திங்கள், 11 ஜூன், 2018

தமிழக இடதுசாரிகளின் வரலாற்று .... தவறுகள் அல்லது துரோகங்கள்

LR Jagadheesan : கம்யூனிஸ்டுகளைப்பார்த்து “தகரம் கண்டுபிடிப்பதற்கு முன்பே
உண்டியல் கண்டுபிடித்தவர்கள்” என தமிழ்நாட்டு சட்டமன்றத்திலேயே எகத்தாளம் பொங்க ஏகடியம் பேசியவர் முதல்வராக இருந்த ஜெ ஜெயலலிதா அம்மையார். அவர் சட்டமன்றத்தில் செய்ததை தமிழிசை தொலைக்காட்சி விவாதத்தில் செய்திருக்கிறார். தமிழக அரசியலில் ஆணவம், அராஜகம், கீழ்மை, வன்மம், வக்கிரங்களில் போயஸ்தோட்ட பெருமாட்டியை இதுவரை யாராலும் மிஞ்ச முடியவில்லை. இனியும் முடியாது.
ஆனால் காலத்தின் கோலம் அப்பேர்கொத்தவரை மீண்டும் மீண்டும் முதல்வராக்க தம் உடல், பொருள், ஆவி, அறிவு என அனைத்தையும் அர்ப்பணித்தவர்கள் இதே இடதுசாரிகள் என்பது தான் வரலாற்று நகைமுரண். குறிப்பாக 2001 ஆம் ஆண்டும் 2016 ஆம் ஆண்டும் ஜெயலலிதாவை முதல்வராக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்கள் செய்த உதவிக்கு அவர்கள் கற்பித்த காரணங்களின் பொய்முகமும் போலித்தனமும் (2001இல் மதசார்பற்ற அரசியல் 2016இல் ஊழல் எதிர்ப்பு) பின்னர் சந்தி சிரித்தன. 

ஆனால் இந்த இரண்டு தேர்தல்களில் இடதுசாரிகள் எடுத்த நிலைப்பாடு முதலில் தமிழக அரசியல் கலாச்சாரத்தை சீரழித்தது; 
பின்னர் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பொருளாதார முதுகெலும்பையே முறித்துவிட்டது. 


2001இல் மதவாத எதிர்ப்பு என்கிற பெயரில் நீதிமன்றங்களே தண்டித்த ஊழலை, அராஜகத்தை ஊக்குவித்து ஆதரித்து ஆட்சியில் அமர்த்தினர். 

2016இல் ஊழலை ஒழிப்பதாக கூறிக்கொண்டு இன்றைய மதவெறியை ஜாதிவெறியை தம்ழ்நாட்டின் ஆட்சியில் அமர்த்த உதவினர். 
தமிழ்நாட்டின் இடதுசாரிகள் செய்த தவறுகளிலேயே மன்னிக்கவே முடியாத மாபெரும் தவறுகள் அவை. ஒருவகையில் தமிழக மக்களுக்கு எதிரான குற்றங்கள் எனலாம். இன்றைக்கு ஐம்பதாயிரம் சிறுகுறு தொழில்கள் தமிழ்நாட்டில் மூடப்பட “தொழிற்சங்க தோழர்களின்” பங்களிப்பும் கணிசமானது. அவர்கள் உண்டியல் குலுக்கியதிலோ இனியும் குலுக்குவதிலோ எந்த அவமானமும் இல்லை. போயஸ்தோட்ட பெருமாட்டிக்கு 2001இலும் 2016இலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லக்கு தூக்கியது தான் நினைத்து நினைத்து வருந்தவேண்டிய அவமானம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக