் ஈவிரக்கமின்றி அடித்தது பற்றிப் பலர் சாட்சியமளித்தனர். போலியோ பாதிப்புக்குள்ளான ஒருவர் தன் உடல் ஊனத்தைப் பற்றி போலீசாரிடம் சொன்னதாகவும் கால் சரியில்லாத நீ போராட்டத்திற்கு வந்திருக்கக் கூடாது என்று சொல்லித் தனது கால்களிலேயே போலீசார் அடித்ததாகவும் சாட்சியமளித்தார்.
குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள்
பேரணியில் பங்கெடுத்த குழந்தைகள் போலீசாரால் ஈவிரக்கமின்றி அடிக்கப்பட்டதாகவும் பல குழந்தைகள் சட்ட விரோதமாகக் காவலில் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு இல்லங்களில் சோதனை நடத்தியபோதுகூடக் குழந்தைகளின்பால் இந்தக் காட்டுமிராண்டித்தனமான கொடுமைகள் தொடர்ந்தன. குழந்தைகளுக்கெதிரான இத்தகைய குற்றங்களும் அடக்குமுறைகளும் நடைபெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பினும் குழந்தைகளுக்கான மாநில கமிஷன் உடனடி நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் விசாரணைக் குழு குறிப்பிடுகிறது.
தேர்ந்தெடுத்து நிகழ்த்தப்பட்ட கொலைகள்
கலெக்டர் அலுவலகத்தில் திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். கொலைத்திறன் வாய்ந்த துப்பாக்கியேந்திய காவலர்கள் போலீஸ் வண்டிகளின் மீது ஏறியும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் மாடிகள் மீதிருந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சுட்டனர் என்று மக்களுடைய வாக்குமூலங்கள் கூறுகின்றன. ஊடகக் காட்சிகளும் இதை உறுதிசெய்கின்றன. கறுப்பு உடையணிந்திருந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தின் தலைவர்களாக இனம்காணப்பட்டுக் குறிப்பாக இலக்கிடப்பட்டனர் என்றும் சில வாக்குமூலங்கள் தெரிவிக்கின்றன.

எடுத்துக்காட்டாக, கலெக்டர் அலுவலகத்திலிருந்து 10--13 கிமீ தொலைவிலிருக்கும் வடக்கு போலீஸ் சரகத்தில் உள்ள 144 தடை உத்தரவு போடப்படாத தெரசாபுரத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டார். அவர் இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவர். ஆனால் மே 22 ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுக்கவில்லை. அவர் மீனைக் கொடுப்பதற்காக அருகிலிருந்த தன் மகள் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அவர் முகமே சிதைந்துபோகுமளவுக்கு அவர் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற கொலைகள் இந்திய உணவு கார்ப்பொரேஷன் ரவுண்டானாவிலும் மூன்றாம் மைலிலும் நிகழ்ந்தன.
மே 22இல் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கும் மக்கள் மீதான தாக்குதலுக்கும் பிறகு மக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையைச் சென்றடைந்தபோது போலீஸ் அங்கு வந்து காயமடைந்த பலரையும் அவர்களது குடும்பங்களையும் தாக்கினர் என்று பல சாட்சியங்கள் தெரிவித்தனர். இறந்தோரை அடையாளம் காட்டச் சவக் கிடங்குக்குச் சென்றுகொண்டிருந்த உறவினர்கள் மற்றும் மக்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தினர். அவ்வாறு காயமடைந்த 60 பேருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை நிகழ்த்த அரசு மருத்துவமனையில் ரூ.500 கேட்கப்பட்டது என்று குற்றம்சாட்டும் வாக்குமூலமும் மக்கள் விசாரணைக் குழுவால் பெறப்பட்டது.

நீதிமன்ற ஆணை, உடல்களை உறவினரிடம் ஒப்படைப்பதைத் தாமதப்படுத்தியது. இதனால் குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாயின. இறந்தவர்களின் மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டது என மக்கள் விசாரணைக் குழு தெரிவிக்கிறது.
108 ஆம்புலன்ஸ் சேவைகள் கிடைக்கவில்லை என்றும் வாக்குமூலங்கள் தெரிவித்தன. மக்கள் கூறியதன்படி, ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவக் கூடாது என 108 ஆம்புலன்ஸ் சேவையினருக்கு போலீஸ் கட்டளையிட்டனர் எனத் தெரிகிறது. அதனால் நலம்பள்ளி மற்றும் TMMK போன்ற தனியார் மருத்துவமனைகளிலிருந்து மக்கள் ஆம்புலன்ஸ் சேவையைப் பெற வேண்டியிருந்தது.
அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காயமடைந்தவர்கள் பலருக்கு சிகிச்சையளித்தனர் என்று வாக்குமூலங்கள் தெரிவித்தன. பார் அசோஸியேஷனுக்கு மிகவும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இலவச சட்ட உதவிச் சேவைகளை அளிப்பதிலும் பிடித்துவைக்கப்பட்ட மற்றும் கைதான நபர்களை விடுவிப்பதற்கு இரவு பகலாகப் பணிபுரிந்தார்கள்.
ஸ்டெர்லைட்டில் தாக்குதல்
ஸ்டெர்லைட் குடியிருப்பு மனைகளைத் தாக்கியதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. அந்தக் கட்டடத்தின் முன் பகுதியில் கார் பார்க்கிங் பகுதியிலும் கட்டடத்தின் அடித்தளப் பகுதியிலும் நிறுத்தப்பட்டிருந்த வண்டிகள் கொளுத்தப்பட்டிருப்பதையும் அக்குடியிருப்புக்குச் சென்று மக்கள் விசாரணைக் குழு கண்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த பிறகு சுமார் 200 பேர் இந்தக் குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்தனர் என்று அக்குடியிருப்பைச் சேர்ந்த இருவர் கூறினர். அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை ஏந்தியிருந்தனர் என்று அவர்கள் கூறினர். நிறுத்தப்பட்டிருந்த வண்டிகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசுவதற்கு முன்பு சிசிடிவி கேமராக்கள் அழிக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தனர் என்றும் அவர்களுடைய அடையாளத்தைத் தெரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கூடுதலாகத் தெரிவித்தனர். மொத்த வளாகத்திலுமிருக்கும் சிசிடிவி கேமராக்கள் அழிக்கப்பட்டன; ஆனால் வளாகத்தின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வண்டிகள் மீது மட்டுமே குண்டுகள் வீசப்பட்டுள்ளன என மக்கள் விசாரணைக் குழு கண்டது. பணியிலிருந்த காவலர்களும் போலீசாரும் காயமடைந்தனரா என்பதை வாக்குமூலங்கள் உறுதிசெய்ய முடியவில்லை.
தீயணைப்பு இலாகாவுடன் மக்கள் விசாரணைக் குழு ஆய்வு செய்ததில், பேரணியின்போது தீப்பற்றத் தொடங்கியவுடன் தீயணைப்புப் படை கண்ட்ரோல் ரூமுக்குத் தொலைபேசி அழைப்பு எதுவும் வரவில்லை என்றும் அவர்களுக்கு தகவல் வந்தபோது அனைத்தும் எரிந்து முடிந்துவிட்டன என்றும் கூறினர். அதே நாளில் பின்னர் ஸ்டெர்லைட் கம்பெனியில் தீ பற்றியபோது கண்ட்ரோல் ரூமுக்கு உடனடித் தகவல் வந்ததாகவும் அவர்கள் விரைந்து வந்து திறம்பட தீயை அணைத்தனர் என்றும் கூறப்பட்டது.

வடக்கு போலீஸ் நிலையத்திற்கு மக்கள் விசாரணைக் குழு சென்றபோது மே 22 அன்று பணியில் இல்லாத சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்கள் / விஷமிகள் போலீஸ் நிலையத்தைத் தாக்கினர் என்று கூறினார். ஆனால் அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்துக் கேட்டபோது அவரால் பாதிப்பை உறுதி செய்ய முடியவில்லை.
துப்பாக்கிச் சூட்டின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி 7.62 ஸெல்ப் லோடிங் ரகத்தைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டது. நிராயுதபாணியான மக்களுக்கு எதிராக இதைப் பயன்படுத்துவது உசிதமல்ல. கூட்டத்தைக் கட்டுப்படுத்த இதைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. SLRஐப் பயன்படுத்தியவர்களும் சாதாரண உடை அணிந்தவர்கள் என்றும் எனவே அவர்கள் போலீஸ்காரர்கள் என்று சொல்ல முடியாது என்றும் கூறப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் சாதாரண உடை அணிந்த போலீஸ்காரர்கள் ஈடுபடுத்தப்படக் கூடாது. அவர்கள் சீருடை அணிந்துகொண்டிருக்க வேண்டும், இல்லையேல் அவர்கள் விஷமிகள் என்றே கருதப்படுவர்.
பழிவாங்கும் நடவடிக்கை
வாக்குமூலங்கள் அனைத்திலும் பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சம் காணப்பட்டது. ஆரம்பத்தில், கைது செய்யப்படுவோமோ என அஞ்சி காயமடைந்தவர்களில் பலர் அரசு மருத்துவமனைக்குச் செல்லவில்லை. அங்கு அதிகமாக போலீஸ் போடப்பட்டிருந்ததால் அங்கு சென்றாலும் பலர் உடனடியாக வெளியேறிவிட்டனர். போலீஸ் நடவடிக்கை தொடர்ந்து நடந்ததால் காயமடைந்தவர்களில் சிலர் வெளியில் சென்றால் பழிவாங்கப்படுவோமோ என அஞ்சி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் பெறக்கூட விரும்பவில்லை. அங்கு சென்று தங்களுடைய பொருட்களை எடுத்துவரவோ அல்லது சவக் கிடங்குக்குச் செல்லவோ மக்கள் அஞ்சினர். போலீசார் தொடந்து துன்புறுத்திவருகின்றனர் என்றும் பல சட்டப் பிரிவுகளில் பெயர் குறிப்பிடப்படாத 2000 பேருக்கு எதிராக பொது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டிருப்பதால் தாமும் இவ்வழக்குகளில் சிக்கவைக்கப்படுவோமோ எனப் பீதியிலிருப்பதாக மக்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். யாரை வேண்டுமானாலும் உள்ளடக்கக்கூடிய தற்காலிக எஃப்.ஐ.ஆர்.கள் போலீசாரால் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும்.
(மே 22க்குப் பிறகு நடந்தது என்ன என்பதைக் கூறும் அறிக்கையின் நிறைவுப் பகுதி மாலை 7 மணிப் பதிப்பில்)
தமிழில்: பா.சிவராமன்
தூத்துக்குடியில் நடந்தது என்ன? பகுதி -1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக