புதன், 27 ஜூன், 2018

கலப்பு திருமண அபராதம் செலுத்தாததால் வீட்டுக்கு முள்வேலி!

கலப்பு திருமணம்: அபராதம் செலுத்தாததால்  வீட்டுக்கு முள்வேலி!மின்னம்பலம்: ஒசூர் அருகே கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு விதிக்கப்பட்ட ரூ.3 லட்சம் அபராதத் தொகையை செலுத்தாததால்,வீட்டைச் சுற்றி முள்வேலி போட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜோகிர்பாளையத்தை சேர்ந்த சந்துரு, என்பவர் அதே கிராமத்தை சேர்ந்த வேறு சாதியை சேர்ந்த தேவயானி என்ற பெண்ணைக் காதலித்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். கோவையில் வாழ்ந்து வருகின்ற இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
கலப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, பஞ்சாயத்து சார்பில், சந்துரு குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும், தேவயானி குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை சந்துரு குடும்பத்தால் குறித்த காலத்திற்குள் செலுத்த முடியவில்லை.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சந்துரு தனது குடும்பத்துடன் ஜோகிர்பாளையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, அபராதம் செலுத்தாததை கண்டித்து அவரது வீட்டைச் சுற்றி முள்வேலி போட்டது மட்டுமில்லாமல், குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முள்வேலிகளை அகற்றினர். மேலும், பஞ்சாயத்து செய்த ராகவன், சின்னராஜ், கோவிந்தன், செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக