புதன், 27 ஜூன், 2018

டெல்லி – பெரும் சிக்கலின் தொடக்கம்.. அற்பத்தனங்களும் அச்சுறுத்தல்களும் ..

savukkuonline.com : அரசின் அதிகாரங்களின் வரம்பு மற்றும் அரசியல் அமைப்பு நெருக்கடி குறித்து,  டெல்லியில் நடத்தப்படும்  ஒரு சிறிய  நாடகம் அல்ல இது.  இது இந்திய ஜனநாயகம் மற்றும் அதன் அமைப்புகளுக்கான  ஒரு அச்சுறுத்தலாகும்.  அற்பத்தனங்களும், பழிவாங்கும் எண்ணமும் எப்படி எளிதாக, அரசியல் சட்ட அமைப்புகளை நிறுவனங்களை அழிக்க முடியும் என்பதை விளக்கும் நிகழ்வுகளாகும்.
இந்திய அரசியலில் புதிய கலாச்சாரத்தை டெல்லி நிறுவியுள்ளது.  அந்த சித்திரத்தை பாருங்கள்.  முன்னெப்போதும் இல்லாத ஒரு மிகப் பெரிய மக்கள் ஆதரவோடு ஒரு அரசு தேர்ந்தெடுக்கப்படுகிறது.  டெல்லியின் சிறப்பு அந்தஸ்தைப் பொறுத்தவரையில், துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு இடையில் அதிகாரங்களை ஒதுக்குவதில் தெளிவற்ற பகுதிகள் இருக்கலாம் என தாராளமாக கூறலாம்.
ஆனால், அந்த தெளிவற்ற பகுதிகள் எதுவாக இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் அதிகார ஒதுக்கீடு என்பது  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தைத் ஒடுக்கி, ஒரு சர்வாதிகார வைசிராய்போல துணைநிலை ஆளுநர் செயல்பட முடியும் என பொருள்படாது. ஆனால் துணை நிலை ஆளுநர் அதைத்தான் செய்துள்ளார்.

டெல்லி அரசியலமைப்பு குறித்த சித்திரத்தை தெளிவுபடுத்துவது தொடர்பான தீர்ப்பை தாமதப்படுத்துவதன்மூலம் உச்ச நீதிமன்றம் இன்னொரு அரசியலமைப்பு அழிவை அனுமதித்துள்ளது. நிறுவனங்களிலேயே மிகவும் தூய்மையானதான  தேர்தல் ஆணையம் இயற்கை நீதிகளை அழித்து ஆம் ஆத்மி கட்சியின் ஒரு கணிசமான எம்.எல்.ஏக்களை தகுதியிழப்புச் செய்து உத்தரவு பிறப்பிக்கிறது. அதை குடியரசுத் தலைவர் எந்தவித கேள்வியும் கேட்காமல் கையொப்பமிடுகிறார். அதிர்ஷ்டவசமாக, டெல்லி உயர் நீதிமன்றம் இந்த சித்து விளையாடை்டை ஊடுருவிப் பாரத்து நீதி நியாயத்தை மீட்டது.  ஆனால் தேர்தல் ஆணையம் போன்ற ஒரு தன்னிச்சையான அமைப்பு, இப்படி பாரபட்சமாக செயல்பட்டதற்காக யாரும் பொறுப்பாக்கப்படவில்லை.
நமது ஜனநாயகத்தில்  மிகவும் கடுமையான கண்காணிப்பு மற்றும் தடுப்பு ஏற்பாடுகள் ( checks and balances) கிட்டத்தட்ட தோல்வியடைந்துவிட்டன.  சில ஆம் ஆத்மி கடசி  எம்.எல்.ஏக்கள் தவறு செய்திருக்கலாம். ஆனால், சிபிஐ எனப்படும் மத்திய புலானய்வு நிறுவனமும் டெல்லி போலீஸும் பயன்படுத்தப்பட்டுள்ள முறைகைள பார்க்கும்போது, அவசரநிலைப் பிரகடனம் செய்ய வேண்டியதில்லை. அது இல்லாமலேயே எத்தகைய நெருக்கடிகளை உணர்த்த முடியும் என்பதற்கு இது ஒரு சான்று.
மானநஷ்ட வழக்குகள் தொடர்வதன் மூலம் டெல்லி முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வைக்கப்படுகிறார். சட்டபூர்வமான அமைப்புகள் அரசியல் உத்தரவுகளை ஏற்று நடக்கின்றன. அடுத்து, சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிகள் இதற்குள் வருகிறது. அதன் பிறகு நடந்த ஒரு சம்பவத்தில் தலைமைச் செயலாளர் தாக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவமே, அரசு அதிகாரிகளை அரசியல்வாதிகள் போல செயல்பட வைப்பதற்கான போலி காரணம் என்று  தோன்றுகிறது.
அதன்பின்னர், பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, இன்னும் ஒரு ஆழமான நெருக்கடி உருவாக்கப்படுகிறது. அதிகாரிகள் தாங்கள் வேலைநிறுத்தத்தில் இல்லை என்றும் ஆனால்  பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.  ஐஏஎஸ் அதன் கடமைகளை நிறைவேற்றவில்லை என்று தில்லி அரசு கூறுகிறது.  ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில்  இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் தங்கள் கடமைகளை செய்யவில்லை.   அதிகாரவர்க்கத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் இடையிலான உறவு முறிவு மற்றொரு சிக்கல்.   என்ன சூழ்நிலைகளாக இருந்தாலும், இது ஒரு தீர்க்கக்கூடிய பிரச்சனை.
இதற்கிடையில், துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் முதலமைச்சர் தர்ணாவில் ஈடுபடுகிறார். அவரது தரப்பு வாதம் கேட்கப்படவில்லை. அடுத்ததாக, ஒரு பெரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதை சரியாக  உணர்ந்து நான்கு மாநில முதல்வர்கள், இச்சிக்கலில் தலையிட்டு குரல் கொடுக்கிறார்கள்.
அரசியல் அமைப்புச் சட்டத்தாலும், மரபுகளாலும், பல ஆண்டுகளாக பேணிப் பாதுகாக்கப்பட்ட பல்வேறு அமைப்புகள் சிதைந்துள்ள இந்த  ஆழமான நெருக்கடி நம்மை அசைத்திருக்க வேண்டும்.  ஆனால், நாம் இதை இரு நபர்களுக்கிடையேயான மோதல் என்று குறைத்து மதிப்பிட்டு விட்டோம்.
ஏன் இப்படி என்பதை எளிதாக விளக்க முடியும்.  ஆம் ஆத்மி கட்சி, ஒரு அரசியல் கட்சியாகவும், கேஜ்ரிவால் ஒரு தலைவராகவும் ஏமாற்றம் அளித்துள்ளனர் என்ற உணர்வு உள்ளது.  அதன் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் செய்த தவறுகளின் காரணமாக, அரசியல் அமைப்பு பிறழ்வே நடந்தாலும், நாம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மறுக்கிறோம்.  எதற்கெடுத்தாலும் தர்ணா போராட்டங்கள் என்ற அக்கட்சியின் அணுகுமுறை மீது பலருக்கு வெறுப்பு இருக்கிறது.    இவை எல்லாம் சேர்ந்து நம்மை ஏறக்குறைய குருடாக்கி விட்டது.   கேஜ்ரிவால் தனது தார்மீகத்தை இழந்து விட்டார்.  கேஜ்ரிவாலுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு போராட்ட குணம் மிக்கவர், நல்ல அரசியல் தலைவராக அவரை பரிணமிக்க விடவில்லை.  இவையெல்ல்லாம், ஆம் ஆத்மி கட்சியும், கேஜ்ரிவாலும் செய்த தவறுகள் என்று ஒரு புறம் வைத்துக் கொண்டாலும், இதன் அடிப்படையில் மத்திய அரசு டெல்லி அரசு தொடர்பாக செய்து வரும் அராஜகங்களை கண்டிக்க மறுப்பது மாபெரும் பிழையாகும்.
ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் அளித்த மாபெரும் ஆதரவை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. செயல்பட விடாமல் நெருக்கும் ஒரு மத்திய அரசையும், ஆம் ஆத்மியை அழிக்க நினைக்கும் ஒரு பிரதான எதிர்க்கட்சியையும் தொடர்ந்து எதிர்கொண்டபோதிலும், ஒரு அரசாக, கல்வி உள்ளிட்ட சிலவற்றில் ஆம் ஆத்மி கட்சி வியத்தகு சாதனைகளை புரிந்துள்ளது.   அது ஒரு அரசியல் கட்சியாக செயல்பட்டதை விட, ஒரு அரசாக சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.  இது இன்றோ, நாளையோ மறைந்து போகும் கட்சி அல்ல.  இதன் காரணமாகவே, மத்திய அரசு, இதன் ஆட்சியை தடம் புரள வைக்க அதன் முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளது.
மத்திய அரசு, ஆம் ஆத்மி அரசுக்கு தொடர்ந்து நெருக்கடிகளை ஏற்படுத்த கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது.   காங்கிரஸும் இவ்விவகாரத்தில் சரியான நிலைபாடு எடுக்கவில்லை.   காங்கிரஸ் தனது கடுமையான தோல்வியை புறந்தள்ளி விட்டு, கொள்கைக்காகவும், அரசியல் அமைப்புகள் பாதுகாக்கப்படுவதற்காகவும், இந்த விவகாரத்தில் களமிறங்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
தவிர, 2019-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரசுக்கு பாஜகதான் நேரடி எதிரி.  ஆம் ஆத்மி கட்சி அல்ல. சில வழிகளில், அது அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களிருவரும் பிஜேபியை வீழ்த்துவதற்காக தங்களுடைய ஆழமான தனிப்பட்ட வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துள்ளனர்.
இரண்டாவதாக, இந்த நெருக்கடியின் அனைத்து அம்சங்களும் எளிதாக தீர்க்கப்படக்கூடியவை. ஆனால் ஒரு பழிவாங்கும் அணுகுமுறையை கையாள்வதால்,  மத்திய அரசாங்கம் இந்த அரசியல் நெருக்கடியை இன்னும் மோசமாக்க விரும்பியது என்பது தெளிவாகத் தெரிந்தது.
டெல்லியின் அதிகார வரம்புகளில் சிக்கல் இருந்தாலும் இத்தனை ஆண்டுகளாக இது ஒரு பெரும் சிக்கலாக உருவாகாமல் இருப்பதற்கு காரணம்,  அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளைப் போலவே நடந்து கொண்டார்கள். பரஸ்பர மரியாதை மற்றும் வரம்புகளை மனதில் வைத்து எல்லை மீற மாட்டார்கள்.  ஆனால் அத்தகைய நாகரீகங்கள் உடைந்து வருகின்றன.  ஜனநாயகம் இப்போது தனி நபர் மோதலாக மாறி விட்டது.  இந்தியாவில், சிக்கல்களை தீர்க்க கூட்டு நடவடிக்கைகள் எளிதாக இருந்தது கிடையாது.  அது இப்போது மேலும் சிக்கலாகி இருக்கிறது.
மூன்றாவதாக, டெல்லி உயர் நீதிமன்றத்தை தவிர, ஏறக்குறைய அனைத்து அமைப்புகளுமே மோசமாக பலவீனமடைந்து விட்டன.  உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், குடியரசுத் தலைவர் அலுவலகம் மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகள் உள்பட.    நம்மில் மிகச் சிறந்த பலர் (டெல்லி துணை நிலை ஆளுனர் போன்றவர்கள்) அரசியல் காரணங்களுக்காக தடம் மாறுகின்றனர்.
ஜனநாயகத்தில் அமைப்புகள்தான் முக்கியமானவை.
ஜனநாயகத்தில் நிறுவன வடிவமைப்பே விஷயமாகிறது. ஆனால் நாம் சில சமயங்களில் வடிவமைப்பில் அதிக நம்பிக்கை வைக்கிறோம். ஆனால், நல்லொழுக்கம் – குணம் என்கிற அதிக அசுரத்தனமான ஆனால் உண்மையான விஷயம் மீது போதுமான அளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே, நம்மில்  சிறந்த மற்றும் பிரகாசமான பலர் (உதாரணமாக டெல்லியின் லெப்டினல் கவர்னரை நினைத்துப் பாருங்கள்), அதிகாரத்தில் உள்ளவர்களுக்காக தங்களது நடுநிலையை இழக்கின்றனர். துணிச்சலாக, நேர்மையோடு நடுநிலை பிறழாமல் இருக்கும் நிர்வாகிகள் அருகி வருகின்றனர்.
டெல்லியின் விசித்திரமான  அதிகார முறை, டெல்லிக்கே பிரத்யேகமானது என்பதை வைத்து நாம் சற்றே ஆறுதல் அடைய முடியும்.   ஆனால் அதே நேரத்தில், அதிகார துஷ்பிரயோகம், பழிவாங்கும் உணர்ச்சி, நிறுவனங்களை சிதைப்பது, உயர் அதிகாரத்தில் உள்ளவர்களின் அற்பத்தனம் போன்ற விஷங்களை டெல்லியாலேயே தாங்க முடியாவிட்டால் வேறு எது தாங்க முடியும் ?
பிரதாப் பானு மேத்தா
நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக