புதன், 27 ஜூன், 2018

சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து!..

சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து!மின்னம்பலம்: சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 2016 ஆண்டு நடைபெற்ற சோதனையில் ரூ.33.6 கோடி மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. 100 கிலோவுக்கும் அதிகமாகத் தங்கமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோதமாகப் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தது.
மேலும், சேகர் ரெட்டியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகத் தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்குச் சொந்தமான இடங்களிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் முக்கிய அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாக சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ விசாரித்து வருகிறது.
ஆங்கில தொலைக்காட்சியான ‘டைம்ஸ் நவ்’ சேகர் ரெட்டியின் டைரியின் சில பக்கங்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில், சேகர் ரெட்டி மற்றும் தமிழக அமைச்சர்கள் பலருக்கும் உள்ள தொடர்பு குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன. எனினும், ” டைரி என்ற பெயரில் வெளியாகியுள்ள காகிதத்தில் இடம்பெற்றுள்ளது எனது கையெழுத்தே அல்ல. டைரி எழுதும் பழக்கம் எனக்கு இல்லை” என்று சேகர் ரெட்டி விளக்கமளித்தார்.
இதேபோல், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி சேகர் ரெட்டி தரப்பில் நாளிதழ்களில் ஒரு விளம்பரம் செய்யப்பட்டது. அதில், வருமானவரித் துறை சோதனையில் சேகர் ரெட்டி வீட்டில் இருந்து ரூ. 12 லட்சம் மட்டுமே கைப்பற்றப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், உண்மைக்குப் புறம்பாக செய்திகள் வெளியிடக்கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது” குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, வழக்கில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி சேகர் ரெட்டி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஒரே குற்றத்துக்காக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சேகர் ரெட்டி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,சேகர் ரெட்டி மீது போடப்பட்ட 3 வழக்குகளில் 2 வழக்குகளை ரத்து செய்து நீதிபதி பாஸ்கரன் உத்தரவிட்டார். அவரது நண்பர்கள் மீதான வழக்கையும் நீதிபதி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக